கிளிநொச்சியில் பதிவு செய்யப்படாத விடுதிகளில் தொடரும் குற்றச்செயல்கள்

கிளிநொச்சி நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் உள்ள பதிவு செய்யப்படாத விடுதிகளில் குற்றச்செயல்கள் இடம்பெற்று வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கிளிநொச்சி நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பல்வேறு தனியார் விடுதிகள் பதிவுகளுக்கு உட்படுத்தப்படாமல் இயங்கி வருகின்றன.

இவ்வாறு இயங்கி வருகின்ற விடுதிகளில் பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெற்று வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி நகரில் இவ்வாறான பல விடுதிகள் இயங்கி வருகின்றன என்றும், அதில் குறிப்பாக சில விடுதிகளில் பல்வேறு வகையான குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன.

குறிப்பாக கனகபுரம் வீதியில் இயங்கி வருகின்ற பதிவு செய்யப்படாத விடுதிகள் சிலவற்றில் தொழில் வாய்ப்புக்கள் பெற்றுத்தருவதாக கூறி, பின் தங்கிய கிராமங்களில் இருந்து யுவதிகளை அழைத்து வந்து பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரடிப்போக்குச்சந்தி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதி ஒன்றில் வைத்து அண்மையில் பதினைந்து வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.