யாழ் கச்சேரிக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்

யாழ். மாவட்டச்  செயலகத்துக்கு அண்மையில் ஞாயிற்றுக்கிழமை (28) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில்  வீதிக்கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தார் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அபயசிங்க (வயது 42) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வாகனங்களை மறித்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, சாவகச்சேரி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள், தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்து இவர் மீது மோதியுள்ளது.

இதில் தலையில் படுகாயங்களுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தரை மீட்ட அப்பகுதி மக்கள், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இவ் விபத்து தொடர்பில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்ற இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.