சுவிஸில் இருந்து ஊருக்கு வந்த நவீன ஏகலைவன்!

சுவிற்சலாந்துக்கு சுமார் 20 வருடங்களுக்கு சென்றிருந்த ஈழ தமிழர் ஒருவர் முதல் தடவையாக அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு திரும்பி வந்திருந்தார். போருக்கு பிந்திய சூழல் இதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்து இருந்தது.

இவரின் சொந்த இடம் தெல்லிப்பளை. சைவ ஆசார குடும்பத்தை சேர்ந்தவர். 20 வயதில் போனவர் இப்போதுதான் திரும்பி வந்திருந்தார். தனிக் கட்டையாக போய் இருந்தவருக்கு மனைவி, பிள்ளைகள் என்று குடும்பம். இவர்களும் முதல் தடவையாக வந்திருந்தனர்.

இதனால் இவரின் வீட்டில் ஒரே அமர்க்களம். உறவினர்கள், நண்பர்கள், ஊரவர்கள் திரண்டு வந்து காத்திருந்தனர்.

ஆனால் வந்ததும், வராததுமாக இந்த மனிதன் வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டான். கையில் சில பரிசு பொருட்களை எடுத்து சென்றான். ஒரு மிக முக்கிய நபரை சந்திக்க செல்வதாக சொல்லி காரில் புறப்பட்டான்.

பெற்றோரை விட முக்கியமான நபர்களா? ஆரேனும் எம்.பியை சந்திக்க செல்கிறாரோ? இராணுவ பெரியவரை சந்திக்க செல்கின்றாரோ?... இவ்வாறெல்லாம் பலருக்கும் பல சந்தேகங்கள் மனதில் ஓடின.

பல மணி நேரம் ஆனது. இவர் திரும்பி வரவே இல்லை. பொலிஸில் எங்கும் மாட்டுப்பட்டு விட்டாரோ? என்று வேறு பயம். இவரை தேடும் படலம் தொடங்கியது.

அப்போதுதான் இவரின் மச்சான் முறையான ஒருவர் வந்து ஒரு அதிர்ச்சி தகவலை சொன்னார்.

ஊரில் மீன் வெட்டி விற்ற சூசையின் வீட்டுக்கு இந்நபர் போய் சூசையின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றதுடன் பரிசு பொருட்களும், ஒரு தொகை பணமும் கொடுத்து இருக்கின்றானாம்.

வீட்டில் இருந்தவர்களில் ஒருவர் சொன்னார் ஆச்சாரம் கெட்டு விட்டது என்று. இன்னொருவர் சொன்னார் அபச்சாரம் என்று. ஊரில் இருந்து போகும்போது நன்றாக இருந்த பயல் வெளிநாட்டுக்கு போய் கெட்டு விட்டான் என்று.

ஒருவாறு வீட்டுக்கு திரும்பி வந்தார். வீட்டில் கன அமைதி நிலவியது. மனைவிதான் மௌனத்தை கலைத்தார். சூசை அவ்வளவு முக்கியமானவரோ?

இவன் பையனாக இருந்து படிக்கின்ற காலத்தில் சூசையின் மீன் கடையை தாண்டித்தான் பாடசாலைக்கு செல்ல வேண்டி இருந்தது. சூசை ஒரு கையால் மீனை பிடித்து, செதிலை அகற்றி, துண்டமாக வெட்டுவதை ஓர கண்ணால் பாடசாலை நாட்களில் பார்க்க நேர்ந்தது.

சுவிஸ் போனபோது பகீரத முயற்சியின் பின் மார்க்கெற் ஒன்றில்தான் வேலை கிடைத்தது. அதுவும் மீன் வெட்டுகிற வேலை. வேலையில் முன்னனுபவம் கிடையாதபோதிலும் சூசையை மனதில் நினைத்து கொண்டு மீனை வெட்ட தொடங்கினான். இப்போது மீன் வெட்டுவதில் பெரிய நிபுணன் ஆகி விட்டான். நாம் சின்ன வயதில் ஏகலைவன் துரோணர் கதை படித்திருப்போம். இதே போன்ற பந்தம்தான் இவனுக்கும் சூசைக்கும் இடையில்.

புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்களுக்கு பணம் பொன் மழையாக கொட்டவில்லை. அநேகர் முன் பின் தெரிந்து இராத வேலைகளை கஷ்டப்பட்டு செய்தே இன்று முன்னுக்கு வந்து உள்ளனர். ஆனால் இவர்கள் அனுப்புகின்ற பணத்துக்கு பின்னால் இருக்க கூடிய சோக கதைகளை தெரியாமல் இவர்களின் உறவுகள் பந்தா காட்டி ஏட்டிக்கு போட்டியாக செலவு செய்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் ஊதாரித்தனமாக செலவு செய்து கெட்டு போகின்றனர்.