பொலிஸ் நிலையங்கள் அமைந்துள்ள காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை

யாழ்.மாவட்டத்தில் பொலிஸாரினால் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பொது மக்களின் 18.6 ஏக்கர் காணியில் ஒரு தொகுதி காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறிப்பாக சாவகச்சேரி, இளவாலை மற்றும் வல்வெட்டித்துறை பகுதியில் பொலிஸார் நிலை கொண்டுள்ள குறிப்பிட்ட சில காணிகளே இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ்.மாவட்டத்தில் ஒரு சில பொலிஸ் நிலையங்கள் சொந்தக் காணிகளில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பெரும்பாலான பொலிஸ் நிலையங்கள் பொது மக்களுடைய வீடுகளிலும், காணிகளிலும் இயங்கி வருகின்றன.

குறிப்பாக யாழ்.மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரத்தின்படி 56 பொது மக்களுடைய 18.6 ஏக்கர் காணிகளை பொலிஸார் தமது பொலிஸ் நிலையங்களுக்காகவும், தங்களுடைய தங்குமிடங்களுக்காகவும் கையகப்படுத்தி வைத்துள்ளனர்.

இவ்வாறு கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள காணிகளை நிரந்தரமாக சுவீகரிப்பதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக சாவகச்சேரி, இளவாலை மற்றும் வல்வெட்டித்துறை பகுதிகளில் அமைந்துள்ள பொலிஸ் நிலையக் காணிகள் முதற்கட்டமாக சுவீகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.