பொது முகாமையாளர் தேவை: 'முன்னாள் போராளிகளாக இருப்பது' விரும்பத்தக்கது (Photos)

'முன்னாள் போராளிகளுக்கு உதவுதல்' என்பது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகவே எமது அரசியல் சூழலில் பார்க்கப்பட்டு வருகிறது.

அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.

ஏனெனில் துரதிஷ்டவசமாக முன்னாள் போராளிக்களுக்கான உதவி என்பது தவறான காரணங்களுக்காக தவறான தரப்பினராலேயே முந்தியடிச்சு ஆரம்பிக்கப்பட்டது.

அதில் முதலாவது, இலங்கை அரசும் இராணுவமும் சேர்ந்து வழங்கிய "புனர்வாழ்வு".

இது முற்று முழுதாக அரச மற்றும், இராணுவ நோக்கங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட ஆதரவே தவிர முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வோ புனர்வாழ்வோ அளிக்கும் நோக்கத்தில் வழங்கப்பட்ட உதவி அல்ல.

"நீங்கள் எங்களோடை ஒத்துழைத்தால் நல்லா இருப்பீங்கள். இல்லையேல்..." என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட உதவி.

அடுத்து NGO களின் உதவி:

அரச மற்றும் இராணுவ உதவிகளை குறுகிய கால நோக்கிலான "நாசகார" உதவிகள் என எடுத்தால் NGO களின் உதவிகளை நீண்டகால "நாசகார" உதவிகள் எனக் கொள்ளலாம்.

அடுத்து சிங்கள பௌத்த ஜீவகாருண்ய உதவிகள்:

"அனே ஒயா பவ்" எனக் கூறிக் கொண்டு வழங்கப்படும் ஆசாரங்கள் போலி அரவணைப்புகள், ஆற்றுப்படுத்தல்கள், மகிழ்வூட்டல்கள்.

இவ்வகை உதவிகள் ....எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் ஆயுதப்போராட்டமும் அதை ஆரம்பித்து வைத்த "பிரபாகரனுமே" என்னும் எண்ணப்பாட்டை முன்னாள் போராளிகள் மற்றும் மக்கள் மத்தியில் விதைப்பதும் தம்மை "இரட்சகர்கள்" ஆக காட்டிக் கொள்வதும் அதனூடாக சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை பலப்படுத்துவதையும் நீண்ட கால நோக்காகக் கொண்டவை.

இவற்றை விட...

தமிழ் தேசிய அரசியலுக்கு எதிரான இலங்கை அரச ஆதரவு தமிழர்களின் உதவிகள். இவர்களின் பிரதான நோக்கம் முன்னாள் போராளிகளுக்குக்கும் மக்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்துதல் ஆகும்.

இவற்றைவிட எந்த உதவியுமே செய்யாமல் "ஆடு நனையுதென ஓநாய் அழுத கதையாட்டம்" தமிழ் தேசிய மற்றும் புலி எதிர்ப்பாளர்களினால் மேற்கொள்ளப்படும் "ஐயோ பாருங்கோ உங்களாலை கையை இழந்து காலை இழந்து எத்தினைபேர் இண்டைக்கு சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்" போன்ற பிரச்சாரங்கள்.

இவர்களின் செயற்பாடு எமது மக்களை குற்ற உணர்ச்சிக்கு உட்படுத்தி ஈழவிடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தல் அன்றி வேறு எந்த நன்மையையும் செய்யாது.

இவை தவிர, ஆக்கபூர்வமான உதவிகளையும் சிலர் செய்து வருகின்றனர்.

உண்மையான ஜீவகாருண்ய அடிப்படையில் எவ்வித கள்ள நோக்கமும் இன்றி சமூகம், உறவுகள், "எங்கடை பிள்ளைகள்" என்ற அடிப்படையில் சிலர் ஆக்கபூர்வமான உதவிகளை செய்து வருகின்றனர். 

இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் காரணங்களுக்கு அப்பால் இரக்கம், கருணையின் அடிப்படையில் ஒருவித ஆன்மீக செயற்பாடாக அதாவது தமது ஆத்ம திருப்திக்காக உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகை உதவிகள் அவர்களின் Emotional Need இன் அடிப்படையில் செய்யப்படுகின்றன.

சிலர் தமக்கு தெரிந்தவர்கள் என்ற அடிப்படையில் தமது கடமையாக சில உதவிகளைச் செய்கின்றனர்.

ஒரு சிலர் தமது "புலி விசுவாசம்" மற்றும் தமிழ்த் தேசியத்தின்பால் கொண்டுள்ள பற்றுதியின் அடிப்படையிலும் உதவிகளைச் செய்கின்றனர்.

ஆனால், முன்னாள் போராளிகளுக்கு உதவுதல் என்பது...

வெறும் அன்பு, கருணை, ஜீவகாருண்யம், ஆத்ம திருப்தி, சொந்தங்கள், உறவுகள், விசுவாசங்கள், மனசாட்சி, குற்றவுணர்ச்சி போன்ற தனிப்பட்ட காரணங்களுக்கான குறுகிய கால Ad Hock உதவிகளுக்கு அப்பால்...

நீண்ட கால, திட்டமிடப்பட்ட, அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு மற்றும் உளவியல் காரணங்களின் அடிப்படையில் ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட வகையில் செய்யப்பட்ட வேண்டியவை.

30 வருடகால ஈழவிடுதலை போராட்டம் என்பது வெறும் இழப்புகளையும், இன்னல்களையும், துயரங்களையும் தந்துவிட்டுச் சென்ற ஒன்றல்ல. இவையனைத்துக்கும் அப்பால்,

நாம் ஒரு தேசிய இனமாக சமூக, பொருளாதார, பண்பாட்டு ரீதியில் சுயமாக எம்மை பலப்படுத்தவும் சுதேசமாக எம்மை வளர்த்துக் கொள்ளவும் கூடிய வலுவையும், அனுபவங்களையும், அறிவையும், திறமையையும், தொடர்புகளையும், பொருளாதாய வளங்களையும், உட்கட்டமைப்பையும், மனித வளங்களையும் தந்துவிட்டுத்தான் சென்றுள்ளது.

அந்த வகையில் முன்னாள் போராளிகள் எனப்படுபவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அசாத்தியமான ஆற்றல் கொண்ட மனித வளங்கள் அவர்கள்.

போராட்டத்தில் ஈடுபடாதவர்களை விடவும் பன்மடங்கு ஆற்றல் கொண்டவர்கள் அவர்கள்.

நிர்வாகம், தொழில் நுட்பம், வணிகம், சட்டம்-ஒழுங்கு, கலை, பண்பாடு, நேர்மை, நேர்த்தி, செயற்திறன் எனப்பல வழிகளிலும் அசாத்தியமான திறமை கொண்டவர்கள்.

ஒரு ஆரோக்கியமான சமூகத்தை...

நாமாக, சுயாதீனமாக, சுதேசமாக...

கட்டியெழுப்பக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள் அவர்கள்.

"முகாமையாளர் தேவை: முன்னாள் போராளிகளாக இருப்பது விரும்பத்தக்கது"

என எம்மவர்களின் நிறுவனங்கள் விளம்பரம் செய்யும் காலம் வருமாயின் எம் சமூகமும் வளம் பெறும். போராளிகளும் வளம் பெறுவர்.

ஒரு போராளியின் காயம் "வடு" அல்ல. ஊனமும் அல்ல. 

அது "மறு"!

வாழ்க வையகம் - வாழ்க வளமுடன்

நன்றி: ஞா.காசிநாதர்