வடக்கு மாகாணசபைக்குள் திருடர்களால் சுற்றி வளைக்கப்பட்டு பிடிக்கப்பட்ட கள்ளன்

முதலமைச்சரை அகற்றும் திட்டத்தின் முதலாவது படி இன்று வடக்கு மாகாணசபை அமர்வில் சுமந்தரினின் அணியினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபை முதலமைச்சரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த விவசாய அமைச்சரான ஐங்கரநேசனுக்கு எதிராக இன்று பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இரணைமடு நீர்பாசன திட்டத்திம் தொடர்பிலான செயற்பாடுகள் , பாத்தீனிய ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகள் , பளை பிரதேசத்தில் நிறுவப்பட்ட காற்றாலை தொடர்பிலான விடயம் , சுன்னாக நிலத்தடி நீர் தொடர்பிலான செயற்பாடுகள் , மருதங்கேணி கடல்நீரை நன்னீர் ஆக்கும் செயற்பாடு , கார்த்திகை மர நடுகை , அனர்த்த நிவாரண விநியோகம் , உழவர் திருநாள் , மலர்க்கண்காட்சி , விவசாய தினம் , மண் தினம் , போன்றவை தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களுக்கு உரிய முறையில் அறிவிக்காமல் நடாத்தியமை மற்றும் இந்த விழாவுக்கான செலவீனங்களை வெளிப்படுத்தாமை , கூட்டுறவு துறையில் உள்ள முறைகேடுகளை சீராக்காமை , விவசாய துறையில் பல செயற்திட்டங்களை முன்னெடுக்காமை , சிறு குளங்களை புனரமைக்க மத்திய அமைச்சு அழைத்த போது அதனை நிராகரித்தமை , மூங்கில் , மல்லிகை போன்றவற்றை வவுனியா மாவட்டத்தில் நாட்ட அனுமதிகமை மற்றும் வவுனியா மாவட்டம் தொடர்ந்து விவசாய அமைச்சினால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை , போன்ற பல்வேறு முறை கேடுகளில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஈடுபட்டதாக மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் பிரேரணை ஒன்றினை மாகாண சபையில் முன் மொழிந்தார்.

அத்துடன் இந்தக்  குற்றசாட்டுக்கள்  தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விவசாய அமைச்சர் மீது விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி பிரேரணையை சமர்ப்பித்தார். அதவேளை இந்த பிரேரணை சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டதும் , உறுப்பினர்கள் சிலரும் விவசாய அமைச்சருக்கு எதிராக பல்வேறு குற்ற சாட்டுகளை முன் வைத்தனர். வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்தன் இந்தப் பிரேரணையை வழி மொழிந்துள்ளார்.

இந்தப் பிரேரணையானது வடக்கு மாகாண முதலமைச்சரை பதவியிலிருந்து அகற்றுவதற்கான முதலாவது நடவடிக்கை என சுமந்திரன ஆதரவாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் அண்மையில் சம்மந்தனைச் சந்தித்து,  வடக்கு மாகாணசபை முதலமைச்சரை பதவியில் இருந்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும் ‘தன்னால் நியமிக்கப்பட்ட முதலமைச்சரை தானே நீக்குவது பொருத்தமில்லாதது‘ என அவர்களுக்கு தெரிவித்துள்ளார். இதன் பின்னர் சுமந்திரன் தன்னுடன் வந்த மாகாணசபை உறுப்பினர்களுக்கு ‘நீங்கள் முதலமைச்சரை நீக்குவதற்காக அலுவல்களைப் பாருங்கள்‘ நான் அதற்கான நடவடிக்கையை தொடர்கின்றேன் என கூறியிருந்தார்.

