ஏதோ ஆர்வக் கோளாறில் என் கட்சிக்காரன் ஸ்ரூடியோவில் போய் படம் எடுத்தது குற்றமா?

பொதுவாழ்கையில் ஈடுபடுபவர்களின் வெற்றி தோல்வியில் அவர்களின் உருவப்படம் முக்கிய பங்கு வகிக்கின்றது.

ஞானிகள் முதல் கள்ளச் சாமியார்கள் வரை...

போராளிகள் முதல் ஓட்டுப் பொறுக்கிகள் வரை...

இடதுசாரிகள் முதல் வலதுசாரிகள் வரை...

அவரவர் போட்டோக்கள் அவரவரின் நோக்கத்தை நோக்கிய பாதையில் பெரும் பங்கு வகிக்கின்றன.

ஒருமுறை இந்திராகாந்தி அவர்கள் பொதுத் தேர்தலில் தோல்வி கண்டார். காரணம் என்னவென்று கண்டறிய வெளிக்கிட்டால்...

அந்த முறை தேர்தல் போஸ்டர்களில் பயன்படுத்தப்பட்ட அவருடைய உருவப்படம் ஒரு "ராட்சக்ஷி" மாதிரி இருந்தது எனக் கண்டறியப்பட்டது.

எம்.ஜி.ஆர் தன்னுடைய உருவப்படங்களில் வலு உசார்.

அவருடைய அசிங்கமான அல்லது கோரமான உருவப்படம் ஏதாவது வெளியில் வந்திருந்தால் அந்த படத்தை எடுத்தவர், வெளியிட்டவர்களை ராச மரியாதையுடன் ராமாவரம் தோட்டத்துக்கு வரவழைத்து நையப்புடைத்து அனுப்பும் அளவிற்கு அவர் போட்டோ விசயத்தில் கவனமாக இருந்தார்.

ஓஷோ அவர்களுடைய சீடர்கள் ஓஷோவின் உருவப் பட விசயத்தில் மிகவும் கவனமாக இருந்தார்கள்.

ஓஷோ போகும் இடமெல்லாம் அவரை அழகாக படம் எடுப்பதற்கென மிகத் திறமை வாய்ந்த புகைப்படக் கலைஞர்களை அவர்கள் தம் சீடர்களுக்கள்ளேயே இனம் கண்டு உருவாக்கி இருந்தார்கள். ஓஷோவின் புத்தகங்களின்பால் இன்றுவரை பலர் கவரப்பட முதற் காரணமாக இருப்பது அவருடைய உருவப்படங்களே. 
அந்தளவுக்கு ஓஷோவின் போட்டோக்கள் ஒவ்வொன்றிலும் "ஞானக்களை" இருக்கும்.

ஈழத்து சூழலில் முதன் முதலில் உருவப்படத்துக்கும் புகைப்படக்கலைக்கும் முக்கியத்துவம் கொடுத்தவர்கள் விடுதலைப் புலிகளே. 

அவர்கள் வெளியீடாக முதன் முதலில் வெளிவந்த "அரச பயங்கரவாதமும் ஆயுதப் போராட்டமும்" என்னும் புத்தகத்தின் உள் முதற் பக்கத்தில் கலரில் அச்சிடப்பட்டிருந்த தலைவர் பிரபாகரன் அவர்களின் உருவப் படத்தைப் பார்த்து பரவசம் அடையாதோர் ஒரு சிலரே. 

அதன் பிறகு வெளிவந்த செல்லக்கிளி அம்மான், சங்கர், சீலன் போன்றோரது உருவப் படங்களும் பெரும் அதிர்வை ஏற்படுத்தின. பின்னர் அவர்களுடைய பிரசுரங்களில் அடிக்கடி வெளிவந்த தலைவர் பிரபாகரன் அவர்களின் படம் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை விளைவித்தன.

"லங்கா ராணி அருளர்" (MIA அவர்களின் தந்தை) அவர்கள் தோழர் பத்மநாபா அவர்களையும் விடுதலைப்புலிகளைப் போல இந்த மாதிரி போட்டோ விடயத்தில் கவனம் எடுக்கும் படி ஆலோசனை கூறியதற்கிணங்க ஈபிஆர்எல்எஃப் இயக்கமும் நாபா அவர்களின் படங்களை வெளியிட தொடங்கியதாக ஒரு கதை உண்டு. 

உண்மையில் நாபா அவர்களிடம் போதிய வசீகரமும் ஒரு போராளித்தலைவனுக்குரிய தோற்றமும் இருந்தது. ஆயினும் அவர்களிடம் சிறந்த புகைப்படக் கலைஞர்கள் இல்லாததாலோ என்னவோ நாபாவிடம் இருந்த வசீகரத்தை ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தால் முறையாகப் பயன்படுத்த முடியவில்லை.

இங்கு சொல்ல வாற விசயம் என்னவென்றால்,

பொதுவாழ்கையில் ஈடுபடுபவர்கள் தங்கள் உருவப்படத்தை தம் வெற்றிக்கான ஒரு உபாயமாகப் பயன்படுத்துவதில் தப்பில்லை. ஆனால் அதற்கு இரண்டு விசயங்கள் முக்கியம்...

1. உங்கள் பொது வாழ்க்கை சார்ந்து கொஞ்சமாவது நீங்கள் உண்மையாக இருக்க வேணும். ஏனெனில் போட்டோ அகத்தின் அழகை எப்படியோ காட்டி கொடுத்துவிடும். குறைந்தபட்சம் எம்.ஜி.ஆர் இடம் இருந்த அளவுக்காவது மக்கள் நலன் சார்ந்த அக்கறை வேணும்.

2. போஸ் குடுத்து போட்டோ எடுக்கிறதெண்டாலும் ஒருகாலமும் "ஸ்டூடியோவில்" போய் திரைச் சீலைக்கு முன்னால் நின்று போஸ் குடுத்து போட்டோ எடுக்காதேங்கோ.

அது அசிங்கத்திலும் அசிங்கம்!

நன்றி: காசிநாதர்