காதலர் தினத்தில் காதலியின் சகோதரர்களால் புரட்டி எடுக்கப்பட்ட காதலன்!! யாழில் சம்பவம்

யாழ் கொக்குவில் பகுதியில் பிரபல பாடசாலை மாணவியான காதலியின் வீட்டுக்கு நண்பர்களுடன்  சென்ற 19 வயது பிரபல பாடசாலை மாணவன் மாணவியின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு இன்று மாலை தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவனுடன் வந்த இருவர் மோட்டார் சைக்கிள்களையும் விட்டுவிட்டு ஓடிவிட்டதாகத் தெரியவருகின்றது. 

மாணவனும் மாணவியும் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் ஒன்றாக கல்வி கற்று வருவதுடன் யாழ் நகரில் உள்ள பிரபல பாடசாலைகளில் க.பொ.த உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி கற்றுவருவதாகத் தெரியவருகின்றது.

மாணவன் பல நாட்களாக மாணவியின் பின்னால் திரிந்து காதலிக்கும்படி கேட்டுத் திரிந்ததாகவும் இன்றே மாணவி அதற்கு சம்மதம் தெரிவித்து முகப்புத்தகத்தில் அவனை தனது நட்பாகச் சேர்த்ததாகவும் காதலனின் நண்பகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மாணவியிடம் வீட்டுக்கு நட்பாக வந்து செல்லப் போவதாக தெரிவித்த போது மாணவி அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். இருப்பினும் தனது நண்பர்களுக்கு நல்லுார் பகுதியில் உள்ள ஐஸ்கிறீம் கடையில் விருந்து வைத்துவிட்டு அவர்களில் சிலருடன் கேக் மற்றும் சொக்லேட் வகைகள் அப்பிள் போன்ற பெருமளவு உணவுப் பண்டங்கள் மற்றும் பரிசுப் பொருட்களுடன் காதலியின் வீ்ட்டுக்குச் சென்றுள்ளனர்.

இரு அண்ணன்கள் மற்றும் தந்தை ஆகியோர் அங்கு நின்ற வேளையில் இவர்கள் வீட்டின் முன் நின்று காதலியின் பெயரைக் கூறி அழைத்த போது அங்கு மாணவியின் அண்ணன்களே வந்துள்ளனர். தாங்கள் மாணவியின் நண்பர்கள் எனவும் மாணவியைச் சந்தித்துப் போவதற்கு வந்ததாகவும் தெரிவித்த போது அவர்கள் வந்தது தொடர்பாக மாணவியிடம் அண்ணன்கள்  வினாவியுள்ளனர்.

இவர்களின் வருகையால் அதிர்ச்சியடைந்து உறைந்து போயிருந்த மாணவி  சமாளிக்கத் தெரியாது எதுவுமே கூறாது அழுதுள்ளார். அண்ணன்களுக்கு விடயம் புரிந்துவிட்டது. உள்ளே அவர்களை அழைத்தனர். மாணவனுடன் சேர்த்து இரு மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்துள்ளனர். வீட்டு வளவுக்குள் இவர்கள் வந்தவுடன் இரு அண்ணன்களும் தந்தையும் பக்கத்து வீடுகளில் இருந்த உறவுகளுமாகச் சேர்ந்து 4 பேரையும் நையப்புடைத்துள்ளனர். இவர்களில் ஒருவர் தப்பி ஓடும் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்ததாகத் தெரியவருகின்றது. அயலவர்கள் அதில் கவனத்தைச் செலுத்தவே காதலனையும் கிணற்றுக்குள் வீழ்ந்தவனையும் விட்டுவிட்டு ஏனைய இருவரும் தப்பி ஓடியுள்ளனர்.

அடி வாங்கி ஓட முடியாது மாணவியின் உறவினர் ஒருவரின் பிடியில் இருந்த காதலனையும் கிணற்றுக்குள் இருந்து மீட்ட சினேகிதனையும் பொலிசாரிடம் ஒப்படைக்க முயன்ற போது காதலனின் பெற்றோருக்கு விடயம் தெரியவந்து அங்கு சென்றுள்ளனர்.

அதன் பின்னர் ஏற்பட்ட நீண்ட இழுபறியின் காதலனும் சிநேகிதனும் அவர்களின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். தற்போது கால்பகுதியிலும் மூட்டுப் பகுதியிலும் ஏற்பட்ட வீக்கங்களுக்காக காதலனான மாணவன் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகின்றது.

காதலியின் இரு சகோதரர்களில் ஒருவர் பொறியிலாளராகவும் இன்னொரு சகோதரர் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடமானவன் எனவும் தெரியவருகின்றது.  அடி வாங்கிய காதலனின் தாய் வங்கி அதிகாரி எனவும் தந்தை அரச ஊழியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.