யாழ்ப்பாண கடலுக்குள் விடிகாலையில் சென்ற கடல் விவசாயிகள்!! நடந்தது என்ன? (video)

அண்டைக்கு விடியக்காலத்தால 4 மணிக்கே எழும்பிட்டன். மற்றநேரங்களில் மனிசி எழும்பி வீடுவாசல் கூட்டி முடிக்கும் வரை கள்ள நித்திரை கொள்ளுறது வழமை.

 

ஆனால் இப்ப அதுவும் கொடுமையான நித்திரையாத்தான் இருக்குது. கடைசி மகன் அரைத் துாக்கத்தில எனக்கு மேல ஏறிப் படுத்து தன்ர காலைக்கடனை எனக்கு மேலேயே முடிச்சுடுவான்.... அதால அவன் அரைத் துாக்கத்துக்கு வாறதுக்கு முன்னமே எழும்பிடுவன். நல்லுார் திருவிழாவுக்கு பிரதட்டை அடிப்பதுக்கு அதிகாலை 3.30 மணிக்கு எழும்புறதுதான் என்ர சாதனையா இருந்திருக்கு.

அண்டைக்கு 4 மணிக்கு எழும்பினது என்னத்துக்கென்டால் என்ர நண்பனுடன் கடலுக்கு சென்று மீன் பிடிக்கிறது பாக்கத்தான். சின்ன வயசில இருந்து வந்த ஆசை அது. அண்டைக்கு நிறைவேறப் போகுது என்டு ஒரு சந்தோசம்.

என்ர நண்பனைப் பற்றி கொஞ்சம் உண்மையைச் சொல்லி புகழத்தான் வேணும். ஆள் ஓல்றவுண்டன்... ஆய கலைகளில என்னிலும் விட கூடத் தெரிஞ்சவன்... நாவாந்துறை உதைபந்தாட்ட ரீமில பொறுப்பா இருந்தவன். அதோட உதைபந்தாட்ட நடுவராகவும் இருக்கிறான். நடிப்பு, நாடகத்தில விண்ணன். அதோட அரசாங்க உத்தியோகம். பகுதி நேரமா கடலுக்குள்ளும் இறங்கி தொழில் செய்பவன். தன்ர தம்பி, மச்சான், தகப்பன் என தனது உறவுகுள் எல்லாருடனும் கூட்டுச் சேர்ந்து கடல்தொழில் செய்பவன்.

நான் ஆசையா கேட்டவுடன கடலுக்கு தன்னோட கொண்டு சென்று இலவசமா இறால், நண்டு என பல கிலோ கடலுணவும் தந்துவிட்டவன். (அதாலதான் இவன் புகழுறான் என்டு நினைக்காதேங்கோ )

விடியக்காலத்தா சரியா 5 மணிக்கு நாவாந்துறை இறங்குதுறைக்குப் பக்கதில போய் நின்டுட்டன். கடல் காத்து உடம்பில பட்டு சில்லிட்டது இந்த வெக்கை நேரத்தில சுப்பறா இருந்திச்சு. விடியக்காலத்தால சனம் எழும்ப முதல் எழும்பி உலாத்திறதில ஒரு தனி சுகம் இருக்கிறது உண்மைதான். இறங்கு துறைக்கு அருகில் உள்ள நாவாந்துறை சந்தைக்கு பக்கத்தில நண்பனும் அவனது மச்சானும் நின்றார்கள்.

அங்குள்ள அபிசா கபேயில தேத்தண்ணி குடிச்சுட்டு இறங்குவம் என்டு சொல்லி அங்க போய் தேத்தண்ணி குடிப்பு நடந்தது. கடல் தொழில் செய்யிறவங்களுக்காக அங்க அந்த நேரத்தில அந்த கடை திறந்திருக்கு. ( நான் நினைக்கிறன் புங்குடுதீவாரிட கடையா இருக்கும் என்டு. ஏனென்டால் நிலவில ஆம்ஸ்ரோங் கால் அடி வைச்ச போத அங்க ஒரு புங்குடுதீவு ஆள் தேத்தண்ணி குடிக்கிறீங்களோ!! என்டு கேட்டவராம்........ நான் அவையைக் கேவலமா சொல்லேல.... தொழில் முயற்சி கூடின ஆக்கள் புங்குடுதீவு ஆக்கள் என்டு சொல்லுறவை. சண்டைக்கு வர வேண்டாம்.)


