குற்றவாளிகளுக்கு சவுக்கடி கொடுக்கும் தண்டனை வேண்டும்! யாழில் பொதுமகன் ஆவேசம்

இலங்கையின் நீதித்துறையில் கசையடி அறிமுகப்படுத்தப்பட்டு, சிறு குற்றங்களை செய்தவர்களுக்கு 5 கசையடிகளும் பெருங்குற்றங்களை செய்தவர்களுக்கு 25 கசையடிகளும் வழங்கும் வகையில் புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் என பொதுமகன் ஒருவர் குறிப்பிட்டார்.

இலங்கை அரசியலமைப்பில் மறுசீரமைப்பு தொடர்பில் பொதுமக்களுடைய கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் குழுவின் அமர்வு, இரண்டாவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை (16) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பொதுமகன் ஒருவரே இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

தற்போது, நாட்டில் நீதித்துறை வலுவற்றதாக சாதாரண நிலையில், பெருமளவான அரசியல் தலையீட்டுடன் காணப்படுகின்றது. அரசியல் தலையீடுகள் நீதியைப் பெற்றுக்கொடுக்கப்படாமல் முடிவடைகின்றன. குற்றவியல் வழக்குகளில் அதிகளவு இலஞ்சம், ஊழல் இடம்பெறுகின்றன. இலஞ்ச ஊழல் செய்பவர்களுக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்குவதே அது அதிகரிப்பதற்கு காரணம் ஆகும். நீதியை பாதிப்பது இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகும்.

கொலை வழக்குகள் 6 மாத காலத்துக்குள்ளும் சாதாரண வழக்குகள் 3 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கக்கூடியதாக மாற்றம் செய்யப்பட வேண்டும். மேலும், சமுகவிரோத குற்றங்களுக்கு கசையடிகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறான கசையடிகள் வழங்கப்படுவதன் மூலம் குற்றம் செய்பவர் தண்டிக்கப்படுவதுடன், அதனைப் பார்ப்பவர்கள் குற்றங்கள் செய்யாமல் இருப்பர்.

சாதாரண குற்றங்களுக்கு 5 கசையடிகளும் பெரும் குற்றங்களுக்கு 25 கசையடிகள் வழங்கப்பட வேண்டும். இதன்மூலம் தான் குற்றங்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். தற்போது வடமாகாணத்தில் குற்றங்கள் அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றது என்றார்.