சிவஞானத்தின் தாண்டவத்திற்கு தாங்குமா வடக்கு மாகாணசபை அரங்கு

வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலாளராக இருந்த மரியதாஸ் ஜெகு அப்பதவியில் இருந்து துாக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் கல்வித் திணைக்களத்தில் அதிகாரமற்ற பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். பேரவைத் தலைவர் சி.வி.கே சிவஞானத்துடன்  ஏற்பட்ட தர்க்கமே இதற்குக் காரணம் என தெரியவருகின்றது.

வடக்கு மாகாணசபையில் உள்ள அரசியல்வாதிகளில் சீ.வி.கே.சிவஞானமே நிர்வாகத்திறன் மிக்கவர் என்பது வடக்கு மாகாணசபை அதிகாரிகள் அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆடுகின்ற மாட்டை ஆடிக் கறப்பதிலும் பாடுகின்ற மாட்டைப் பாடிக் கறப்பதிலும் வல்லவர் சீ.வி.கே சிவஞானம். மகிந்தராஜபக்ச ஆட்சியில் இருந்த போது ஜனரஞ்சகமான முறையில் வடக்கு மாகாணத்தில் வலம் வந்த அப்போதய ஆளுநர் சந்திரசிறி கூட சீ.வி.கேயின் நிர்வாக ஆற்றலுக்கு மதிப்பளித்து நடந்ததுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அந் நேரம் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் மற்றும் ஆளும்தரப்பு,  ஆளுநருடனும் பிரதமசெயலாளரான விஜயலக்சுமியுடனும் முரண்பட்டுக் கொண்டிருந்த போதும், சி.வி.கே அவர்களுடன்  தொடர்பு கொண்டு வடக்கு மாகாணசபைக்கு அவசியமான பல செயற்பாடுகளைச் செய்து முடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அந்நேரம் ஆளுநர் சந்திரசிறியின் கிடுக்குப் பிடியில் சிக்கித் தவித்த பலருக்கு சீ.வி.கேயே விமோர்சனம் அளித்ததும் குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கூட சீ.வி.கேயுடன் தொடர்பு கொண்டு ஆளுநரின் ஊடாக தமது சொந்தச் செயற்பாடுகள் சிலவற்றை செய்து முடித்திருந்தனர்.

இதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஆளுநர் மாற்றப்பட்டு நல்லாட்சி ஏற்பட்டுள்ள நேரத்தில், வடக்கு மாகாணசபையில் முன்னைய ஆட்சிக் காலத்தில் நெல்சிப் திட்டத்தில் பல கோடி ரூபாக்கள் ஊழல் மோசடியில் நேரடியாகத் தொடர்பிருந்ததாக பலராலும், ஊடகங்களாலும் குற்றஞ்சாட்டப்பட்ட உள்ளுாராட்சி ஆணையாளராக இருந்த மரியதாஸ் ஜெகு,  அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் வடக்கு மாகாணசபை பேரவைச் செயலகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் அப் பதவியில் அமர்த்தப்பட்டதற்கு வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். வடக்கு மாகாணசபைத் தவிசாளரான சீ.வி.கே சிவஞானமே ஜெகுவைப் பாதுகாப்பதாகவும் சில உறுப்பினர்கள் நேரடியாகக் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று பேரவைச் செயலாளர் ஜெகு திடீரென இடமாற்றப்பட்டுள்ளார். பேரவைச் செயலகத்தின் நிர்வாகச் செயற்பாடுகளில்  சீ.வி.கே சிவஞானத்திற்கு வகுப்பெடுக்க பேரவைச் செயலாளர் முயன்றதாகத் தெரியவருகின்றது. இதனால் கடும் சீற்றமடைந்த சீ.வி.கே உயர்அதிகாரத்தரப்புடன் தொடர்பு கொண்டு உடனடியாக ஜெகுவை இடமாற்றியுள்ளார்.

வடக்கு மாகாணசபையின் ஆளும் தரப்பு தற்போது இரண்டாகப் பிளவடைந்துள்ளதும் அதில் ஒரு பகுதிக்கு முதலமைச்சரும் இன்னொரு பகுதிக்கு தவிசாளரும் கட்டளைத் தளபதிகளாக இருந்து கடும் சமர் இடம் பெற்று வருவதும் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். முதலமைச்சருக்கும் முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் தற்போது சிம்மசொப்பனமாக விளங்குபவர் சி.வி.கே சிவஞானமே.

