ஜெயலலிதாவை 'எம்.ஜி.ஆரின் வாரிசாக' மக்கள் ஏற்றுக்கொண்டது ஏன்? (Photos)

எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியை ஏற்றுக்கொள்ளாமல், ஜெயலலிதாவை மக்கள் எம்.ஜி.ஆரின் வாரிசாக ஏற்றுக்கொண்டது ஏன்? என்பது பற்றிய தகவல் வருமாறு:

எம்.ஜி.ஆரை திருமணம் செய்துகொண்ட ஜானகி, சினிமாவில் இருந்து விலகி  அரசியல் ஆர்வமும் இல்லாமல் நல்ல குடும்ப தலைவியாக மட்டுமே விளங்கினார்.  எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு சிறிது காலம் முதல்வராக இருந்ததை தவிர... ஆனால் ஜெயலலிதாவின் வளர்ச்சி அப்படிப்பட்டதல்ல...

அரசியல் பிரவேசம்: 1981ம் ஆண்டு மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடத்த தீர்மானித்தார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அதை சிறப்பாக நடத்தி  முடிக்கும் பொறுப்பை, செய்தி விளம்பரத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனிடம் ஒப்படைத்தார் எம்.ஜி.ஆர். அந்த மாநாட்டில் காவிரி தந்த கலைச்செல்வி  என்னும் நாட்டிய நாடகம் நடைபெறுவதாக இருந்தது. அந்த நாடகத்தில் நடிப்பதற்காக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த ஜெயலலிதாவை அழைத்து வந்தார்  ஆர்.எம்.வீரப்பன். அந்த வகையில் ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசத்திற்கு வித்திட்டவர் ஆர்.எம்.வீரப்பன்தான். 

பிறகு சுமார் ஒன்றரை வருடம் கழித்து அதாவது 1982ம் ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார் ஜெயலலிதா.  பிறகு ஜூலை மாதம், தான் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க கவர்ச்சியான முகம் தேவைப்பட்டது எம்.ஜி.ஆருக்கு. அப்போது அவரின்  நினைவிற்கு வந்தவர் ஜெயலலிதா. மேடைக்கு மேடை சத்துணவு திட்டத்தையே பேசி அத்திட்டத்திற்கு புகழ் சேர்த்ததோடு மட்டுமல்லாமல் அந்த திட்டத்திற்கு  நன்கொடையாக ரூ.40 ஆயிரம் வழங்கினார் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடத்தில்: சத்துணவு திட்டத்தின் மீது ஜெயலலிதாவுக்கு இருந்த அக்கறையை பார்த்த எம்.ஜி.ஆர். அவருக்கு சத்துணவு திட்ட உயர்மட்ட  குழுவிலும் இடம் கொடுத்தார். தொடர்ந்து இவரை கவனித்து வந்த எம்.ஜி.ஆர். 1983ல் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தார். கொள்கை பரப்பு  செயலாளரான ஜெயலலிதா இன்னும் தீவிரமாக தமிழகத்தை சுற்றி வந்தார். அப்படி சுற்றிய ஜெயலலிதாவிற்கு செல்லும் இடமெல்லாம் அமோக வரவேற்பு கொடுத்து  தொண்டர்கள் அசத்தினர். லோக்கல் கட்சி நிர்வாகிகளும் எம்ஜிஆருக்கு அடுத்தபடியான மரியாதையை ஜெயலலிதாவுக்கு கொடுக்க தொடங்கினர்.

