மாணவர்கள் சிலரின் துர்நடத்தையால் சீரழிகின்றது வடமராட்சி கொற்றாவத்தை

வடமராட்சி கொற்றாவத்தைப் பகுதியில் உள்ள அமெரிக்கன்மிசன் தமிழ்க்கலவன் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் மேற்கொள்ளும் துர்நடத்தைகளால் அப்பாடசாலைச் சமூகமும் அந்தப் பிரதேசமும் கடும் அச்சுறுத்தலுக்கும் சீரழிவுகளுக்கும் உள்ளாகியுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் ஒரு சிலர் பாடசாலை நேரங்களில் பாடசாலைச் சீருடையுடனும் சீருடையல்லாமலும் பாடசாலைக்கு வெளியே துர்நடத்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் போதைப் பொருள், கள்ளச்சாராயம் போன்றவற்றை விநியோகிப்பவர்களுடனும் இவர்கள் நெருங்கிய தொடர்புகள் வைத்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. பாடசாலைச் சீருடையுடன் பாதுகாப்பான முறையில் குறித்த மாணவர்களைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் தமக்குரிய செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக பாடசால அதிபர் நடவடிக்கை எடுக்க அச்சப்படுவதாகவும் தெரியவருகின்றது. பாடசாலைகளுக்கு சமூகமளிக்கத் தவறிய மாணவர்களை பெற்றோருடன் வருமாறு அதிபர், ஆசிரியர்கள் கூறினால் அவர்களை மாணவர்கள் அச்சுறுத்துவதுடன் அவர்கள் பயணிக்கும் மோட்டார் வண்டிகளையும் சேதமாக்கி வருவதாகவும் பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பாடசாலை மாணவர்கள் பலர் மாவட்ட மட்டம் தேசிய மட்டங்களில் சாதனை படைத்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரு சில மாணவர்கள் செய்யும் துர்நடத்தைகளால் குறித்த பாடசாலையின் பெயர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலைத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த மாணவர்கள் தொடர்பாக பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத் தவறியதால் தற்போது தொடர்ச்சியாக அவர்கள் தமது அட்டகாசத்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இது தொடர்பாக அதிபர் இராஜதுரை வலயக்கல்விப் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தாது மூடிமறைக்க முயல்வதாகவும் பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாடசாலைகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.நந்தகுமாரும் செயற்படத் தவறியுள்ளது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாணப் பாடசாலைகளின் தரத்தையும் பாடசாலைகளில் மாணவர்களின் ஒழுங்கையும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தாது கல்வி அமைச்சர் குருகுலராசாவும் கல்வி அமைச்சின் செயலாளரும் அசண்டையீனமான இருப்பதும் கல்வி வளர்ச்சிக்கு பாரிய பின்னடைவாக மாறும்.

ஓரிரு நாட்களுக்கு முன் பாடசாலை மாணவன் ஆசிரியையின் சங்கிலியை பாடசாலைச் சீருடையுடன் வந்து அறுக்க முற்பட்ட சம்பவம் வட பகுதி மாணவர்கள் சிலரின் நிலையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. எனவே துரித நடவடிக்கையில் இவ்வாறான மாணவர்களைக் கட்டுப்படுத்தி கல்விச் சமூகத்தை முன்னேற்றமடைய வைப்பது சம்மந்தப்பட்ட தரப்புகளின் தலையாய கடமையாகும்.