குடாநாட்டில் மீண்டும் ரவுடிகளின் வாள் வெட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு! பொதுமக்கள் அச்சத்தில்

வாள், கோடரிகளுடன் ஆயுதக்குழு ஒன்று, வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ் தரை  துரத்தித் துரத்தி தாக்கியமையால் நேற்றிரவு தாவடியில் பதற்ற நிலை காணப்பட்டது. குறித்த குடும்பஸ்தர் காயத்துடன் அந்தப் பகுதியிலுள்ள வீடொன்றின் மதில் பாய்ந்து ஓடித்தப்பித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறித்த வீட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த அடாவடிக் குழு, அவரைத்தேடி அடாவடித்தனத்தில் ஈடுபட்டது. அதனால் அங்கு பதற்றம் ஏற்பட்ட  நிலையில் வீட்டிலிருந்த சிறுமி அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்துள்ளார். அத்துடன், அந்த ஆயுதக்குழு தாம் துரத்திச் சென்ற குடும்பஸ்தர் தப்பியோடியதால், அவரது மோட்டார் சைக்கிளையும் எடுத்துச் சென்றுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் விசாரணையின்போது மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நவாலியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படும் குடும்பஸ்தர், சிறுவன் ஒருவருடன் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். அவர் யாழ்ப்பாணம் சென்று வீடு திரும்பும் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நேரம் குடும்பஸ்தரை மோட்டார் சைக்கிளில் ஆயுதக் கும்பல் ஒன்று துரத்திச் சென்றுள்ளது. அந்த அடாவடிக் கும்பல் அவ்வாறு துரத்தித் தாக்கியதாலும் அவர் காயமடைந்த நிலையில் தனது மோட்டார் சைக்கிளையும் நிலத்தில் போட்டுவிட்டு, அந்தப் பகுதியிலிருந்த வீடு ஒன்றின் மதில் பாய்ந்து பின்னர் அதன் பின்புறமாகச் சென்று தப்பியோடி மறைந்து கொண்டார்.

ஆனால் அவரைத் துரத்திச் சென்ற அந்தக் கும்பல், அவர் முதலாவதாக மதில் பாய்ந்து சென்ற வீட்டுக்குள் நுழைந்து,  தாம் துரத்திச் சென்றவரைத் தேடி அடாவடியில் ஈடுபட்டுள்ளது. அதனால் அந்த வீட்டிலிருந்துவர்கள் அலறி பயந்து அச்சத்தில் உறைந்துவிட்டனர். இதனைக்  கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வீட்டுச் சிறுமி அழுது குளறி மயங்கி விழுந்துவிட்டார். அதன் பின்னர், அந்த வீட்டுக்கு வெளியே சென்ற அந்தக் கும்பல் தப்பியோடியவரது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் முதலில் மானிப்பாய் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அந்த இடம் சுன்னாகம் பொலிஸ் பிரிவு என்பதனால் சுன்னாகம் பொலிஸார் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

குறித்த ஆயுதக்கும்பலில் நவாலியைச் சேர்ந்த ஒருவர் உட்பட்ட குழுவினர் அடங்கியுள்ளனர் என்று அங்கு நின்றவர்களால் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, நேற்றிரவு கைதடி  கிழக்குப்பகுதியில் இளைஞர்களை வெட்ட முற்பட்ட கும்பலை மக்கள் துரத்தியடித்தனர். மோட்டார் சைக்கிளில் வாளுடன் வந்த 15 பேர் கொண்ட  கும்பல் ஒன்று அந்தப் பிரதேச இரு இளைஞர்களை வெட்ட முற்பட்ட போது, ஒன்று கூடிய பொதுமக்கள் துரத்திய நிலையில் அவர்கள் தமது மோட்டார் சைக்கிளில் ஒன்றை போட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டனர்.

இவர்கள் கைதடியில் இடம்பெற்ற பல வாள் வெட்டுச் சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்கள் என மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவத்தை அறிந்த சாவகச்சேரிப் பொலிஸ் பொறுப்பதிகாரி, உடனடியாக குறித்த இடத்திற்குச் சென்று சம்மந்தப்பட்ட கும்பலை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார்.

கடந்த வருடம் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் வாள்வெட்டு அதிகரித்த நிலையில் அவற்றை விசேட பொலிஸாரைக் கொண்டு அடக்குமாறு, பொலிஸ் உயர் அதிகாரிகளுக்குக் கட்டளை பிறப்பித்திருந்தார் யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்.

அத்துடன், மேலதிகமாக விசேட அதிரடிப்படையினரையும் கடமையில் ஈடுபடுத்துமாறும் நீதிபதி  குறிப்பிட்டிருந்தார். இதனால், வாள் வெட்டுச் சம்பவங்கள் குறைவடைந்த நிலையில் அண்மைக்காலமாக மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.