எம்.பி ஆனார்: பிரசார மேடைகளில் அனல் தெறிக்கும் பேச்சுக்கள் மூலமும், பிரசாரங்கள் மூலமும் மக்களை வசீகரிக்க ஆரம்பித்தார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரின்  உத்தரவிற்கிணங்க ஜெயலலிதாவிற்கு அந்த பேச்சுக்களை எழுதி தந்தவர் வலம்புரி ஜான். ஜெயலலிதாவிடம் இருந்த பேச்சு திறமையையும், அபாரமான ஆங்கிலம்  மற்றும் இந்தி புலமையையும் கவனித்த எம்ஜிஆர், இவர்தான் டெல்லி அரசியலுக்கு சரியான ஆள் என்று தீர்மானித்து ராஜ்யசபா உறுப்பினராக்கினார். மேலும்  ராஜ்யசபா அதிமுக துணைத்தலைவராகவும் நியமித்தார். அங்கு இவர் பேசிய பேச்சுக்கள் பிரதமர் இந்திரா காந்தியின் பாராட்டையும் பெற்றது.

கிளம்பிய எதிர்ப்புகள்: ஏற்கனவே ஜெயலலிதாவின் வளர்ச்சியால் பொருமிக்கொண்டிருந்தவர்கள் மத்தியிலும் இது மேலும் பொறாமையை ஏற்படுத்தியது. கட்சியில்  எத்தனையோ சீனியர்கள் இருக்கும்போது ஜெயலலிதாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் எம்ஜிஆர் என்ற புகைச்சலும் கிளம்பியது. நேரடியாகவே எம்ஜிஆரை  குற்றம் சாட்டினார் அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.டி.ேசாமசுந்தரம். அதனால் கோபமுற்ற எம்ஜிஆர் எஸ்.டி.சோமசுந்தரத்திடம் இருந்த முக்கிய  துறைகளை பறித்துக்கொண்டு உணவுத்துறையை கொடுத்து டம்மியாக்கினார். அவரின் ஆதரவாளர்களின் கட்சி பதவிகளும் பறிக்கப்பட்டது.

இதற்கெல்லாம் காரணம் ஜெயலலிதா தான் என்று நினைத்த எஸ்.டி.எஸ்., கட்சியையும், ஆட்சியையும் குறை சொன்னார். இதனால் மேலும் கோபமான எம்ஜிஆர்  எஸ்.டி.சோமசுந்தரத்தை அமைச்சரவையில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கினார். (ஜெயலலிதாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் எம்ஜிஆர் என்று குற்றம்  சாட்டியதால் கட்சியில் இருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்ட எஸ்.டி.எஸ். பின்னாளில் அதே ஜெயலலிதாவின் அமைச்சரவையில் வருவாய்த்துறை  அமைச்சராக இடம் பிடித்தது தனி வரலாறு).

கட்சியில் ஒதுக்கப்பட்டார்: இந்த சம்பவத்துக்கு பிறகு ஜெயலலிதா பற்றி எம்ஜிஆரிடம் புகார் செய்ய மற்றவர்கள் பயந்தார்கள். ஆனாலும் ஜெயலலிதாவின் அசுர  வளர்ச்சி மற்றவர்களின் கண்ணை உறுத்தவே செய்தது. ஜெயலலிதாவை ஓரங்கட்ட நாள் பார்த்துக் கொண்டு இருந்தனர். அந்த நாளும் வந்தது. ஆம்... எம்ஜிஆரின்  உடல் நலம் குன்றியது. சிறுநீரக கோளாறு, பக்கவாதம் என்று அடுத்தடுத்து நோய் தாக்கியது. இப்படி எம்ஜிஆரின் உடல்நிலை சிக்கலான சமயத்தில் அவரை  பார்ப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஜானகி, நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி, ஹண்டே போன்ற மிகச்சிலரே அவரின் பக்கத்தில்  அனுமதிக்கப்பட்டனர். மறந்தும் கூட ஜெயலலிதாவை அனுமதிக்கவில்லை. இது மூத்த அமைச்சரின் சதி என்று கண்டனம் தெரிவித்தார் ஜெயலலிதா. மேல்  சிகிச்சைக்காக எம்ஜிஆர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த நேரத்தில் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்  ராஜீவ் காந்தி. அப்போதே தமிழக சட்டசபையையும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த முடிவு செய்தனர் ஆர்.எம்.வீரப்பனும், நெடுஞ்செழியனும். அதற்கான  அனுமதியையும் எம்ஜிஆரிடம் பெற்றனர். அப்போது சுத்தமாக ஓரங்கப்பட்டிருந்தார் ஜெயலலிதா.

