யாழ் நீதிமன்றத் தாக்குதல் சம்பவம்! சந்தேகநபருக்கு மீண்டும் பிடியாணை

 யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் வழக்கு தவணைக்குச் சமூகமளிக்காததையடுத்து, அவருக்கு எதிராக, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்கரன், இன்று  திங்கட்கிழமை (15) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியமை, வாகனங்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான 72 பேருக்கு எதிரான வழக்கு, இன்று  திங்கட்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சுன்னாகத்தைச் சேர்ந்த சந்தேகநபர் வழக்குச் சமூகமளிக்காததால், பிணை நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

மேலும், வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 13ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

புங்குடுதீவு மாணவி கொலை செய்யப்பட்டமையைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி யாழில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, யாழ்ப்பாணம் நீதிமன்றம் தாக்குதலுக்குள்ளானதுடன், வாகனங்களும் சேதமாக்கப்பட்டன.

இது தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு படிப்படியாக நிபந்தனை பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.