ஓசியில் பிச்சையெடுக்கும் பொலிஸாரால் யாழ்ப்பாணத்து கடைக்காரர்கள் அனுபவிக்கும் நரக வேதனை

யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பல பொலிஸார் தங்களது பொலிஸ் நிலையங்களுக்கு அருகில் உள்ள சாப்பாட்டுக் கடைகள், பான்சி கடைகள், ஹார்ட்வெயர் கடைகள் என்று பலவற்றுக்கும் சென்று ஓசியில் பொருட்களை கேட்டு வாங்கி கடை உரிமையாளர்களை தொல்லைப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நல்லாட்சி அரசில் இதன் எண்ணிக்கை குறைந்து விட்டாலும் மஹிந்த  காலத்தில் இங்குள்ள பொலிஸ் நிலையங்களில் பணியாற்றிய பல பொலிஸ் உயரதிகாரிகள் கூட அருகிலுள்ள கடைகளில் பெரும் தொகைக்கு பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு காசு தராமல் சென்ற சம்பவங்கள் ஏராளமாக நடந்தேறியுள்ளன. 

இதனால் பல கடைக்காரர்கள் பெரும் நட்டமடைந்து கடையைப் பூட்டிவிட்டு பெரும் கடனாளியாக சென்ற சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.                  

குறிப்பாக, பொலிஸார் காக்கி உடையிலும், சிவில்   உடையிலும் சென்று உரிமையாளர்களை அச்சுறுத்தி பொருட்களை கொள்வனவு செய்வதாக தெரியவருகிறது.   பல கடைக்காரர்கள் எதற்கு வீண் பிரச்சினை என்று பொலிஸார் கேட்க்கும் பொருட்களை உடனே கொடுத்து விடுகின்றார்கள். 

சில கடைக்காரர்கள் பொலிஸார் சொல்லும் பொருட்களை வழங்க பின்னடித்தால் அவர்களுக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன. சிலரை பொலிஸார் கேவலமான வார்த்தைகளால் அடிக்கடி திட்டும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.   

இது யாழ்ப்பாணம், வடமராட்சி, வலிகாமம், தென்மராட்சி, தீவகம் என்று எங்கும்   பரவலாக நடந்துள்ளது. 

இலங்கை அரசாங்கத்தின் வேதனத்தை மாதா மாதம் பெறும் ஊழியரான பொலிஸார், இப்படி தமது அதிகாரத்தை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி தமிழரின் வாழ்வாதாரத்தை சிறுக சிதைப்பதனை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது.

மஹிந்த காலத்திலேயே இப்படியான சம்பவங்கள் யாழில் அதிகம் பதிவாகியுள்ளன. 

கடைகளில் காசு கொடுக்காமல் பொருட்களை பிச்சையெடுக்கும் பொலிஸார் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியது தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கடமையாகும். 

பொலிஸ் ஆணைக்குழு ரகசிய விசாரணை ஒன்றை ஆரம்பிக்கும் பட்சத்தில் சாட்சியமளிக்க ஏராளமான கடை உரிமையாளர்கள் தயார் நிலையில் இருக்கின்றார்கள்.