‘கானம் ரத்த கானம்’ - மக்கள் பாவலர் இன்குலாப்

மறைந்த இந்தியக் கவிஞர் இன்குலாப் அவர்கள் எழுதிய ஈழப்பாடல்கள் குறித்த சிறு பார்வை

'வாலை ஆட்டாதே இந்திய அரசே

வரிப்புலி முழக்குவார் விடுதலை முரசே'

‘தமிழீழ எழுச்சிப் பாடல்கள்’ இசைப்பேழையில் தேனிசை செல்லப்பா அவர்கள் பாடிய ‘கானம் ரத்த கானம்’ எனும் பாடலின் வரிகள் அவை. ஒரு இந்தியக்குடிமகன் ஈழப்போராட்டத்தை எவ்விதம் நேசித்தான் என்பதற்கு இதனிலும் சான்று தேவையோ? அந்தப் பாடலின் முதற் பல்லவியில் கவிஞர் இன்குலாப் அவர்கள் இப்படிச் சொல்கிறார்.

'ஈழத்தில் இருந்து நீளும் கரங்களை

தோழமை கொள்வதெம் பிறப்புரிமை

கோழியின் செட்டைக்குள் குஞ்சுகள் அடங்கும்

பாழும் கழுகுக்கு பாசமா புரியும்'

இந்தியப்படையினர் ஈழத்தில் கால்பதித்த காலம் உலாவந்த பாடலிது. இந்தப் பாடல் ஒரு காலத்தில் கேட்கும்போதேல்லாம் திரும்பத்திரும்ப கேட்கவைக்கும் பாடலாக இருந்தது. இன்குலாப் எனும் பெயருக்கு 'புரட்சி' என்பதே அரத்தமாகும். இன்குலாப் அவர்களது இயற்பெயர் சாகுல் ஹமீது என்பதாகும். தன் வாழ்வின் இறுதிவரைக்கும் ஈழத்தமிழர்களை நேசித்த நெஞ்சம் அவருடையது.

இன்குலாப் அவர்கள் எழுதிய இந்த வரிகள் போருணர்வின் வெளிப்படையாய் அமைந்தது.

'போர் விமானம் எம் தலைக்கு மேலெனில்

புகையும் எங்கள் துப்பாக்கி

போர்க்கப்பலெம் அலைக்கு மேலேனில்

கடலே எதிரிக்கு சமாதி'

மேலே சொல்லிய பாடல் தமிழகப் பிரபல பாடகர் மனோ பாடியது.

‘எழு கடல்களும் பாடட்டும் 

இன்னும் எட்டாத வானம் கேட்கட்டும்’ எனும் பாடலின் வரிகள் அவை.

அப்பாடலின் முதற்சரனத்தில் இன்குலாப் அவர்கள் இப்படி வரைகின்றார்.

'ஆயிரம் பறவைகள் எங்கள்

கானக மரங்களில் கூடு கட்டலாம்

அலைகள் உலக சமத்துவம் பாடி

எங்கள் கரைகளில் முட்டலாம்

போர் விமானம் எம் தலைக்கு மேலெனில்

புகையும் எங்கள் துப்பாக்கி

போர்க்கப்பலெம் அலைக்கு மேலேனில்

கடலே எதிரிக்கு சமாதி'

இந்தப் பாடல்கள் எல்லாம் ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் அதிகமாக பேசப்பட்ட பாடல்கள் ஆகும். இந்திய தேசத்தினை மையமாக்கி ஈழ விடுதலை இயக்கங்கள் தோற்றம் பெற்றபோதும் விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே இந்தியக் கவிஞர்களினால் போற்றப்பட்டு பாடப்பட்டது. 

சில முரண்பாட்டுச் சிக்கல்கள் இந்திய அரசுக்கும் புலிகளுக்கும் தோன்றிய பின்னரும், சில துன்பியல் சம்பவங்கள் இடம்பெற்ற பின்னரும் தமிழகக் கவிஞர்கள் புலிகளின் போராட்டத்தை தொடராதரவுக்கு உட்படுத்தினர். அவர்களில் இன்குலாப் அவர்களும் தவிர்க்கப்பட முடியாதவர். முள்ளிவாய்க்கால் அவலங்கள் பதிவாக்குவது வரைக்கும் இவரின் கவிதைகள் நீண்டு வந்தது.

இது இன்குலாப் அவர்கள் ‘கானம் ரத்த கானம்' பாடலில் எழுதிய வரிகள்...

'ஈழம் வெல்வது புலிகளின் உரிமை

ஏற்றுக்கொள்வது எங்களின் கடமை'

நன்றி: புரட்சி