நினைவுத்தூபிகள் தேவையில்லை. உங்கள் நினைவுகள் தூங்காத வரை

எனக்கு மாவீரர் நாள் என்றால் நினைவுக்கு வருவது இரண்டு விடயங்கள் தான்.

1.எனக்கு ஒரு வகையில் அம்மம்மா முறையான அவள் எல்லா இடங்களிலும் சென்று பூப்பறித்துக்கொண்டு வந்து அழகாய் மாலை தொடுப்பதும் அழுதுகொண்டே மாவீரர் துயிலும் இல்லம் நோக்கிச்செல்வதும்

2. நாங்கள் அப்பா, அம்மா, அன்ரி, சித்தப்பா எல்லாம் ஒரு வீட்டில் ஒன்றி கூட அண்ணன் சொல்லப்போகும் வார்த்தைகளைக் கேட்பது.

தவறினால் அடுத்த நாள் பத்திரிகைகளில் முகம் புதைப்பது. .

இது தவிர ஒருமுறை சித்தப்பா வெளிநாட்டில் இருந்து வந்த போது கூட்டிச்சென்ற கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இது தவிர அந்த நாட்களில் எல்லாம் கூட சிந்திப்பதுமில்லை. சிந்திக்கக் கூட வீட்டுக்காரர் விரும்புவதில்லை.

எந்தப் பெற்றவள் தான் பெற்ற பிள்ளையின் தியாகத்தைப் போற்றுவாள். மாவீரர்களான தம் பிள்ளைகளை எண்ணி என்றும் வழியும் அவர்கள் கண்ணீர் எவருக்கு புரியும். .

எப்போதுமே சில வாசகங்கள், வசனங்கள் என்னைக் கவர்ந்தால் அதை நான் மனனம் செய்துவிடுவேன்.அவ்வாறே

" போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம், போராட்டம் மாறாது"

" என்றோ ஒரு நாள் தமிழீழம் மலரத்தான் போகின்றது . அதை நானும் என் சக தோழர்களும் வானில் இருந்து பார்ப்போம் " என்ற திலீபனின் கனவு நனவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை "

"சமாதானக் கதவைத் தட்டுகிறது புலிகள், திறக்க மறுக்கிறது சந்திரிகா அரசு "

ஏனோ தெரியவில்லை. இவை மூன்றும் எனக்கு நினைவு வரும் போதெல்லாம் இனம்புரியாத ஓர் கவலை என்னை வதைத்து விடுவதுண்டு.

வாழ்க்கையின் இலட்சியங்களுக்காய் பயணிக்க வேண்டிய வயதில் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் பிரதிநிதிகளாய் இலட்சிய வேட்கை கொண்டு கைகளில் துப்பாக்கி , கழுத்தினில் நச்சுக்குப்பி, நெஞ்சினில் தாயகக் கனவு, என பயணித்த இவர்கள் எம் இனத்தின் கண்ணீர்க்காவியங்கள், கலைந்து போக முடியாத வண்ண ஓவியங்கள்.

எம் இனத்தின் விடியலுக்காய் இன்னுயிரைத் ஈந்த உம்மை எங்ஙனம் நாம் மறப்போம்..?

இந்த நாள் அல்ல என்றும் உம் தியாகம் பேசப்பட்டபடி தான் இருக்கும்.

நினைவுத்தூபிகள் தேவையில்லை. உங்கள் நினைவுகள் தூங்காத வரை......

எம்மவரே உமக்காய் ஒளிரும் விளக்குகளும் ஓரு முறை கண்கலங்கி மங்கலாய் மாறிவிடும். உம் தியாகச் சுடர்த்தீ முன்னே...

மனதை நெகிழ்த்தும் மாவீரர் தின நாளில் என் இதயமும் கனக்கிறது !!!!

சுரேகா-