ஓரங்கட்டப்படுகிறோம் என்பது புரிந்துவிட்டது ஜெயலலிதாவுக்கு. நாம் இப்படியே இருந்தால் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தி விடுவார்கள் என்று சுதாரித்துக்  கொண்டார் ஜெயலலிதா. எம்ஜிஆர் அமெரிக்காவில் இருக்கிறார். அதுவும் படுத்தபடுக்கையாக. அப்படியென்றால் தேர்தல் பிரசாரத்துக்கு யார் போவது? எம்.ஜிஆரின் இடத்தை நிரப்பப்போவது  யார்? மக்களை திரட்டுவது எப்படி? பிரசாரத்துக்கு புறப்படுவதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்தார் ஜெயலலிதா. ஆனால் அதிமுக தலைவர்கள், `ஜெயலலிதா  பிரசாரம் செய்யப்போவதில்லை’’ என்று பத்திரிகைகளில் பேட்டி கொடுத்திருந்தனர். செய்தியை படித்தார். கொடுத்தது யார் என்று ஓரளவு யூகிக்க முடிந்தது  ஜெயலலிதாவால். 

இதை ஆர்.எம்.வீரப்பன்தான் கொடுத்திருக்க வேண்டுமென தீர்மானித்தார். அவர் அப்படி நினைக்கவும் காரணம் இருந்தது.அதாவது, உண்மையில் எம்ஜிஆர் அமெரிக்காவில் இருந்தபோது பெயருக்குத்தான் நிழல் முதல்வராக நெடுஞ்செழியன் இருந்தார். மற்றபடி சகல அதிகாரமும்  ஆர்.எம்.வீரப்பன் வசமே இருந்தன. சகலமும் என்றால் கட்சி நிர்வாகம் தொடங்கி ஆட்சி, தேர்தல், கூட்டணி, வேட்பாளர்கள், நிதி, பிரசாரம் அனைத்துமே அவருடைய  கட்டுப்பாட்டில்தான் இருந்தன. பிரசாரத்துக்கு யாரை எங்கே அனுப்பலாம் என்பதை ஆர்.எம்.வீரப்பன்தான் முடிவு செய்தார். அந்த சமயத்தில் ஜெயலலிதாவுக்கும், ஆர்.எம்.வீரப்பனுக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. ஏற்கனவே ஒருமுறை பிரசாரத்திற்கு ஆர்.எம்.வீரப்பன்  போகாததால் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் என்ற முறையில் அவருக்கே நோட்டீஸ் அனுப்பியிருந்தார் ஜெயலலிதா. 

எம்ஜிஆரிடம் தனக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தி கட்சிக்குள் ஜெயலலிதா அதிகாரம் செலுத்துவதில் ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட முக்கிய  தலைவர்கள் பலருக்கும் விருப்பம் இல்லை. பலத்த அதிருப்தியில் இருந்தனர். தங்களுடைய அதிருப்தியை எம்ஜிஆரிடம் நேரடியாக சொல்ல முடியவில்லை,  தவித்தனர். தகுந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தனர். தற்போது கிடைத்துவிட்டது. எந்த காரணத்தை முன்னிட்டும் ஜெயலலிதாவை தேர்தல் பிரசாரத்துக்கு அனுப்பக்கூடாது. உமியளவு வாய்ப்பு கிடைத்தாலும் அதைக்கொண்டு உச்சத்துக்கு பறந்துவிடக்கூடியவர் ஜெயலலிதா. அதற்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது.  ஓரங்கட்டியே தீர வேண்டும் என்று முடிவு செய்து விட்டனர். அதன் எதிரொலியே ஜெயலலிதா பிரசாரம் செய்ய மாட்டார் என்று பத்திரிகை செய்தியாக அதிமுக  சார்பிலே வெளியிடப்பட்டது. 

