யாழ்தேவி இசைவெளியீட்டு விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ள யாழ்தேவி குழுமம்

ஈழ சினிமா வளர்ச்சிப்போக்கில் அண்மைய காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து சில முழு நீளத்திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வரிசையில், வர்த்தக சினிமா என்ற குறிக்கோளுடன் கலை, கலாசாரம், பொழுதுபோக்கு என அனைத்தும் ஒன்றினைத்து பல தடைகள் தாண்டி தாயராகி வருகிறது யாழ்தேவி திரைப்படம்.

ராஜஸ்ரோன் புரடக்சன் கந்தசாமியின் தயாரிப்பில் இணைத்தாயரிப்பாளரான இராஜேந்திரகுமார் மற்றும் தசரதன் அவர்களின் பங்களிப்பிலும் கந்தசாமி லோககாந்தன் இயக்கத்தில் லவன், சாரு, றெஜி, லிங்கம், தனா, நிக்சன் ஆகியோரின் உதவி இயக்கத்திலும் இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கின்றது.

இத்திரைப்படத்தில் சங்கர், கிரிஷ், நிரோசா, மிதுனா உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் நடித்திருக்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் உலகளாவிய ரீதியில் வெளிவரவுள்ள யாழ்தேவி திரைப்படத்திற்கு, ஈழத்தில் பலரையும் தனது இசையில் வசப்படுத்தி வைத்திருக்கும் இசையமைப்பாளர் சுதர்சன் இசையமைத்திருக்கிறார்.

இந்திய இசையமைப்புக்கு நிகரான இசையை இத்திரைப்படத்திற்கு அவர் தந்துள்ளார். இப்படத்தில், இந்திய பிரபல பின்னனி பாடகர்கள் சத்தியபிரகாஸ், வந்தனா சிறினிவாசன், திவாகர், ஜெசிக்கா ஆகியோருடன் ஈழத்தின் புகழ்பூத்த முன்னனி பாடகர்கள் அருள் தர்சன், யுபேஸ், மயூராசங்கர், ஜெயபவா, தனுஸ், சிவி லங்கேஸ், அன்பு, பானுகா, நிசா, சஞ்சீவன் இணைந்து இந்திய பின்னனி பாடகர்களுக்கு நிகரானவர்கள் என உலகறிய தமது திறமையை வெளிப்படுத்தி உள்ளனர்.

யாழ்தேவி இசைவெளியீட்டு விழா நிகழ்வு நாளை 15ஆம் திகதி (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு யாழ். கிறீன் கிறாஸ் ஹொட்டலில் இடம்பெறவுள்ளது. 

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தென்னிந்தியாவில் சீமான் அவர்களின் இயக்கத்தில் தம்பி திரைப்படம் மற்றும் பாலாவின் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் திரைப்படம் மற்றும் பல படங்களில் தனது நடிப்பை அனைவராலும் இரசிக்க வைத்த இலங்கையை சேர்ந்த நடிகை பூஜா அவர்கள் வருகை தந்து இசைத்தட்டினை வெளியிடவுள்ளார்.

ஈழத்தில் தயாரிக்கப்பட்டு முதலாவதாக புலம்பெயர் நாடுகளில் இசைவெளியீட்டுக்கான உரிமம் பெற்ற முதல் திரைப்படம் யாழ்தேவி. இதை ஆர்.ரி புரடெக்சன் லண்டன், கனடா, இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளில் வெளியிடவுள்ளது எமது கலைஞர்களின் பெருமையாகும்.

ஈழத்தமிழராகிய நாம் எமது கலைஞர்களின் படைப்புக்களுக்கு ஆதரவு கொடுத்து எமது கலைஞர்களின் வளர்ச்சி பாதைக்கு தோள் கொடுப்போமாக! இசைவெளியீட்டுக்கு வருகை தந்து ஆதரவு தருமாறு யாழ்தேவி குழுமம் வேண்டிநிற்கிறது.