அபிசா தேனீர்க்கடை

அபிசா தேனீர்க்கடை

விடிய எழும்பி தனக்கு முன்னர் கடலுக்குள் நிற்பவர்களைப் பார்த்து வெக்கப்படுகிறார் சூரியன்

விடிய எழும்பி தனக்கு முன்னர் கடலுக்குள் நிற்பவர்களைப் பார்த்து வெக்கப்படுகிறார் சூரியன்

சூரியனைச் சோம்பேறியாக்கி அதிகாலையில் அறுவடைக்கு விரையும் கடல் விவசாயிகள்

சூரியனைச் சோம்பேறியாக்கி அதிகாலையில் அறுவடைக்கு விரையும் கடல் விவசாயிகள்

நெற்றி வியர்வை கடலில் சிந்த உழைப்பின் பெருமை...

நெற்றி வியர்வை கடலில் சிந்த உழைப்பின் பெருமை...

தோணி பாய்ந்து செல்லும் போது என்னில் கடல் நீர் படாது நண்பன் மறைத்தபடி கடலை எதிர்த்து நின்றான்!! (நண்பேன்டா!!). எனது ஐ6பிளஸ் போனில (தற்பெருமை) காட்சிகளை கவர் பண்ண தொடங்கினன்.....

கடலுக்குள்ள போகேக்க முதல் நாள் தங்களது அயல் மீன்பிடிக் கிராமம் ஒன்றின் உதை பந்தாட்ட அணி வீரர்களின் தோல்வி பற்றியும்  உதை பந்தாட்டத்தில் நடந்த சம்பவங்கள் பற்றியும்  கதைத்துக் கொண்டு வந்தார்கள் மச்சானும் மச்சானும். பக்கத்து கிராமத்தோட இவர்கள் உதைபந்தாட்ட விளையாட்டால் தொடர்ந்து முரண்பட்டுக் கொள்பவர்கள். முட்டி மோதிக் கொள்பவர்கள். இவர்களது அணியினர் குறித்த ஒரு விளையாட்டு அணியிடம் கடந்த சில நாட்களுக்கு முன் தோற்ற போது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விசிலடித்து கொண்டாடியுள்ளார்கள்.

முதல்நாள் நடந்த உதைபந்தாட்ட போட்டி பற்றி சிறப்பு வர்ணனை நடக்கின்றது.

முதல்நாள் நடந்த உதைபந்தாட்ட போட்டி பற்றி சிறப்பு வர்ணனை நடக்கின்றது.

அதே நிலை அவர்களுக்கும் வந்ததை நினைத்து இருவரும் அது தொடர்பான விமர்சனங்களை கதைத்துக் கொண்டு வந்தார்கள். இதே வேளை இன்னொரு இஞ்சின் பொருத்திய தோணி எமது தோணிக்கருகில் சீறிக் கொண்டு வந்தது. அதில் இருந்தவர்களும் குறித்த உதைபந்தாட்டம் பற்றியே கதைத்துக் கொண்டிருந்தார்கள். விட்டால் கடலுக்குள்ளேயே உதை பந்தாட்ட நேரடி வர்ணனை நடத்த கூடிய நிலையில் அவர்கள் இருந்தார்கள். அந்த அளவுக்கு இவர்கள் உதைபந்தாட்ட விளையாட்டில் ஊறியவர்கள்.

நண்பனின் கிராமத்தில் உள்ளவர்கள் எல்லோரும் ஒன்றுக்குள் ஒன்றானவர்கள். உறவினர்கள்... எப்படிப் பார்த்தாலும் துாரத்து முறையிலாவது உறவு இருக்கும் அவர்களுக்குள்.

கடலுக்கு நடுவில் இவர்களின் பாடு பார்த்து விரைந்தது தோணி. பாடு என்றால் என்ன விளக்கம் எனின்

