பலாலி விமான நிலைய அபிவிருத்தி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது: டக்ளஸ்

பலாலி விமான நிலைய அபிவிருத்தியின் போது எமது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களுக்கோ, கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களுக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் இத் திட்டம் முன்னெடுக்கப்படுவது அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாயகம் டக்ளஸ் தேவாதனந்தா  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்தகால ஆட்சியின்போது இத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் எம்மால் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கு இந்திய அரசின் உதவியும் வழங்கப்படுவதாக உறுதி செய்யப்பட்டிருந்தது.

எனினும், எமது மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் உரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் வரையில் இத் திட்டத்தை தாமதப்படுத்த வேண்டிய நிலை எமக்கேற்பட்டது. இந்த நிலையில், இத் திட்டம் பற்றி இப்போது மீண்டும் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் எமது பகுதியில் முன்னெடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது. எனினும், அவை எமது மக்களின் வாழ்விடங்களுக்கோ, வாழ்வாதாரங்களுக்கோ பாதிப்பாக அமைந்துவிடக் கூடாது.

இது தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறை கொண்டு செயற்பட வேண்டும்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி போன்றே, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின்போதும் மேற்குறிப்பிட்ட விடயங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.