அறப்படிச்ச பல்லிகளையும் கூழ் பானைக்குள் விழ வைக்கும் வடக்கு மாகாணம் ! வரப் போகும் ஆளுநரின் நிலை என்ன?

வடக்கு மாகாணத்துக்குரிய புதிய ஆளுநராக, ஓரளவு தமிழ் மொழி பேசும் திறனுள்ள இடதுசாரி அரசியலில் பற்றுள்ள, மேல் மாகாணத்தின் முதலமைச்சராகவும் மத்தியில் சிறு விளைபொருள் ஏற்றுமதி மேம்படுத்தல் அமைச்சராகவும் விளங்கிய

ரெஜினோல்ட் குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விரைவில் நியமிக்கப்படவுள்ளார்.
ரெஜினோல்ட் குரே ( REGINOLD COORAY) ஒரு மூத்த அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் களுத்துறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினராகி. சிறு விளைபொருள் ஏற்றுமதி மேம்படுத்தல் அமைச்சராக இருந்தார்.. சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார். 2000ம் ஆண்டு நவம்பருக்கும் 2009 மேமாதத்திற்கும் இடையில் எட்டு வருடங்கள் மேல் மாகாணத்தின் முதலமைச்சராகவும் திகழ்ந்தார். மத்திய நிர்வாகத்திலும் மாகாண நிவாகத்திலும் நிரம்பிய அனுபவம் மிக்கவர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுள் ஒருவரான இவர் கடந்த பொதுத் தேர்தலில் தேர்தல் செலவுக்காக தன்னிடம் நிதியில்லை எனத்தெரிவித்து போட்டியிடவில்லை.
தனக்கு வடக்கு ஆளுநர் பதவி கிடைக்கவுள்ளது என அறியக் கிடைத்தது என்று ரெஜினோல்ட் குரேயே உறுதிப்படுத்தியுள்ளார்.


தற்போதைய வடக்கு மாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிகக்கார இந்த மாத இறுதியுடன் தனது பதவியிலிருந்து ஓய்வுபெறுகின்றார். ஆளுநர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். தான் ஆறு மாதங்களுக்கு வடமாகாண ஆளுநர் பதவியில்பணியாற்றவே முதலில் ஜனாதிபதிக்கு சம்மதம் தெரிவித்ததாகவும் எனினும் அதிலும் கூடுதலான காலம் தான் பணியாற்றியுள்ளதாகவும் தற்போதைய வடக்கு மாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிகக்கார இந்து பத்திரிகைக்கு நேற்றுக்கூறியுள்ளார். தான் தனது ஓய்வு காலத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தான் ஓய்வு பெறுவது ஒரு செய்திக்கான முக்கிய கதையல்ல எனவும் இந்து பத்திரிகைக்கு கூறியுள்ளார். எச்.எம்.ஜி.எஸ்.பளிகக்கார இலங்கை வெளிநாடுகள் சேவையில் பணியாற்றிய ஒரு அனுபவம் மிக்க தொழில்முறையான இராஜதந்திரியாவார்.
இவரது இடத்துக்கே பழுத்த அரசியல்வாதியான ரெஜினோல்ட் குரே நியமிக்கப்படவுள்ளார்.
இணந்த வடக்கு-கிழக்கு மாகாணம் உச்சநீதிமன்றத்தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்டபின்னர் மூன்றாவது ஆளுநரைக்காணவுள்ளது.


தொழில்முறையான ஓய்வுபெற்ற இராணுவவாதி ஜி.ஏ சந்திரசிரியும்(2009 ஜூலை - 2015 ஜனவரி) தொழில்முறையான ஓய்வுபெற்ற இராஜதந்திரி எச்.எம்.ஜி.எஸ்.பளிகக்காரவும்(2015 ஜனவரி-2016 ஜனவரி) வடக்கில் பணியாற்றிய நிலையில் இனிமேல் பழுத்த அரசியல்வாதி ரெஜினோல்ட் குரே ஆளுனராகிறார். ஜி.ஏ சந்திரசிரியை இராணுவ ஆளுநர் என வடக்கின் தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் ஊடகங்களும் விமர்சித்திருந்த அதேவேளை பளிகக்கார அவர்களை சிவிலியன் ஆளுநர் என தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் ஊடகங்களும் அங்கீகரித்திருந்தனர். இனிமேல் வர இருக்கும் ரெஜினோல்ட் குரே தொடர்பில் இரா. சம்பந்தன் “ He would be an appropriate choice. He has very liberal views,” (அவர் ஒரு பொருத்தமான தெரிவு. அவர் தாராள சிந்தனையுள்ளவர்.) எனக்கூறியுள்ளார் என http://www.newindianexpress.com இணையம் தெரிவிக்கிறது. அமைச்சர் மனோ கணேசன் ”அவர் தமிழர்களின் பிரச்சனையை புரிந்துகொள்ளத்தக்கவர்” என http://www.newindianexpress.com ற்கு கூறியுள்ளார்.


அதேவேளை http://www.newindianexpress.com இணையமானது, பிரியாவிடை பெறப்போகும் ஆளுநரைப்பற்றி ”Palihakkara is a “dove” having been a member of the Lessons Learnt and Reconciliation Commission (LLRC) which gave an internationally accepted blueprint for post-war ethnic reconciliation.” (பளிகக்கார ஒரு ”சமாதானப்புறா”, அவர் உறுப்பினராவிருந்த கற்றுக்கொண்டபாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு(LLRC) சர்வதேசரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இனநல்லிணக்கத்திற்கான ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையையை வெளியிட்டது.) எனவும் தெரிவித்துள்ளது.


என்னதானிருந்தாலும் வடக்கின் “நேச்சர்” அறப்படித்த பல்லிகளையும் கூழ்ப்பானைக்குள் விழுத்தத்தக்க, ஆனைகளையும் அடிசறுக்கச்செய்யும் கல்லில் நாருரித்து சாணேறி முழம் சறுக்கும் ஒப்படைகளை உவந்தளிக்கும் வினோதங்கள் நிறைந்தது.எனினும் நேர்மையான ஆற்றல்மிகு நல்ல அரசியல்தலைவர்களும் அரசசேவை உயரதிகாரிகளும் ஒருசிலர் உள்ளனர் என்பதும் உண்மையே.அவர்களின் எண்ணிக்கை மிகச்சொற்பம். ஆண்டவரோ ஆளுநரோ வடக்கிலே ”சவாலே சமாளி”!.

ஏகன் அநேகன்