இதன்படியே தமது ஆட்டத்தை சுமந்திரனின் ஆதரவான வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஆரம்பித்துள்ளனர். அதன் முதலாவது கட்டமாக வடக்கு மாகாண விவசாய அமைச்சரை சுமந்திரனின் ஆதரவு அணியினர் தமது பக்கத்திற்கு கொண்டுவர பெரும் பிரயத்தனம் செய்துள்ளனர். இருப்பினும் அதற்கு அவர் உடன்படவில்லை எனத் தெரியவருகின்றது. இதன் பின்னர் பல உறுப்பினர்களுடன் இவர்கள் தொடர்புபட்டு தமது பக்கத்திற்கு வருவதற்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் சுமந்திரன் பக்கம் வருவதற்கு லிங்கநாதன் பேரம் பேசியுள்ளார். அதாவது தனக்கு விவசாய அமைச்சர் பதவி தரவேண்டும் எனவும், தான் கண்டியில் உள்ள குண்டகசாலையில் விவசாயக் கல்வியை மேற்கொண்டிருந்ததாகவும் அவர்களுக்கு கூறியுள்ளார். அதற்கு சுமந்திரன் ஆதரவு அணியினர் உடன்பட்டுள்ளனர்.

இதன் பின்னர் நேற்று முதலமைச்சருடன் நடந்த ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் பின்னர் சுமந்திரன் ஆதரவு அணியினர் யுஎஸ் `ஹோட்டலில் சந்தித்து ஐங்கரநேசனுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆயத்தங்கள் செய்துள்ளனர்.

ஐங்கரநேசனுக்கு எதிராக கூறப்பட்டடுள்ள குற்றச்சாட்டுக்களில் கழிவு எண்ணை நீரில் கலந்தது, இரணை மடுத்திட்டம் தடுத்துநிறுத்தப்பட்டவை, கூட்டுறவு ஊழல்கள் போன்ற முக்கிய குற்றச்சாட்டுக்கள் ஐங்கரநேசன் பதவிக்கு வர முன்னரே இடம்பெற்று தற்போது ஐங்கரநேசனின் தலையில் சுமத்தபட்டதாகும். அத்துடன் ஏனைய குற்றச்சாட்டுக்கள் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஐங்கரநேசன் உடன்பட்டு நடக்கவில்லை என்பதற்காக மேற்கொள்ளப்பட்டதாக அறிய முடிகின்றது.

குற்றச்சாட்டுகளையும் மறுத்தார் விவசாய அமைச்சர்.

 வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக உறுப்பினர்களால் முன்வைக்கபட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மறுத்தார்.

 அனைத்தும் தன் மீது அபாண்டமாக குற்றம் சாட்டபடுகின்றது. இது வேணும் என்றே என் மீது சேறு பூசும் நடவடிக்கை. யாருக்கோ முதுகு சொறிந்து விடுவதற்காக என் மீது குற்றம் சாட்டுகின்றார்கள்.

 விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என கூறப்பட்ட விடயம் விவாதிக்கும் போது அதனை அவைத்தலைவர் தடுக்காது இருந்துள்ளீர்கள்.

 பொது பிரச்சனை என கூறி என் மீதான குற்ற சாட்டுக்களை உறுப்பினர்கள் முன் வைக்க வேண்டும் என அவைத்தலைவர் செயற்பட்டு உள்ளீர்கள்.

 அவைத்தலைவர் உங்களுக்கு கண்ணியமாக சபையை நடாத்த தெரியவில்லை. இந்த இரண்டரை வருடத்தில் அரை நாள் அமர்வை மாத்திரமே உபஅவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் நடாத்தி இருந்தார். அந்த அரை நாள் அமர்வு எவ்வளவு கண்ணியமாக நடந்தது

 இது வேணும் என்றே என் மீதான சேறு பூசும் நடவடிக்கைக்கு அவைத்தலைவர் துணை போயுள்ளார் என்பது வெளிப்படையாக தெரிகின்றது. என விவசாய அமைச்சர் தெரிவித்தார்.

இதே வேளை

ஐங்கரநேசன் மீது பாரிய ஊழல்  குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் இல்லையென்றாலும் முதலமைச்சருக்கு கடிவாளம் போட்டு அடக்குவதற்கு அல்லது முதலமைச்சரை பதவியில் இருந்து கழற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முதலாவது நடவடிக்கையே இன்றைய பிரேரணை என்பது அனைவருக்கும் புரிந்த ஒன்று என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை முதலமைச்சர் பதவியில் இருந்து அகற்றப்பட்டால் அல்லது வடக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் இடம்பெற்றால் தற்போதய வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் முதலமைச்சராகவும் லிங்கநாதன் விவசாய அமைச்சராகவும் சுமந்திரனின் ஆதரவாளர்களும் ஏனைய அமைச்சர்களாக வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக செய்திகள் கசிந்துள்ளன.