தனக்கு கிடைக்கும் சிறு துரும்பைக்கூட முதலமைச்சர் அணியின் மூக்குக்குள் வி்ட்டு தும்மல் வரும் அளவுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கின்றார் சி.வி.கே சிவஞானம். வடக்கு மாகாணசபை அமைச்சர்களில் இரு அமைச்சர்களை அவர்களின் தவறுகளை வைத்து பொறிக்குள் சிக்க வைத்து முதலமைச்சரின் அணியில் இருந்து அகற்றியுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. இந் நிலையில் விவசாய அமைச்சராக இருந்த ஐங்கரநேசனையும் பல குற்றச்சாட்டுகளில் சிக்கவைத்து முதலமைச்சரிடம் இருந்து பிரிக்க வைப்பதற்கு சி.வி.கே கடும் முயற்றி எடுத்துவருகின்றதாக முதலமைச்சர் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே ஐங்கரநேசன் மீது சீ.வி.கே கடும் கடுப்பில் இருந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அமைச்சரவைத் தீர்மானங்கள் மேற்கொள்ளும்போது சீ.வி.கேயிடம் ஆலோசனைகள் கேட்காததும் தீர்மானங்களை அவருக்கு வெளிப்படுத்தாமலும் இருப்பதற்கு ஐங்கரநேசனே முக்கிய காரணகர்த்தா என சீ.வி.கே கருதியுள்ளார். அத்துடன் பல விடயங்களில் ஐங்கரநேசன் சீ.வி.கேயைப் புறந்தள்ளி நடந்ததாகவும் தெரியவருகின்றது. முக்கியமாக கூட்டுறவு அமைச்சு ஐங்கரநேசனிடம் கையளிக்கப்பட்ட பின்னர் அந்த அமைச்சுக்குள் சி.வி.கே தலையிடுவதை ஐங்கரநேசன் தடுத்ததாலேயே இருவருக்கும் கடும் முரண்பாடுகள் தோன்றியிருந்தன. இதற்கு ஐங்கரநேசனுக்கு முதலமைச்சரும் ஆதரவு கொடுத்துள்ளார். இதுவே சி.வி.கே சிவஞானத்திற்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியது.

சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சனையில் ஐங்கரநேசன் மேற்கொண்ட அனைத்துச் செயற்பாடுகளுக்கும் அந்நேரம் சீ.வி.கே உட்பட வடக்கு மாகாணசபையினரே ஆதரவு கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அந்தச் சபை உறுப்பினர்களே ஐங்கரநேசனுக்கு எதிராக திசை திரும்பி இருப்பதற்கு சீ.வி.கே அவர்களின் செயற்பாடே காரணம் என வடக்கு மாகாணசபையில் நடுநிலையில் உள்ள உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண விவசாய அமைச்சராக இருக்கும் ஐங்கரநேசன் வடக்கு மாகாணசபைக்குள் நுழைவதற்கு முன்னரே இயற்கையுடன் இணைந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயமாகும். தற்போது அவரது செயற்பாடு பலராலும் வெகுவாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது. முக்கியமாக சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சனையில் நிபுனர் குழு அமைத்தமை, இரணைமடுத் தண்ணீரை யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு முட்டுக்கட்டை போட்டமை, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு பாடுபட்டுக் கொண்டிருப்பபை போன்ற செயற்பாடுகள் கடுமையாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது.

இரணைமடு திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு முழுக் காரணம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் என்பதும் அதற்கு ஆதரவாக ஐங்கரநேசன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கடல் நீரை குடிநீராக்குவதற்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தடன் ஐங்கரநேசன் விவசாய நிகழ்வுகளை ஜனரஞ்சமாக பெருமளவு செலவில் கொண்டாடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மரம் நாட்டும் விழா, உழவர் விழா என விழாக்கள் எடுத்து செலவு செய்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

ஆனால் இதே போல் கல்வி அமைச்சு விளையாட்டு விழா, வர்ண இரவுகள் எனவும் சுகாதார அமைச்சு சுகாதார வாரம் போன்ற செயற்பாடுகளுக்காகவும் நிதிகளைச் செலவு செய்தே கொண்டாடுகின்றார்கள். விவசாயிகளுக்காக ஜனரஞ்சகமான விழாக்கள் எடுப்பதில் தவறுகள் இருப்பதாகத் தெரியவில்லை என பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஐங்கரநேசன் கார்த்திகையில் கொண்டு வந்த மரநாட்டுவிழா என்ற செயற்பாடு பட்டி தொட்டியெல்லாம் பரவி முகப்புத்தகத்தை நிரப்பியதும் குறிப்பிடத்தக்கது.

 இருப்பினும் ஐங்கரநேசன் மீது எழுந்துள்ள  குற்றச்சாட்டுகளுக்கு ஐங்கரநேசன் வ்டக்கு மாகாணசபைக்கு தகுந்த பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.  இதற்கு முழுமையான காரணம் சி.வி.கே சிவஞானம் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

சி.வி.கே சிவஞானம் முதலமைச்சரை கிடுக்கிப் பிடிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவையும் சில வேளைகளில் உடுக்கடித்து உருவேற்றி விடுகின்றவர் எனவும்  தவராசாவின் கேள்விகளால் துவண்டு போன சில ஆளும்கட்சி உறுப்பினர்கள் தெரவித்துள்ளனர். முதலமைச்சரை அடக்குவதற்காக சி.வி.கே சிவஞானம் ராஜதந்திரங்களைக் கையாண்டு தன்னால் நேரடியாக கேட்க முடியாத சிலவற்றை தவராசாவைக் கொண்டு கேட்பதில் வல்லவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எவ்வாறாயினும் சீ.வி.கே சிவஞானத்தின் நிர்வாகத்திறன், முன்னாள் உயர்நீதிபதியான முதலமைச்சரி்ன் சட்டநுணுக்கங்களுடன் கூடிய தலைமைத்துவம், அந்த அந்தத் துறைசார்ந்த அமைச்சர்களின் ஆற்றல் போன்றவை ஒரே நேர்கோட்டில் பயணம் செய்யாவிடின் வடக்கு மாகாண மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

ஞானசூனியன்