கள்ள மண் கடத்தல்காரர்களைக் காட்டித் தருவதாக ஏமாற்றிய சாரதி சிறைக்குள்

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு, பொலிஸாருக்கு மணல் வீச்சு தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபரை, பிணை நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.ஹம்சா புதன்கிழமை (17) உத்தரவிட்டார்.

கடந்த நவம்பர் மாதம் 01ஆம் திகதி, சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்ந்து சென்ற ஹன்ரர் ரக வாகனத்தை கொடிகாமம் பொலிஸார் மீசாலை சந்தி பகுதியில் வைத்து மறித்த போது நிறுத்தாமல் சென்ற வாகனத்தை பின் தொடர்ந்து துரத்தி சென்றனர். இதன்போது, பொலிஸார் மீது வாகனத்தில் இருந்தோர் மணலை வீசி தாக்கியிருந்தனர்.

இச் சம்பவத்தில் துன்னாலை பகுதியினை சேர்ந்த ஹன்ரர் வாகன சாரதி கைது செய்யப்பட்டதுடன், மேலும் மூவர் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்திருந்தனர். கைதான சாரதி தன்னை பிணையில் விடுவித்தால் மேற்படி மூவரையும் காட்டி தருவதாக கூறியிருந்தார். இதற்கு அமைய அவர் சாவகச்சேரி நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

புதன்கிழமை (17) வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது, மேற்படி நபர் நீதிமன்றில் தெரிவித்தது போல் சந்தேக நபர்கள் தொடர்பில் எந்தவித தகவலும் இதுவரை கூறவில்லை என தெரிவித்தனர். இதனையடுத்து பிணை உத்தரவில் கூறிய வாக்குறுதியை மீறிய குற்றச்சாட்டினை கவனத்தில் கொண்டு நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.