இந்தக் கொடுமை எப்போது தீரும்!! காமுகர்களுக்கு பலியாகுவது தொடர்கதையாகுமா?

வவுனியா மாணவி கங்காதரன் ஹரிஸ்ணவி  கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி மீளவும் ஒருபெரும் அதிர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையால் இந்த நாடே கலங்கிப் போயிருந்தது.

மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என மக்கள் திரண்டெழுந்து ஆர்ப்பாட்டம்  செய்தனர்.

ஒரு மாணவிக்கு நடந்த கொடுமை கண்டு மக்கள் சமூகம் விழித்தெழுந்த வரலாறு வித்தியாவின் மரணத்தின்போதுதான் நம் மண்ணில் பதிவாகிக் கொண்டது எனலாம்.

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடு! என்ற கோ­ம் இந்த நாட்டை அதிர வைத்தது. எந்த அமைப்பும் பின்னணியில் இல்லை என்று கூறும் அளவில் பொதுமக்கள், இளைஞர்கள் தாமாகவே ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் இலங்கை முழுவதிலும் இன, மத, மொழி என்ற வேறுபாடு இன்றி முன் னெடுக்கப்பட்டது.

எனினும், ஆர்ப்பாட்டத்தைக் குழப்பி இத்தகையதோர் ஆர்ப்பாட்டம் இனிமேல் யாழ்ப்பாணத்தில் நடக்கக்கூடாது எனத் திட்டமிட்ட சில தீய சக்திகள், யாழ்ப்பாண நீதிமன்றத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

ஒரு மாணவிக்கு நடந்த அவலம் கண்டு கொதித்தெழுந்த மக்களின் உணர்வுகளை எரியூட்டி சாம் பலாக்குவதாக நீதிமன்றத் தாக்குதல் அமைந்து போனது.

தாக்குதலில் சம்பந்தப்படாதவர்களும் கைதாகும் அவலம் நடந்தேறியது. நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைதாகி விளக்கம் விசாரணை என்பதற்கு உட்பட்டபோது,

மாணவி வித்தியாவுக்காக ஒலித்த குரல்களு க்கு எந்தவித பலனும் கிடைக்காமல் போகும் அளவில் நிலைமை மாறிற்று.

இதன் விளைவுதான் வவுனியாவில் மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலையாகும். மாணவி வித்தியாவுக்கு நடந்த கொடுமை கண்டு மக்கள் சமூகம் திரண்டெழுந்த போதிலும் குற்றவாளிகளுக்கான தண்டனை என்ன? எப்போது? என்பது தெரியாததன் காரணமாக பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம், குற்றம் செய்தவர்களுக்கு எந்த வகையிலும் பாதகமாக அமையாது என்ற செய்தியை மாபாவம் செய்யும் பாதகர்களுக்கு உறுதிப்படுத்தியது.

இஃது சட்டம், நீதி, மக்கள் சமூகம் என எவற்றுக்கும் பயம் கொள்ளத்தேவையில்லை என்ற துணிச்சலை சமூக விரோதிகளுக்குக் கொடுத்து விட மாணவி வித்தியா, ஹரிஸ்ணவி என கொலைப் பட்டியல் நீள்கிறது.

மாணவி வித்தியாவின் மரணத்தின் போது இன்று மாணவி வித்தியா? நாளை யார்? என்ற கோ­த்துடன் பதாகைகள் தாங்கிய மக்கள் பேரணி  எழுச்சியுற்ற போது, மாணவி வித்தியாவின் மரணம் எங்கள் பெண் பிள்ளைகளுக்குப் பூரண பாதுகாப்பை வழங்கப்போகிறது என்று நம்பினோம்.

ஆனால் அடுத்தது யார் என்ற கேள்விக்கு மாணவி ஹரிஸ்ணவி என்பதே பதில் என்று யாரும் நினைத்திருக்கவில்லை.

என்ன செய்வது? எங்களுக்கான பாதுகாப்பு எங்களின் கைகளில் இல்லை  என்பதே  நியதியானால்... என்று தணியும் இந்தக் கொடுமையின் மோகம் என்று முணுமுணுப்பதைத் தவிர வேறுஎன்ன செய்வது?