ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்தார் நியூசிலாந்து பிரதமர் – நல்லிணக்க முயற்சிகளுக்கு பாராட்டு

நான்கு நாள் அதிகாரபூர்வ பயணமாக சிறிலங்கா வந்துள்ள நியூசி்லாந்து பிரதமர் ஜோன் கீ, இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இன்று அதிகாலை 12.02 மணியளவில், சிறிலங்காவை வந்தடைந்த, நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயை, கட்டுநாயக்க விமான நிலையத்தில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர்களும் வரவேற்றனர்.

இதையடுத்து, இன்று காலை நியூசிலாந்து பிரதமருக்கு, சிறிலங்கா அதிபர் செயலகத்தில் அரச மரியாதை அளிக்கப்பட்டது.

கடற்படையின் அணிவகுப்பு மரியாதையை அடுத்து, சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இருநாடுகளின் தலைவர்களும் தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

அதையடுத்து, இரண்டு நாடுகளினதும், பிரதிநிதிகள் குழுக்களுடன் இணைந்து நியூசிலாந்து பிரதமரும், சிறிலங்கா அதிபரும் பேச்சுக்களை நடத்தினர்.

இந்த இருதரப்பு பேச்சுக்களில், கால்நடை அபிவிருத்தி, கல்வி, தகவல்தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்துப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. அத்துடன் சில புரிந்துணர்வு உடன்பாடுகளும் கையெழுத்திடப்பட்டன.

இந்த பேச்சுக்களின் பின்னர், கூட்டாக செய்தியாளர்கள் முன்னிலையில் உரையாற்றிய நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ, ஊழல் ஒழிப்பு மற்றும் நல்லிணக்கம் ஆகிய சவால்மிக்க பணிகளில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன காத்திரமான பணிகளை ஆற்றுவதாக குறிப்பிட்டார்.

சிறிலங்கா அதிபரின் நல்லிணக்க முயற்சிகளுக்கு நியூசிலாந்து பக்கபலமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறிலங்காவில் நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ளதை தான் காண முடிவதாகவும், சிறிலங்காவுடனான உறவுகளை மேலும் விரிவாக்கிக் கொள்ள விரும்புவதாகவும், நியூசிலாந்து பிரதமர் கூறினார்.