யாழ்ப்பாணத்தில் கருங்குளவி தாக்கி குடும்ப பெண் உயிரிழப்பு

வேப்பிட்டி காட்டுக்குள் விறகு வெட்டிக்கொண்டிருந்த பெண்ணை கருங்குளவிகள் கொட்டியதால் அவர் உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்குனதிலக தெரிவித்தார்.

இச்சம்பவம், நேற்று வெள்ளிக்கிழமை (19) மாலை இடம்பெற்றுள்ளது.

அராலி, தெற்கு வட்டுக்கோட்டை பகுதியினைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சாந்தலிங்கம் பிறேமா (வயது 50) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விறகு வெட்டிக்கொண்டிருந்த போது கருங்குளவியின் தாக்கத்துக்குஉள்ளாகி, உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போது குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மரண விசாரணைகளை மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.