தடைகளை தகர்த்தார்: தன்னை வலுக்கட்டாயமாக ஓரம் கட்டப்பார்க்கிறார்கள் என்றதும் திமிறிக்கொண்டு எழுந்துவிட்டார் ஜெயலலிதா. 1984ம் ஆண்டு டிசம்பர் மாதம்  ஆண்டிப்பட்டியில் தொடங்கியது ஜெயலலிதாவின் பிரசாரம். அடுத்தடுத்து நெல்லை, மதுரை, ராமநாதபுரம், கோவை, ஈரோடு, சேலம் என்று மொத்தம் 26 நாட்கள்  பிரசாரம் செய்தார். மக்களிடம் நேரடியாக உரையாடினார். எம்.ஜி.ஆரை பற்றி பேசினார். எம்ஜிஆரின் உடல்நிலை குறித்த எதிர்க்கட்சிகளின் தவறான பிரசாரம் பற்றி  பேசினார். வாக்காளர்களிடம் கேள்விகேட்டு பதில் பெறும் வித்தியாசமான பிரசாரத்தை மேற்கொண்டார். அது அப்போது சூறாவளி சுற்றுப்பயணமாக மக்களிடம்  பேசப்பட்டது.

எம்ஜிஆர் பிரசாரம் செய்யாத குறையை தனி ஆளாக நின்று ஜெயலலிதா ஈடுகட்டியதாக பத்திரிகைகள் எழுதியது. அந்த தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி கிடைத்தது.  153 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 132 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 62 இடங்கள் கிடைத்தது. இந்த தேர்தலில்தான் எம்ஜிஆர் அமெரிக்க மருத்துவமனையில் இருந்தே ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 25  தொகுதியிலும், அதிமுக 12 தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்தது.

இந்த வெற்றிக்கு மேலும் சில காரணங்கள் இருந்தது. எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருக்கும்போது அவர் நடப்பதையும், கைகாட்டுவதையும்,  சாப்பிடுவதையும் வீடியோ காட்சிகளாக்கி, அதை கச்சிதமாக எடிட் செய்யப்பட்டு பிரசாரத்திற்கு பயன்படுத்தினர் அதிமுக தலைவர்கள். கூடவே அப்போது  படுகொலையான இந்திரா காந்தியின் இறுதி ஊர்வல காட்சிகளும் அந்த வீடியோவில் இணைக்கப்பட்டது.பலமிக்க தலைவரானார்: தன்னை சுற்றி பலமாக எதிர்ப்பு வலை பின்னப்படுகிறது என்று தெரிந்ததும் ஆவேசப்பட்டு எழுந்து,  பிரசாரம் செய்து அந்த எதிர்ப்பு  வலையை அறுத்தெரிந்தார் ஜெயலலிதா. தேர்தலில் பெற்ற வெற்றியை ஜெயலலிதா ஆதரவாளர்கள் கொண்டாடினர். ஆம், அதிமுகவில் அப்போது  ஜெயலலிதாவிற்கென்று அமைச்சர்கள்,  எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் என்று ஒரு கோஷ்டி உருவாகியிருந்தது.

சிகிச்சை முடிந்து அமெரிக்காவில் இருந்து திரும்பிய எம்ஜிஆர் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் எம்ஜிஆருக்கு உடல்நலக்  கோளாறு ஏற்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். எம்ஜிஆர் மறைவையடுத்து அரசு நிர்வாகத்தை கவனிக்க நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக  பொறுப்பேற்றார். நிரந்தர முதல்வராக தானே போட்டியிடப்போவதாகவும் அவர் அறிவித்தார். தானே முதல்வர் பதவிக்கு போட்டியிடப்போவதாக நெடுஞ்செழியன்  அறிவித்தாலும், அதை ஆர்.எம்.வீரப்பன் ஏற்றுக்கொள்ளவில்லை. எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாளை முதலமைச்சர் ஆக்கப்போவதாக அவர் அறிவித்தார்.  இதனால் அதிருப்தி அடைந்த நெடுஞ்செழியன் ஜெயலலிதாவுடன் இணைந்தார்.