மற்றொரு பாடுவில் இறால் அறுவடை செய்யும் விவசாயிகள்

மற்றொரு பாடுவில் இறால் அறுவடை செய்யும் விவசாயிகள்

இவர்களுக்கும் கடலுக்கு நடுவில் சில இடங்கள் சொந்தமாக இருக்கும். அங்கேயே இவர்கள் தொழில் செய்யலாம். எங்கட விவசாயக் காணிகள் போல்தான். ஆனால் உறுதி இவர்களிடம் இல்லை. இவர்கள் கம்பு குத்தி வலை போட்டு இறால் கூடு வைத்து தொழில் செய்வது இவர்களுக்கு உரிய இடத்தில் மட்டுமே. இவர்கள் அந்த இடத்தில் கம்பு குத்தி வலை பாய்ந்து இறால் பிடிப்பார்கள். ஒவ்வொரு பூரணை நாளில் இருந்து அமாவாசை வரை இறால் பிடி அதிகமாக இருக்குமாம். ஏனெனில் அந்த நாட்களில் இறால்கள் கடலுக்கு அடியில் இருந்து நீர் மட்டத்துக்கு வந்து செல்வதால் வலையில் அதிகமாக பிடிபடுவது வழமையாகும். இவ்வாறே ஏனைய கடலுணவுகளும் குறிப்பிட்ட சில பருவங்களிலேயே அதிகமாக பிடிக்கப்படுகின்றன. அதன் பின்னர் அமாவாசை நாள் முடிந்த பின்னர் இறால் பிடிபடுவது குறைந்துவிடும். அதனால் அவர்கள் அவ்வாறான நேரத்தில் தமது வலைகளை துப்பரவு செய்து கம்புகளை இடுங்கி காய வைத்து வலைகளில் ஏற்படும் ஓட்டைகளை பொத்தியும் அதில் சிக்கியுள்ள கடற் தாவரங்களை துப்பரவு செய்து காய வைத்த பின்னர் மீண்டும் கடலுக்கு நடுவில் தமது பாடுகளில் கம்புகள் குத்தி இறால் பிடிக்கின்றனர்.

கடல் விவசாயியின் உடம்பை ஆக்கிரமிப்பது தொடர்பாக உப்பு நீரும் வியர்வையும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு சண்டை பிடிக்கின்றது

கடல் விவசாயியின் உடம்பை ஆக்கிரமிப்பது தொடர்பாக உப்பு நீரும் வியர்வையும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு சண்டை பிடிக்கின்றது

குறித்த பாடுகளில் கம்பு குத்தி இறால் பிடிக்காது இவர்கள் தொடர்ச்சியாக 21 நாட்கள் விட்டால் அந்த இடத்தை இன்னொருவர் பிடித்துவிடுவார். அவ்வாறு அவர் அந்த இடத்தைப் பிடித்தால் மீண்டும் இவர்களது பாடு இல்லாது போய் விடும். இது எழுதப்படாத சட்டமாக உள்ளது. அத்துடன் ஒவ்வொரு பாடுகளுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க துாரம் மற்றும் பாடுகளுக்கு இடைஞ்சலாக இன்னொருவர் தனது வலைகளை போட்டு தொழில் செய்ய முடியாது. இவ்வாறானவற்றை அவதானிப்பதற்கும் நெறிப்படுத்துவதற்கும் அவர்கள் தமக்காக தொழிற்சங்கங்களை உருவாக்கி செயற்படுகின்றனர். சங்கத்தின் அங்கத்தவர்களாக மீன்பிடியில் உள்ளவர்கள் அனைவரும் உள்ளார்கள். இவர்களுக்கு இடையில் ஏதாவது முரண்பாடுகள் ஏற்பட்டால் அதை தீர்ப்பது சங்கங்களின் முக்கிய பணியாகும்.

”கட்ஸ்” எடுத்து தண்டு வலிக்கின்றான் நண்பன்.

”கட்ஸ்” எடுத்து தண்டு வலிக்கின்றான் நண்பன்.

கடலுக்கு நடுவில் நண்பன் மற்றம் தம்பி குடும்பத்துக்கு 5 பாடுகளும் நண்பனின் மச்சானுக்கு 4 பாடுகளும் உள்ளன. குறித்த பாடுகளை நோக்கிச் சென்றது தோணி. பாடுகளை நெருங்கியவுடன் தோணி வலிச்ச தடியாலேயே நங்கூரம் குத்தி வைத்து வலையில் சிக்கி கூட்டுக்குள் சென்ற இறால்களை சேகரிப்பதற்காக கடலுக்குள் குதித்தான் நண்பனின் மச்சான்....

