பலாலியில் பிரதமர் தலைமையில் தேசிய பொங்கல் விழா : ஜனாதிபதி பங்கேற்கவில்லை!

பலாலியில் பிரதமர் தலைமையில் தேசிய பொங்கல் விழா : ஜனாதிபதி பங்கேற்கவில்லை!யாழ்ப்பாணம், பலாலியில் இன்று இடம்பெற்ற தேசிய பொங்கல் விழா நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக் கொள்ளவில்லை . இறுதிவரை ஜனாதிபதியின் வருகை எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த போதிலும் அவர் வருகைத்தரவில்லை.

அந்தவகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பலாலி கிழக்கில் அமைந்துள்ள இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இனிதே நடைபெற்றன.

நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா, சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதனை தொடர்ந்து தற்போது யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கலை கலாசார நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

மேலும் நிகழ்வில், பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வையர், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.