வடக்கு மாகாணசபை கூட்டம் இந்தியத் தொலைக்காட்சி நாடகங்களைப் போல் உள்ளது

வட மாகாண சபையில் விவாதிக்கப்படும் விடயங்கள் இந்திய தொலைக்காட்சி நாடகங்கள் போல இருப்பதாக வட மாகாண வடமாகாணசபை உறுப்பினர் க. சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற வடமாகாண சபை அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொலைக்காட்சி நாடகத்தில் ஒரு கதை, அதற்குள் ஒரு கதை, மீண்டும் ஒரு கதையென்று எங்கேயோ கொண்டு சென்று எங்கேயோ முடிப்பார்கள். அவ்வாறு வடமாகாண சபையின் ஒரு அமர்வில் பல விடயங்கள் விவாதிக்கப்படுகின்றன. ஒருவர் தண்ணீர்ப் பிரச்சினை என்பார்.

மற்றுமொருவர், காணியென்பார், மீள்குடியேற்றம் என்பார் இப்படியோ ஒவ்வொரு பிரச்சினையாக கதைத்து இறுதியில் சண்டையிட்டு எந்தப் பிரச்சினைக்கு ஒழுங்காக தீர்வைக் காண்பது இல்லை.

அவ்வாறு இல்லாமல் இந்த அமர்வில் இதைத்தான் கதைக்கவுள்ளோம் என முடிவெடுத்து, அது தொடர்பில் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பிரதேச அபிப்பிராயங்களைக் கொண்டு வரும்படி கூறினால், அந்த விடயம் தொடர்பில் ஆக்கபூர்வமான விடயங்களும் கிடைக்கப்பெறுவதுடன் பிரச்சினைகளுக்கு தீர்வையும் பெற்றுக்கொள்ளலாம்.

தனியே சுன்னாகத்தில் மாத்திரம் தண்ணிப் பிரச்சினையில்லை. வன்னியில் குடங்களை கட்டிக் கொண்டு மக்கள் மைல்கள் தொலைவுக்குச் தண்ணீர் எடுக்கச் செல்கின்றனர். ஒரு பிரச்சினை தொடர்பில் அனைத்து இடங்களிலும் எவ்வாறு உள்ளது என்பதை ஆராயவேண்டும். அவ்வாறு இருந்தால் ஆக்கபூர்வமாக இருக்கும் என்றார்.