ஜானகியுடன் போட்டி: நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு, பண்ருட்டி ராமச்சந்திரன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அரங்கநாயகம் போன்ற ஜெயலலிதாவின்  ஆதரவாளர்கள் ஒன்றுகூடி அதிமுகவின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்தனர். இதை ஜானகி, ஆர்.எம்.வீரப்பன் போன்றோர் கடுமையாக  எதிர்த்தனர். அந்த நேரத்தில் அதிமுக எம்எல்ஏக்களில் 98 பேர் ஜானகிக்கு ஆதரவாகவும், 29 பேர் ஜெயலலிதாவிற்கும் ஆதரவாகவும் இருந்தனர். ஜானகி ஆதரவு எம்எல்ஏக்கள் அணி மாறிவிடக் கூடாதென்று ஒரு ஓட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

பின் ஜானகி ஆதரவு எம்எல்ஏக்களை அப்போதைய கவர்னர் குரானா முன் நிறுத்தி ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார் ஆர்.எம்.வீரப்பன்.  அதன்படியே ஜானகியை ஆட்சியமைக்க அழைத்தார் கவர்னர் குரானா. மூன்று வாரத்திற்குள் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறும் கட்டளையிட்டார்.1988ம் ஆண்டு ஜனவரியில் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் ஜானகி. 

இரு அணிகளில் ஜானகிக்கு ஆதரவு அதிகமிருந்தாலும் மைனாரிட்டி அரசாகவே ஜானகி  அரசு இருந்தது. 3 வாரத்திற்குள் வேறு மெஜாரிட்டியை நிரூபித்தாக வேண்டும். 62 இடங்கள் வைத்துள்ள காங்கிரஸ் ஆதரித்தால் போதும், ஆட்சி பிழைத்துக்  கொள்ளும் என்று முடிவு செய்த ஆர்.எம்.வீரப்பன், நடிகர் சிவாஜி கணேசன் மூலம் ராஜீவ் காந்திக்கு தூது விட்டார். ஆனால், பிளவுபட்ட அதிமுகவை  ஆதரிக்கப்போவதில்லை என்று ராஜீவ் கூறி விட்டார். இதற்கிடையில் ஜெயலலிதாவும் டெல்லி சென்று ராஜீவ் காந்தியிடம் ஆதரவை கோரினார். ஜெயலலிதாவிடமும்  அதே பதிலை சொன்னதுடன், சட்டசபையில் ஜானகியை எதிர்த்து காங்கிரஸ் வாக்களிக்கும் என்றும் அறிவித்தார்.

1988ம் ஆண்டு ஜனவரி மாதம் 28ம் தேதி சட்டமன்றம் கூடியதும், ஜெயலலிதா - ஜானகி அணிகளுக்கு இடையே பெரும் கலவரம் வெடித்தது. சட்டசபையில் இருந்த  மைக், ஒலிபெருக்கிகள் உடைக்கப்பட்டன. பல எம்எல்ஏக்களின் மண்டை உடைந்து ரத்தம் ஓடியது. கட்சி மாறி வாக்களித்ததால், கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக 33  அதிமுக எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்வதாக சபாநாயகர் பி.எச்.பாண்டியன் அறிவித்தார். ஜானகி கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றிவிட்டதாகவும்  அறிவித்தார். ஆனால், சட்டம்-ஒழுங்கு கெட்டுபோய்விட்டதாக கூறி ஜானகி ஆட்சி வெறும் 24 நாட்களில் கலைக்கப்பட்டது.

தேர்தலில் போட்டி: அதன்பின் ஒரு வருடம் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது. இதற்கிடையில் ஜெயலலிதா அணியில் குழப்பம் ஏற்பட்டது. ஜெயா  அணியில் செயல்பட்ட நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு, பண்ருட்டி, அரங்கநாயகம் போன்ற தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக திரும்பினர். கட்சிக்கு வசூல்  செய்யப்பட்ட ஒன்றரை ேகாடி ரூபாய்க்கு கணக்கு கேட்ட இவர்கள் ஜெயா அணியில் இருந்து நீக்கப்பட்டனர். தங்களை நீக்க ஜெயலலிதாவுக்கு அதிகாரமில்லை  என்று கூறி இவர்கள், நால்வர் அணி என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்தனர்.நால்வர் அணி சிறிது காலத்துக்குள்ளாகவே மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்தது.

