தமிழரசுக் கட்சிக்கும் பங்காளிக்கட்சிகளுக்குமிடையில் சமரசப் பேச்சுவார்த்தை இல்லை

வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரனுக்கு எதிராகத் தமிழரசுக் கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தமிழரசுக்கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்குமிடையே சமரசப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் மறுத்துள்ளார்.

இது தொடர்பில் சற்று முன்னர் தொடர்பு கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று கட்சித் தலைவர்களும் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து, வடமாகாணத்தில் தற்போது உருவாகியிருக்கும் நெருக்கடியான சூழல் தொடர்பில் பேசியிருக்கிறோம்.

ஆனால், வடமாகாண முதலமைச்சர் விடயம் தொடர்பாக நாங்கள் தமிழரசு கட்சியுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக வெளியான செய்திகள் உண்மைக்கு மாறானது.

இதேவேளை, வட மாகாண முதலமைச்சரை மாற்றுவது உறுதி என தமிழரசு கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் நேற்று கூறினார். இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பிய போது ,

முதலமைச்சரை மாற்றுவது உறுதி என்ற கருத்து சயந்தனுடைய கருத்தாகும். அது மட்டும் அல்லாமல் 15 மாகாண சபை உறுப்பினர்கள் விரும்பியவுடன் முதலமைச்சரை மாற்றிவிட முடியாது.

முதலமைச்சர் என்பவர் மக்களாளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று கட்சிகளின் பெருபான்மையை பெற்றும்வந்துள்ளார்.

விக்கினேஸ்வரனுக்கு மக்களின் ஆதரவும் அதிகமாக காணப்படுகின்றது. இது எல்லாவற்றையும் மீறி நடவடிக்கை எடுக்கப்படுமாக இருந்தால் அதற்கு பின்னால் வரும் பிரச்சினைகளுக்கு சயந்தன் போன்றோர் பொறுப்பு கூறவேண்டிய நிலை ஏற்படும் எனவும் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.