விக்கிக்கு காட்டமான கடிதத்தை அனுப்பினார் சம்பந்தன்

மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மூன்று நிபந்தனைகளின் அடிப்படியில் இந்த விடயம் முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என தெரிவித்து ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் பேரருட் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதமும் கிடைத்துள்ளது.

சட்டபூர்வமானதும் சுதந்திரமானதுமான எந்தவொரு விசாரணைக்கும் இடையூறு விளைவிக்க கூடாது என்பதனை குறித்த இரண்டு அமைச்சர்களுக்கும் நான் தெரியப்படுத்துவேன்.

நான் தற்போது தொலைபேசியில் வடமாகாண ஆளுநரை தொடர்பு கொண்டு குறித்த நம்பிக்கை இல்லா பிரேரணை வாபஸ் பெறப்படும் என தெரிவித்துள்ள அதே வேளை சம்பந்தப்பட்ட நபர்களோடு தொடர்பிலுள்ளேன்.

எல்லாம் நலமாகவே அமையட்டும். நாம் வெகுவிரைவில் சந்தித்தது பல பிரச்சினைகள் தொடர்பில் மேலதிகமான கலந்துரையாடலில் ஈடுபடஎதிர்பார்க்கிறேன்.” என எதிர்க்கட்சித் தலைவரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கில் ஏற்பட்டுள்ள சர்ச்சை நிலையை தீர்த்து வைப்பதற்காக வடமாகாண சமயத்தலைவர்கள் இன்று முயற்சிகளை மேற்கொண்டனர்.

நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோம சுந்தர பரமாச்சாரிய சுவாமி மற்றும் யாழ். ஆயர் ஆகியோர் இன்று காலை முதலமைச்சரையும் மாவை சேனாதி ராஜாவையும் சந்தித்திருந்தனர்.

இந்த சந்திப்பின் முடிவில், முதலமைச்சருக்கும், மாவை சேனாதிராஜாவிற்கும், சம்பந்தனுக்கும் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.

அக்கடிதத்தில்,

  1. குற்றம் சுமத்தப்படாத இரு அமைச்சர்களையும் பதவியில் நீடிக்கச்செய்ய வேண்டும்.
  2. விக்னேஸ்வரனை வடமாகாண முதலமைச்சராக தொடர்ந்து செயற்பட வேண்டும், அதற்கு சகலரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
  3. ஆளுநரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும்.

என்ற ஆலோசனைகள் அடங்கிய கடிதத்தை அனுப்பினார்கள்.

இதற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பதில் கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

முதலமைச்சரின் அக் கடிதத்தில்,

“அமைச்சர்கள் இருவரை கட்டாய விடுமுறையில் செல்லுமாறு விடுத்த நிபந்தனையை தொடர்ந்தும் வலியுறுத்தப் போவதில்லை எனவும், குறித்த யோசனைகளுக்கு இணக்கம் வெளியிட்டிருந்தார்.”

தொடர்ந்து முதலமைச்சருக்கும் சமயத் தலைவர்களுக்கும் சம்பந்தன் தனது கடிதத்தை அனுப்பி வைத்தார்.

நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோம சுந்தர பரமாச்சாரிய சுவாமி மற்றும் யாழ். ஆயர் ஆகியோருக்கு சம்பந்தன் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“உங்களால் முன்வைக்கப்பட்ட 3 பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்வதன் மூலம் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு ஒரு முடிவை கொண்டுவரலாம்.

முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனும் உங்களுடைய பரிந்துரைகளை ஏற்று எனக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். உங்களின் ஆலோசனைகளுக்கு நன்றி” என குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்தே வடமாகாண முதலமைச்சருக்கு சம்பந்தன் கடிதம் மூலம் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.