கட்டப்பிராய், கல்வியங்காட்டில் ரவுடிகளின் வாள் வெட்டில் குடும்பஸ்தர் படுகாயம்

 கட்டைப்பிராய் பகுதியில் இன்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில்சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனந்தபுரம் கல்வியங்காடு புதிய செம்மணிவீதியைச் சேர்ந்த க.பிரதீபன் (வயது27) என்னும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு வாள்வெட்டிற்கு இலக்காகியுள்ளார்.

குறித்த நபர் இன்று தான் செய்யும் பெயின்ரிங் வேலையினை முடித்துக் கொண்டு தனது ஆட்டோவில் வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்துள்ளார்.

இதன் போது பருத்தித்துறை வீதி கட்டைப்பிராய் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிலில் வந்த சிலர் அவரை வழிமறித்துள்ளனர்.

வழிமறித்த அவர்கள் குறித்த நபர் மீது சரமாரியாக வாள்வெட்டு நடத்தியுள்ளனர். இதன் போது அவரின் 2 கைகளிலும் வெட்டப்பட்டதுடன், காலிலும் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.

இருந்த போதும் அங்கிருந்து தப்பி ஓடிய அவர் அருகில் உள்ள வீடு ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளார். இதன் பின்னர் அங்கிருந்தவர்களால் அவர் மீட்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருந்த போதும், சம்பவ இடத்திற்கு ஒரு மணித்தியாலங்கள் பின்னரே பொலிஸார் வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.