யாழ் கார்கில்ஸ் திரையரங்கத்தில் பெண்ணுக்கு தொல்லை கொடுத்தவர் கைது

யாழ். நகரப் பகுதியில் உள்ள கார்கில்ஸ் திரையரங்கினுள், தனது இரண்டு பிள்ளைகளுடன் சென்ற பெண் ஒருவரின் பிரூடத்தை அமுக்கிய சந்தேகநபர் ஒருவரை, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், இன்று உத்தரவிட்டார். கடந்த 11ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றது.

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த இளைஞன் ஒருவன், திரையரங்குக்குச் சென்று கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தாயின் பிரூடத்தினை அமுக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண், குறித்த இளைஞனை கடுமையாகத் திட்டியுள்ளார். இருப்பினும், பெரும்பான்மையின மொழி பேசிய அவ்விளைஞன், அப்பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். மோட்டார் சைக்கிள் இலக்கத்தினை குறிப்பெடுத்து வைத்த அப்பெண், இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த சிறுகுற்றத்தடுப்பு பொலிஸார், வரணி பகுதியைச் சேர்ந்த அவ்விளைஞனை, நேற்று கைது செய்திருந்தனர். இதனையடுத்து, அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, நீதிவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.