காலமானார் முதல்வர் ஜெயலலிதா! (Photos)

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார் முதல்வர் ஜெயலலிதா. 

கடந்த செப்டர்ம்பர் மாதம் 22-ஆம் தேதி நீர்ச்சத்துகுறைபாடு காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டது. 

இடையிடையே சில முன்னேற்றங்கள் இருப்பதாக அதிமுகவினரும், அப்பல்லோ மருத்துவ அறிக்கைகளும் கூறினாலும், அவரால் இயற்கையாக சுவாசிக்க முடியாமல் டிரஸ்கியாஸ்டமி மூலமே சுவாசித்து வந்தார். உடல் நிலை ஓரளவு சரியான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு அவர் மாற்றப்பட்ட நிலையில், கடந்த 04-12-2016 அன்று மாலை 5.30 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. 

அவருக்கு மாரடைப்பு காரணமாக இதயத்தில் ஏற்பட்ட அடைப்பைச் சரி செய்ய இதயத்தை மீண்டும் இயங்க வைக்க extracorporeal membrane heart assist device மூலம் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.ஆனால் 20 மணி நேரம் கடந்தும் அதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. சென்னை அப்பல்லோ மருத்துவர்கள் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேலுடன் ஆலோசனை நடத்தியதோடு, எய்ம்ஸ் மருத்துவர்களையும் அவசரமாக அழைத்தனர். 

ஆனாலும் எந்த வித சிகிச்சைக்கும் முதல்வரின் உடல் நிலை ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில் ரிச்சர் பேலின் அறிக்கையும், அப்பல்லோ மருத்துவ அறிக்கையும், அப்பல்லோ இயக்குநரும், பிரதாப் ரெட்டியின் மகளுமான டாக்டர் சங்கிதா ரெட்டியின் டுவிட் செய்திகளும் உறுதி செய்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75-வது நாள் அவர் உயிர் பிரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.