அரசியல் தெரியாத தமிழ் தலைமைகள்: முதல்வரை பதவி நீக்­க­ நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தேவையற்றது - டிலான்

வடக்கு  முத­ல­மைச் சர்  சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை பதவி நீக்­க­வேண்­டு­மாயின் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை அவ­சி­ய­மில்லை. நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை ஊடாக வடக்கு முதல்­வரை பதவி நீக்­க­மு­டி­யாது. ஆனால் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் பொதுச் செய­லாளர்  நினைத்தால் ஆளு­ந­ருக்கு கடிதம் எழுதி  முத­ல­மைச்­சரை மாற்­றலாம். அதுவே சட்­டத்தில் காணப்­படும் விட­ய­மாகும்.  இது­கூட தெரி­யாமல் இவர்கள்  அர­சியல் செய்­து­கொண்­டி­ருப்­பது  வியப்­ப­ளிக்­கின்­றது என்று   சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான  டிலான் பெரேரா தெரி­வித்தார்.

எந்­த­வொரு கட்சி மாகாண சபைத் தேர்­தலில்  50 வீதத்­துக்கும் அதி­க­மான உறுப்­பி­னர்­களை பெறு­கின்­றதோ அந்தக் கட்­சியின்  பொதுச் செய­லாளர் யாரு­டைய பெயரை பரிந்­து­ரைக்­கின்­றாரோ அவர் முத­ல­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­ப­டுவார். அவ்­வாறு  50 வீத உறுப்­பி­னர்­களை பெற்ற கட்சி நிய­மிக்கும்  முத­ல­மைச்­சரை நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மூலம் நீக்க முடி­யாது. கட்­சியின் செய­லாளர் மட்­டுமே அதனை செய்­யலாம்.  இதுதான் சட்டம் என்றும்  டிலான் பெரெரா சுட்­டிக்­காட்­டினார். 

வடக்கு  மாகாண சபையில் ஏற்­பட்­டுள்ள  நெருக்­கடி மற்றும்  நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை விவ­காரம் தொடர்பில்  விப­ரிக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

வடக்கு முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனை  பதவி விலக்­கு­வ­தற்கு நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை அவ­சி­ய­மற்­றது.    நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மூலம்   வடக்கு முதல்­வரை பதவி நீக்­கவும் முடி­யாது.  

மாகாண சபை சட்­டத்தின் ஊடாக  மாகாண சபைத் தேர்­தலில் எந்­த­வொரு கட்சி மாகாண சபைத் தேர்­தலில்  50 வீதத்­துக்கும் அதி­க­மான உறுப்­பி­னர்­களை பெறு­கின்­றதோ அந்தக் கட்­சியின்  பொதுச் செய­லாளர் யாரு­டைய பெயரை பரிந்­து­ரைக்­கின்­றாரோ அவர் முத­ல­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­ப­டுவார். பொதுச் செய­லாளர்  பரிந்­துரை செய்யும் உறுப்­பி­னரை  ஆளுநர்  முத­ல­மைச்­ச­ராக  நிய­மிக்­க­வேண்டும்.  

அவ்­வாறு  50 வீத உறுப்­பி­னர்­களை பெற்றகட்சி நிய­மிக்கும்  முத­ல­மைச்­சரை நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மூலம் நீக்க முடி­யாது. இதுதான் மாகாண சபை சட்­ட­மாகும். இது தெரி­யாமல் ஆளு­நரும்    அர­சி­யல்­வா­தி­களும் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றமை  வியப்­ப­ளிக்­கின்­றது. 

இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் பொதுச் செய­லாளர்  நினைத்தால் ஆளு­ந­ருக்கு கடிதம் எழுதி வடக்கு  முத­ல­மைச்­சரை மாற்­றலாம். அதுவே சட்­டத்தில் காணப்­படும் விட­ய­மாகும். கட்­சியின் பொதுச் செய­லாளர் அறி­வித்தால் அதனை   ஆளுநர் ஏற்­றா­க­வேண்டும். ஆனால் கிழக்கு மாகாண சபையில் இதனை செய்ய முடி­யாது. காரணம் அங்கு எந்­த­வொரு கட்­சியும்  50 வீத­மான உறுப்­பி­னர்­களை பெற்று முத­ல­மைச்­சரை நிய­மித்து  ஆட்­சி­ய­மைக்­க­வில்லை. எனவே இங்கு நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை செல்­லு­ப­டி­யாகும். 

எனினும்  வடக்கு உள்­ளிட்ட ஏனைய எட்டு மாகாண சபை­க­ளிலும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மூலம் முத­லமைச்­சரை பதவி நீக்க முடி­யாது. வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு  மாகாண சபை­க­ளிலும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லாளர் மஹிந்த அம­ர­வீர நினைத்தால் முத­ல­மைச்­சர்­களை மாற்­றலாம். மாறாக  நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மூலம்   முத­ல­மைச்­சர்­களை மாற்ற முடி­யாது. இது தெரி­யாமல் வடக்கின் அர­சி­யல்­வா­திகள் என்ன செய்­கின்­றனர்  என்று தெரியவில்லை.  மேலும்  வடக்கு ஆளுநர்  ரெஜினோல்ட் குரேவுக்கும் இந்த விடயம் தெரியவில்லை என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது என்றார். 

கேள்வி: பிரபல சட்டத்தரணியான சுமந்திரனுக்கும் இந்த விடயம் தெரியாமல் இருக் குமா? 

பதில்:அவருக்கு நிச்சயமாக தெரியும். ஆனால் என்ன நடக்கின்றது என்று பார்ப் பதற்காக மௌனமாக இருக்கின்றார்.