யாழ் மணியம்தோட்டப் பகுதியில் இளைஞனின் தொலைபேசியை அடித்துப் பறித்தவர்கள் கைது

யாழ்ப்பாணம், மணியந்தோட்டம் பகுதியில் வீதியால் சென்ற இளைஞனை தாக்கி 35 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசியை அபகரித்த இருவரை, வேம்படிசந்தி பகுதியில் வைத்து சனிக்கிழமை (20) கைது செய்துள்ளதாக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

அரியாலை பகுதியைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதன்போது, முச்சக்கரவண்டியொன்றும் மீட்கப்பட்டுள்ளனது.

கடந்த புதன்கிழமை (17) சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞன் ஒருவரை, முச்சக்கரவண்டியில் பின் தொடர்ந்த சந்தேகநபர்கள், ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் அவரை தாக்கி, அவரிடமிருந்த அலைபேசியை அபகரித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளைஞன், முச்சக்கரவண்டியின் இலக்கத்தகட்டிலுள்ள இலக்கத்தை குறித்துக்கொண்டு, தனது அலைபேசி அபகரிக்கப்பட்டமை குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில், விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர்.