7 வயது சிறுமி எரித்து கொலை: பலாத்காரத்தை தடுக்க சத்தம் போட்டதால் நேர்ந்த கொடுமை!!

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது சத்தம் போட்டதால் ஆத்திரத்தில் சிறுமியை கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

மாங்காடு அடுத்த மதனந்தபுரம் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாபு. கம்ப்யூட்டர் என்ஜினீயரான பெருங்களத்தூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீதேவி, அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். 

இந்த தம்பதியினருக்கு 6 வயதில் ஹாசினி என்ற மகள் இருந்தாள். இவள், 2–ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 5–ந் தேதி மாலை அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் உள்ள கார் நிறுத்தும் பகுதியில் ஹாசினி தனது தோழிகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தாள்.

பாபு, தனது மனைவி மற்றும் மகனுடன் கடைக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த மகள்  காணவில்லை.

இது குறித்து மாங்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது அந்த குடியிருப்பை சேர்ந்த யாராவது கடத்தி இருக்கலாம்? என்ற கோணத்தில் அங்குள்ளவர்களிடம் போலீசார் விசாரித்தனர். 

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்து பார்த்தனர். அதில், அந்த குடியிருப்பில் வசித்து வரும் தஷ்வந்த் என்ற வாலிபர் இரவு நேரத்தில் ஒரு பையுடன் வீட்டில் இருந்து வெளியே செல்வதும், 2 மணி நேரம் கழித்து மீண்டும் அவர் வீடு திரும்பி வரும்போது அந்த பை இல்லாமல் வருவதும் பதிவாகி இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், தஷ்வந்திடம் விசாரித்தனர்.  அப்போது அவர், சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அப்போது அவள் சத்தம் போட்டதால் கொலை செய்து விட்டு அவளது உடலை தீ வைத்து எரித்து விட்டதாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

இதையடுத்து தஷ்வந்தை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.