இறால் கூட்டுக்குள் இறால் மற்றும் சுங்கான் எனப்படும் பொல்லாத மீன், கணவாய், திரளி, கெளுறு, நண்டு என பல வகையான கடல் உணவுகள் துடித்துக் கொண்டிருந்தன. கூடுதலாக இறால்களே அதற்குள் இருந்தது. சுங்கான் எனப்படும் மீன் இறால் போல அதன் நிறத்தில் இருந்தாலும் அதன் முள் குத்தினால் கொடுக்கன் கடித்தது போல் ஒரு நாள் முழுவதும் தாங்க முடியாத வலியாக இருக்குமாம். அதனால் தோணிக்குள் நின்ற என்னை கவனமாக எச்சரித்தான் நண்பன்.

ஜெலி மீன் பற்றிய விளக்கம் நடக்கின்றது. சொறி முட்டை என்றும் சொல்லலாம். இது உடலில் பட்டால் தாங்கமுடியாத அரிப்பு ஏற்படும்.ஃ

ஜெலி மீன் பற்றிய விளக்கம் நடக்கின்றது. சொறி முட்டை என்றும் சொல்லலாம். இது உடலில் பட்டால் தாங்கமுடியாத அரிப்பு ஏற்படும்.ஃ

இறால்கள் மீன்கள் உயிருடன் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க கொள்ளை ஆசையாக இருந்தது. (அட கொலைகாரா, கொடூரனே என நீங்கள் நினைத்தால் நினையுங்கோ ..பறவாயில்லை....) அப்பிடியே இறால் துடிக்க துடிக்க கையில் பிடித்து பார்க்கும் போது இனம்புரியாத சந்தோசமாக இருந்தது. கல்வியங்காட்டு சந்தைக்குள்ள கூனி இறாலை வைச்சு குதிரை விலை சொல்லுவாங்கள்... இது எந்தப் பெரிய இறால் என பார்த்ததேன்.....இறால்களில் பல வகைகள் இருப்பதை நண்பன் தெரியப்படுத்தினான். சிங்கி இறால் என்பதை விட கருவண்டு இறால் ( இது பத்து அங்குல நீளம் இரு்ககும்), கூனி இறால் ( இது ஆகக் கூடியது 3 அங்குல நீளம்) பெரு இறால் ( இது 6 அங்குல நீளம் இருக்கும்) இவ்வாறு இறால்கள் குறித்த கூட்டுக்குள் காணப்பட்டன.

ஓட்டுக் கணவாய்கள் சில தோணிக்குள் கிடந்து ”வக்.. வக்.”.. என்று கத்தியதை நேரில் பார்த்தேன்... குறித்த கணவாய்களை கையில் துாக்கிய போது உடனே கறுப்பு மையை எனக்கு பீச்சியடித்தன....( எதிரியிடமிருந்து தங்களைப் பாதுகாக்க கணவாயின் ஆயுதம் இது)

”எடேய் எருமை மாடே உன்ர போனுக்கு என்ர சாவு வேடிக்கையா இருக்காடா ” என கணவாய் சாபமிடுகின்றது என்னைப் பார்த்து

”எடேய் எருமை மாடே உன்ர போனுக்கு என்ர சாவு வேடிக்கையா இருக்காடா ” என கணவாய் சாபமிடுகின்றது என்னைப் பார்த்து

பயத்தில் மை கக்கிய கணவாய்

பயத்தில் மை கக்கிய கணவாய்

கடலுக்குள் பாடுகளில் இருந்த கூடுகளுக்குள் இருந்து இறால் சேகரிப்பு முடிந்தது. சுமார் 2 மணித்தியாலங்களாக கடல் நீருக்குள் பாய்ந்து ஊறிய உடம்புடன் நண்பனின் மச்சான் தோணியில் ஏறி இருந்தான். காலை 7.45 மணியளவில் தோணி கரையை நோக்கிப் புறப்பட்டது. இதே வேளை பல தோணிகள் கரை நோக்கி புறப்பட்டன. தோணிகளில் பெரும்பாலும் இருந்த வயதானவர்கள் தலைப்பாகை போட்டிருந்தனர். அத்துடன் வெறும் மேலுடன் சென்றனர். தோணிக்குள் பரவியிருந்த இறால் கும்பியில் 15 கிலோ இறால் வரும் என நண்பன் நம்பிக்கை தெரிவித்தான். ( நான் போன அதிஸ்டம் என்டு நினைக்கிறன் ).

அறுவடையின் பெருமை. ஆனால் அடுத்தநாள் அண்ணரின் பொக்கற்றுக்குள் காசு இருக்காது...

அறுவடையின் பெருமை. ஆனால் அடுத்தநாள் அண்ணரின் பொக்கற்றுக்குள் காசு இருக்காது...

இறால் கரைக்குச் சென்று கொண்டிருந்த போது நண்பனின் மச்சான் தோணியைச் செலுத்த நண்பன் இறாலை தரம்பிரிப்பதிலும் அதற்குள் இருந்த மீன்கள் , நண்டுகளை பிரிப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது எனது தொலைபேசியை நான் கடல் தண்ணி பட்டு அலங்கோலமா போய் விடும் என்ற

பயத்தில் சொப்பின்பாக் சிலவற்றால் சுத்திக் கட்டி வைச்சிருந்தேன். அதில் ஒரு சொப்பின்பாக்கை கேட்டான். நான் கொடுத்தேன். அங்கு பிடிபட்ட கருவண்டு இறால்கள் மற்றும் பெரு றால், நண்டு, கணவாய் என அந்த பாக் நிறம்ப போட்டு ”வீட்ட கொண்டு போங்கோ என சொன்னான்.......”

”வேண்டாம் வேண்டாம் ” என்டு நான் வேணுமென்டு சொன்னது அவனு்ககு விளங்கும்தானே... கட்டாயப்படுத்தி எனக்கு தந்து இறங்கு துறையில் கொண்டு வந்து விட்டான். அவன் தந்த கடலுணவுகளின் பெறுமதி 2 ஆயிரம் ரூபா வருமென நினைக்கிறன்......

நண்பனின் நன்கொடை..

நண்பனின் நன்கொடை..

பத்திரமா அவற்றை மனிசிட்ட கொண்டு வந்து குடுத்தன். எல்லாப் பொம்பிளைகளுக்கும் றால், நண்டு, கணவாய்தான் பிடிக்கிறது என்டு எல்லாருக்கும் தெரியும். மீன் கொண்டு வந்து குடுத்தால் பெண்டாட்டிகளிட மூஞ்சி போற போக்கு தெரியும்தானே.... நான் ஈச்சாப்பி என்டு அவளுக்கு தெரியும். இப்பிடி பெரிய றால் நான் வாங்கிறதே இல்லை. பாத்த உடன என்ன ஒரு சந்தோசம் அவள்ட முகத்தில....

நல்ல வேளை நீங்கள் அரசாங்க வேலையை விட்டுட்டு கடல்தொழிலுக்கு போங்கோ என்டு சொல்லாமல் விட்டுட்டாள்.....

நண்பனின் கடல் தொழிலைப் பற்றி நேரில் பார்த்த போது அவர்கள் படும் கஸ்டங்கள் அப்பட்டமாக தெரிந்தது. விடி காலையில் எழுந்து கடல் காற்றுக்குள் கடலுக்கு சென்று பின்னர் மாலையிலும் கடலுக்கு சென்று கூடு கட்டுவது என அவர்கள் கஸ்டப்பட்டே உழைக்கின்றார்கள். அன்று அவர்களுக்கு கிடைத்த வருமானம் 10 ஆயிரம் ரூபாவுக்கு மேல் என தெரியும். அதை தம்பி, மச்சான் என பகிர்ந்து கொள்கின்றார்கள்.

நண்பனிடம் ” உனது பிள்ளைகளை கடலுக்கு கொண்டு வாறதா” என கேட்ட போது நண்பன் அதற்கு ”இல்லை” என பதில் சொன்னான். “எங்களைப் போல அவர்களையும் கடலுக்குள் இறக்கின்றதோ” என கூறினான். நண்பனின் பிள்ளைகளும் புலமைப்பரிசில் பரீ்ட்சையில் சித்தியடைந்து பிரபல பாடசாலைகளில் படிக்கின்றார்கள். அத்துடன் அந்தக் கிராமத்தில் உள்ளவர்களும் பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் பெரும் முயற்சி எடுக்கின்றார்கள். பிள்ளைகளும் நன்றாக படிக்கின்றார்கள்.

ஆனால் அவர்கள் தங்களுடன் குறித்த கடல் தொழில் நின்றுவிட வேண்டும். பிள்ளைகளை கடலுக்குள் இறக்குவதா? என்ற மனநிலையில் இருப்பது மிக ஆபத்தான ஒன்றாகும்.

தற்போது உலக நாடுகளுக்கிடையே முறுகல்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது கடல்வளமாகும். இலங்கையிலேயே சிங்கள, இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் தமிழ் மீனவர்கள் கடும் நெரு்கடிக்குள்ளாகியுள்ளார்கள். இவ்வாறான நிலையில் தமிழ் மீனவர்கள் தங்களது மிகச் சிறப்பான செல்வத்தை அள்ளித் தரக்கூடிய கடல்தாயின் பொக்கிசத்தை பல்வேறு காரணங்களால் இழப்பார்களாயின் தமிழர்களின் நிலை மேலும் கேள்விக்குறியாகும்.

நம்மிடையே ஏற்பட்டிருக்கும் தொழில் ரீதியான சாதிப் பாகுபாடும் பெறுமதி மிக்க மீனவர்களின் மனங்களில் ஆழமான வடுவாக காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. களவெடுக்காது, பொய் சொல்லாது, ஊழல் செய்யாது கடும் உயிராபத்துக்களை எதிர் கொண்டு இவர்கள் செய்யும் தொழில் கடவுளின் ஆசிர்வாதத்துடன் கூடிய தொழிலாளகும். எமது இனத்தின் மீனவன் ஒவ்வொருவனும் எமது இனத்தின் முத்துக்களாக பார்க்கப் பட வேண்டியவர்கள்.

தமிழர்களின் புரதத் தேவையில் முக்கால்வாசி தேவை இவ்வாறானவர்களின் தொழில் முயற்சியாலேயே நிறைவேற்றப்படுகின்றது. அத்துடன் குறித்த மீனவர்களை நம்பி ஏராளமானவர்கள் மறைமுக வேலைவாய்ப்பை பெற்றுவருகின்றனர்.


இவர்களிடம் இருக்கும் ஒரே ஒரு கெட்ட பழக்கம் என்னவென்றால் தாங்கள் சம்பாதிப்பதை சேமிக்காது அன்றைய தினமே அவற்றை குடும்பமாகவும் தனித்தனியாகவும் ”இஞ்ஜோய்” பண்ணி செலவு செய்துவிடுவார்கள். ஆகவே இவர்களுக்கான சங்கங்கள் இவர்கள் கடலை விட்டு கரை சேர்ந்து மீனை விற்றவுடன் அதில் வரும் பணத்தில் குறைந்தது 30 வீதத்தையாவது கட்டாயப்படுத்தி பெற்று இவர்களது வங்கிக் கணக்கில் சேமிக்க செய்வது அவசியமாகும்.


ஓளைவைப்பாட்டி சொன்ன ”வரப்புயர ” என்ற பாட்டை மாற்றி ”வலையுயர” என்று பாட வேண்டும். யாழ்ப்பாணம் உட்பட ஏனைய இடங்களில் மீன்பிடித் தொழில் செய்யும் தமிழர்களிடத்தில் மீன்பிடிக் கப்பல்கள் இல்லை, பாரிய படகுகள் இல்லை. சிங்களவன், சீனாக்காரன் போன்றவர்களிடம் இருக்கும் அதி நவீன சாதனங்கள், படகுகள் இல்லாத காரணத்தால் தமிழர்களின் மீன் பிடித் தொழிலில் பாரிய பின்னடைவு காணப்படுகின்றது.

காணொளிக் காட்சிகள் சில

ஆகவே இவ்வாறான மீனவர்களின் சங்கங்கள் இது தொடர்பில் கவனமெடுத்து மீனவர்களின் புத்திசாலிகளான தற்போதய இளம் சமூகத்தை நவீன தொழிற்பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி கற்க வைத்து சிறப்புத் தேர்ச்சி பெற்று தொழில் செய்ய விடுவார்களானால் ”ரை கட்டிய படித்த பட்டதாரிகள்” இவர்களுக்கு கீழ் நின்று சேவையாற்றுவார்கள் என்பது வெளிப்படை உண்மை.....


இந்த்ப பதிவை தயவு செய்து வாசிக்கும் ஒவ்வொருத்தரும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மீனவர்களுக்கு இது ஒரு உற்சாகமாயும் சேமிப்புத் தொடர்பாக யோசிப்பதாயும் அமையும்.

நன்றி..

மேதின சிறப்புப் பதிவு

 

நன்றி

முகப்புத்தம்