முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் முயற்சி செய்யுமாயின் வடக்கு மாகாண சபையை முழுமையாக முடக்குவதற்கு இளைஞர் அணி தயாராக இருப்பதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழரசுக் கட்சி வடக்கின்  ஆளுநரிடம் கையளித்ததை வன்மையாகக் கண்டித்தும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தியும் நேற்று முன்தினம் வட மாகாணம் முழுவதிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன் அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணி திரண்டு முதலமைச்சர் விக் னேஸ்வரனுக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலும் தமிழரசுக் கட்சி புதிய முதலமைச்சரை தெரிவு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதான தகவலை அக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாரிய மக்கள் அணிதிரண்டு கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையை தொடர்ச்சியாக முடக்கவும் தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வட மாகாணத்துக்குச் செல்லும் இடமெங்கும் எதிர்ப்பு ஆர்ப் பாட்டங்களைத் தெரிவித்து சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அகிம்சை வழியில், ஜனநாயக முறையில், பாதுகாப்புச் சட்டங்களை அனுசரித்து நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் குறித்த இளைஞர் அணி மேற் கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது.