வட, கிழக்கு மக்களின் கவலைகள் குறித்து கவனம் செலுத்தப்படும்: பிரதமர் ரணில்

வடக்கு கிழக்குப் பகுதி மக்களின் கவலைகள் குறித்து அக்கறை செலுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கின்றார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற தேசிய பொங்கல்தின நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, முதலமைச்சர் விக்னேஸ்வரனால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

வடபகுதியில் அதிகளவு இராணுவம் நிலைநிறுத்தப்பட்டிருப்பதாக முதலமைச்சரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பிரதமர், அது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகத் தெரிவித்தார். “வடக்கில் இப்போது சட்டரீதியான இராணுவம் மட்டும்தான் உள்ளது. மேலதிகமாகவுள்ள இராணுவத்தை வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்து இராணுவத் தலைமையுடன் ஆராய்கிறோம். இராணுவத்தில் கணிசமான தொகையினர் ஓய்வுபெறவுள்ளார்கள். அதனால் இந்தப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட்டுவிடும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“வடபகுதியில் கடற்றொழிலாளர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்கள். அவர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வைக் காணும் வரையில் கடற்படையினர் அங்கு நிலைகொண்டிருக்க வேண்டிய தேவை உள்ளது” எனவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் குறிப்பிட்ட பிரதமர், “இது காலாவதியாகிப்போன ஒரு சட்டமூலம். இது அகற்றப்பட வேண்டும். இப்போது உள்நாட்டில் பயங்கரவாதப் பிரச்சினை இல்லை. சர்வதேச பயங்கரவாதத்தையே எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனை எதிர்கொள்வதற்கான சில சட்ட ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது. அதனைச் செய்தவுடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டுவிடும்” எனத் தெரிவித்தார்.

தடுப்க்காவலிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத்துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு உரையாற்றிய பிரதர் தெரிவித்தார்.