பேய் யை விரட்டிக் கலைத்த வடமராட்சி பொண்ணு (Video)

நேற்று (07.12.2016) வியாழக்கிழமை பின்னிரவு விடுப்பு பார்க்கும் நோக்கில் பருத்தித்துறை கடலில் ஒரு படகில் மூன்று பெண்கள் பயணம் செய்திருக்கிறார்கள். வடமாட்சி, தென்மராட்சி, வலிகாமம் பகுதிகளை சேர்ந்த இந்த மூன்று பெண்களும் பயணித்த குறித்த படகில் திடீரென்று ஒரு பேய் ஏறி குதித்துள்ளது. மூன்று பெண்களும் பயந்து நடுங்கிப் போனார்கள். பேய் தன் கோரமான பல்லைக் காட்டிச் சிரித்துள்ளது.

'உங்கள் மூன்று பேரையும் சாப்பிடப் போகிறேன்' என்று பேய் கூறியுள்ளது. மூன்று பெண்களும் தங்களுடைய உயிர்களை காப்பாற்றிக் கொள்ள பேயிடம் கெஞ்சினார்கள். ஆனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது. 'உங்களில் ஒருத்தியாவது புத்திசாலியாக இருந்தால்' உயிர்ப் பிச்சை கொடுப்பேன்.

அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை. நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில் எதையாவது தூக்கிப் போட வேண்டும். அதை நான் எடுத்து வந்து விட்டால் நீங்கள் தோற்றுப் போனதாய் அர்த்தம். சோதனைக்கு மூன்று பெண்களும் ஒப்புக்கொண்டனர்.

தென்மராட்சி பொண்ணு தன் கையில் போட்டிருந்த மோதிரத்தை எடுத்து கடலில் வீசினாள். பேய் உடனே கடலில் குதித்து அதைத் தேடி எடுத்து வந்தது.

வலிகாமம் பொண்ணு தன் கழுத்தில் இருந்த செயினை கழற்றி கடலில் வீசினாள். பேய் அதையும் தேடிப் பிடித்து கொண்டு வந்து கொடுத்தது. பேய் சிரித்தது...

'இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி இருப்பது நீ மட்டும் தான். நீ எதை வீசப் போகிறாய்?'

உடனே வடமாட்சி பொண்ணு தன்னிடம் இருந்த குடி தண்ணீர் போத்திலை எடுத்து, அதற்குள் இருந்த நீரை  கடலுக்குள் ஊற்றி விட்டு,

'இப்போ நான் ஊற்றிய அந்த குடி தண்ணீரை கொண்டு வா' என்று கூறியிருக்கிறாள். திகைத்துப் போன பேய்  அவ்விடத்திலிருந்து ஓட்டம் பிடித்து தலை மறைவாகியுள்ளது.

இதற்காகத் தான், யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பெரியவர்கள்... 

'எத்துறை போனாலும் வடமராட்சி போகாதே. அப்பிடியே வடமராட்சி போனாலும் பணிந்து போ. பேய்க்கே தண்ணி காட்டுபவர்கள் வடமராட்சி வாசிகள்' என்று கூறுகிறார்கள்.