1989ம் ஆண்டு ஜனவரியில் தமிழக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக இரண்டு பிரிவுகளானதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஜானகி  அணிக்கு இரட்டைப்புறா சின்னமும், ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும் ஒதுக்கப்பட்டது. ஜானகியுடன் சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணியும்,  ஜெயலலிதாவுடன் கம்யூனிஸ்ட்டும் கூட்டணி அமைத்தனர். திமுக பலமான கூட்டணி அமைத்தது. காங்கிரஸ் ஜெயித்தால் மூப்பனார் முதல்வர் என்ற கோஷத்துடன்  தனித்து போட்டியிட்டது.இந்த தேர்தல் முடிவில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. 198 இடங்களில் போட்டியிட்ட ஜெயலலிதா அணிக்கு 27 இடங்களும், 175  இடங்களில் போட்டியிட்ட ஜானகி அணிக்கு 1 இடமும் கிடைத்தது. சேரன்மகாதேவியில் போட்டியிட்ட பி.எச்.பாண்டியன் மட்டுமே வெற்றி பெற்றார்.

ஆண்டிப்பட்டியில் போட்டியிட்ட ஜானகி அம்மாள் 22,647 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் ஆசையனிடம் தோல்வியை தழுவி மூன்றாம் இடத்திற்கு  தள்ளப்பட்டிருந்தார். அதே நேரம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா 22,191 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அங்கு ஜெயலலிதாவை  எதிர்த்து போட்டியிட்ட ஜானகி அணி வேட்பாளர் வெண்ணிறஆடை நிர்மலா வெறும் 1,512 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.எம்.ஜி.ஆரின் வாரிசு: அந்த தேர்தலில் ஜானகி அணிக்கு மொத்தம் 21,78,071 (9 சவீதம்) வாக்குகளும், ஜெயலலிதா அணிக்கு மொத்தம் 50,54,138 (21 சதவீதம்) வாக்குகளும்  கிடைத்திருந்தது. இந்த தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ஜானகி, தனது அணியை ஜெயலலிதா அணியுடன் இணைத்துவிட்டு அரசியலில் இருந்தே ஒதுங்கிவிட்டார்.  

அதன்பிறகே ஒருங்கிணைந்த அதிமுகவின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா ஆனார். இரட்டை இலை சின்னமும் ஜெயலலிதாவுக்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து  தமிழக அரசியலில் எம்ஜிஆரின் வாரிசாக ஜெயலலிதா பொதுமக்களால் அங்கீகரிக்கப்பட்டு, பிரகாசித்தார். அன்று முதல் இன்று வரை அதாவது சுமார் 27 ஆண்டுகள்  அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், ஆறு முறை தமிழக முதல்வராகவும் இருந்துள்ளார் ஜெயலலிதா.

சத்துணவு திட்டத்தின் மீது ஜெயலலிதாவுக்கு இருந்த அக்கறையை பார்த்த எம்.ஜி.ஆர். அவருக்கு சத்துணவு திட்ட உயர்மட்ட குழுவிலும் இடம் கொடுத்தார். தொடர்ந்து  இவரை கவனித்து வந்த எம்.ஜி.ஆர். 1983ல் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தார். கொள்கை பரப்பு செயலாளரான ஜெயலலிதா இன்னும் தீவிரமாக  தமிழகத்தை சுற்றி வந்தார். அப்படி சுற்றிய ஜெயலலிதாவிற்கு செல்லும் இடமெல்லாம் அமோக வரவேற்பு கொடுத்து தொண்டர்கள் அசத்தினர்.