வீடு புகுந்து களவெடுத்த பெண்ணுக்கு சிறை!! தெல்லிப்பளையில் சம்பவம்

உடமைகளைத் திருடிய சந்தேகத்தில் கைதான பெண்ணை, எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிவான் ரீ.கருணாகரன், நேற்று வெள்ளிக்கிழமை (12) உத்தரவிட்டார்.

அத்துடன், திருடிய பொருட்களை தன் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான இரண்டாவது சந்தேகநபரை 75ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்ல நீதவான் இதன்போது அனுமதியளித்தார்.

கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி அளவெட்டிப் பகுதியில் உள்ள வயோதிபப் பெண்ணின் வீட்டிற்கு கூலி வேலை செய்வதற்காக மேற்படி பெண் வந்து இரு நாட்கள் தங்கியிருந்து வேலை செய்துவிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர், வயோதிபப் பெண்ணின் வீட்டில் இருந்த 6 பவுண் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் என்பன காணாமல்போனமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் வீட்டு உரிமையாளரால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த பெண்ணைக் கைதுசெய்ததுடன், நகையினை வாங்கிய மேலும் ஒருவரையும் கைதுசெய்தனர்.