நிரந்தர சமாதானம் ஏற்படுவதற்கு கலப்புத் திருமணங்கள் நடைபெறவேண்டும்! வடக்கு ஆளுநர்

இலங்கையில் வடமாகாணத்தின் புதிய ஆளுனராக பொறுப்பேற்றுள்ள ரெஜினோல்ட் குரே, சாதி, சமயம், இனம் என்ற தனித்துவம் பாராமல், கலப்பு வாழ்க்கை மூலமாக நாட்டில் உண்மையான சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த முடியும் என்று கூறியிருக்கின்றார்.

இத்தகைய கலப்பு வாழ்க்கை முறைமையின் ஊடாக பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளவும் முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

வடமாகாண ஆளுனராக பொறுப்பேற்றுள்ள அவருக்கு யாழ்ப்பாணத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

‘கலவை என்பது சிறந்த பலன்களை அளிக்கவல்லது என்பது எனது கருத்தாகும். சமூகத்தில் உள்ள சாதிகளும், சமூகங்களும் ஒன்றுடன் ஒன்று கலக்கும் பொழுது பிறக்கின்ற பிள்ளைகள் ஒரே சாதியில், ஒரே இனத்த்pல் பிறக்கின்ற பிள்ளைகளைவிட சிறந்தவர்களாக இருப்பார்கள்’ என்றார் அவர்.

‘கலப்புத் திருமணம் என்பது கூடாதது அல்ல…கலத்தல் என்பது விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப விளைவுகளின்படி நன்மைகளைத் தரவல்லது’ என்றார் புதிய ஆளுனர் ரெஜினோல்ட் குரே.

இலங்கையின் முன்னோர்களான அரசர்களும்கூட கலப்பு திருமணங்களையே செய்திருந்தனர் என்று கூறிய அவர், தனித்துவமான இனம் என்று எதனையும் கூறமுடியாது எனவும் தெரிவித்தார்.

‘இலங்கையை ஆண்ட அரசர்களில் அநேகர் இந்தியாவில் இருந்தே தமது மனைவியரை வரவழைத்திருந்தனர். எனவே சிங்கள இரத்தம் என்பது கலப்படம் கொண்டது. இங்கு வந்த முஸ்லிம்கள் அனைவரும் சிங்களப் பெண்களையே தமது திருமணம் செய்து கொண்டார்கள். எனவே, நாங்கள் தனித்துவத்தைப் பற்றி சிந்திக்க முடியாது. எல்லோருமே கலப்பினத்தவர்களே. இங்கு வந்துள்ள நானும்கூட கலப்பு மனிதனே’ என்றும் கூறினார் ரெஜினோல்ட் குரே.