யாழ்ப்பாணத்தின் 'சங்கடக் கொட்டிலுக்குள்' நடப்பது என்ன? (Photos)

'சங்கடம்' எனப்படுவது? உங்களில் எத்தனை பேருக்கு இது தெரியும்?

இவ்வளவுக்கும் எங்கள் வீடு ஒரு மாடமாளிகை அல்ல. அது ஒரு "செமி - கல்வீடு".

1987 வடமராட்சி லிபரேஷன் ஒப்பரேஷனோடை, சரியான பராமரிப்பு இல்லாமல் நாங்கள் வாழ்ந்த வீடு படிப்படியாக தேய்ந்து, சிதைந்து 10 வருசத்துக்கு முன்னமே அத்திவார மட்டத்துக்கு வந்துவிட்டது.

வளவு பற்றைகளாலும், வடலிகளாலும் மூடப்பட்டு வீடு இருந்த இடத்தை தேடிப் பிடிக்க வேண்டிய நிலை.

எங்கள் வீட்டின் இரு மருங்கிலும் இருக்கும் அம்மாவின் சகோதரங்களின் வளவுகள் உட்பட "தகனை" என அழைக்கப்படும் அந்தக் குறிச்சி முழுவதற்க்கும் இதே நிலைதான்.

பெரும் செல்வம் இல்லாவிட்டாலும் ஒருகாலத்தில் செழிப்பாகவும் கலகலப்பாகவும், களையோடும், சின்னச் சின்ன கலவரங்களோடும், குய்யோ மய்யோ என்று இருந்த அந்தக் குறிச்சி காடாகிப் போனது. பாம்புகள் தங்கள் குடித்தனத்தை சுதந்திரமாக நடத்த வசதியாகிப் போய் அக்கம்பக்கத்தாரை அப்பப்போ மிரட்டவும் செய்தது.

போதாக்குறைக்கு கூப்பிடு தூரத்தில் இராணுவ முகாம்!

அதோடை பக்கத்து ஊர் இளம் சிங்கங்கள் வந்து Lion Strong ஐ குடித்துவிட்டு போத்தல்களையும் டின்னுகளையும் போட்டிட்டுப் போகும் புண்ணிய பூமியும் ஆனது.

அது என்னமோ, யாழ்ப்பாணத்தில் களவா தண்ணி அடிக்கிற இளம் சிங்கங்களுங்கான strategic place ஆக பெரும்பாலும் இராணுவ முகாமை அண்டிய பற்றைக்காணிகளும் பாழடைந்த வீடுகளுமே இருக்கின்றன.

எங்கள் வீட்டை விட எங்கள் தலைவாசல் கட்டடம், "சங்கடம்" பலமானது. உறுதியானது. அது எங்கள் தாத்தா கந்தப்பு வாத்தியார் கட்டினது

சங்கடத்தின் ஓடுகளும், கோப்பிசமும் மாயமாக காணாமற் போனாலும் அந்த 100 ஆண்டுக்கு மேலான பழமை வாய்ந்த வைரக்கட்டிடம் மட்டும் அசையாது அதே வைரத்துடன், உறுதியுடன் நின்றது.

'சங்கடம்' எனப்படுவது வழிப்போக்கர்கள் இழைப்பாறுவதற்காக கட்டப்படுவது. நானறியவே பல வழிப்போக்கர்கள் எங்கடை சங்கத்தில் இழைப்பாறிச் சென்றுள்ளனர். அவர்களின் தாகம் போக்க ஒரு மண்பானையில் தண்ணியும் வைக்கப்படும்."லட்சுமி" என்கிற எங்கடை பசு மாடு கன்று போடும் காலங்களிலை அம்மா மோர் கரைச்சு பானையிலை ஊத்தி வைப்பா.

என்டை சிறுபராயத்தில் நான் வீட்டிலை பொழுது போக்கினதை விட அந்த சங்கடத்துக்குள் பொழுது போக்கினதுதான் கூட. பூவரசம் இல்லையால் அந்த சங்கடத்துக்குள் சுவரில் நான் கீறாத இடமில்லை. விதம் விதமா எழுதப் பழகினதும், படம் கீறப்பழகினதும் அஙகைதான். சங்கடத் திண்ணையில் ஏறி நிண்டு பேசித்தான் தமிழ் பேசவும் கற்றுக் கொண்டேன். நாடகமும் நடித்துப் பழகினேன். நான் உதயசூரியன் சின்னம் கீறிப் பழகினதும் அந்தச் சுவரில்தான். எட்டு வயதிலை அரிவாளும் சுத்தியலும் கீறி ஒன்றுவிட்ட சகோதரங்களிட்டை உதை வாங்கினதும் அந்த சங்கடத்திலைதான்.

அந்த சங்கடம் சுவிசில் வாழ்கிற எனது மூத்த சகோதரர் Yoharaja Alvar Gasinathar (யோகா மாஸ்டரா/சைவம்) அவர்களின் முயற்சியில் இப்போது புனரமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், Unfortunately...

வழிப்போக்கர்கள் இளைப்பாறுவதற்கான... தாகம் தீர்த்துச் செல்வதற்கான சங்கடமாக அல்ல.

பழைய சங்கடத்தில் வெளி வாசல் ஓப்பினாகவே இருக்கும். ஆனால் அதை இப்ப ஓப்பனாக வைத்தால் Lion Strong அடித்து சூச்சாவும் பெய்துவிட்டுச் சென்றுவிடுவார்கள் எங்கடை இளஞ்சிங்கங்கள். அதாலை சங்கடத்துக்கு வெளியாலை ஸ்ட்ரோங்கா ஒரு கதவு போட்டு ஒரு நினைவுச் சின்னமாக மட்டுமே வைத்திருக்க வேண்டிய நிலை.

நன்றி: காசிநாதர் 

'சங்கடம்' எனப்படுவது...

புலோலி புற்றளைப்பகுதிகளில் அனேகமாக எல்லா ஒழுங்கைகளுக்குள்ளும் இருந்த இந்தச் சங்கடக் கொட்டில் இன்று நம்மவர் வாழ்வின் ஒரு ஞாபகச் சின்னமாக மட்டுமே இருக்கிறது. 

இரு புறமும் சுமைகளை இறக்கி வைத்து பாதசாரிகள் இளைப்பாறிச் செல்ல வசதியாக அமைக்கப் பட்ட திண்ணைகளில் இரவுப் பயணிகள் படுத்துத் தூங்கியும் செல்வதுண்டு. 

நமது மரபுகள் பற்றிய பதிவுகளில் கனத்தில் எடுக்கப்படவேண்டிய வைகளில் சங்கடம், சுமைதாங்கி, ஆவுரோஞ்சு கல் என்பவையும் முக்கியமானவை. 

கூடவே இந்த சங்கடக் கொட்டில்களில் ஒரு லாம்பு விளக்கும் தொங்க விடப்படுவதுண்டு. மழைக்காலங்களில் வழிதவறிய கால்நடைகளுக்கும் அவை புகலிடமாக இருந்தன! நல்லூர் தீர்த்தம் முடிந்து நடைப்பயணமாய் கதிர்காமம் செல்லும் பயணிகள் செல்வச்சன்நிதி , வல்லிபுரம் வற்றாப்பழையூடாக பயணிக்கும் யாத்திரீககள் த்ங்கவும் இளைப்பாறவும் கூட இவை பயன் பட்டன.

(தகவல்: விக்கினேஸ்)