பொதுச் சுடரை ஏற்றி மாவீரர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்திய அரசியல் அசிங்கங்கள் (Photos)

கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லங்களில் இம்முறை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். 

ஆனால், இத்தகைய பேரெழுச்சி நிகழ்வுகளில் தன்னை தலைவர் என்றோ தளபதிகள் என்றோ, மாவீரர்களை ஈன்றெடுத்த உறவுகள் என்றோ நினைத்து சில அரசியல் அசிங்கங்கள் செய்யும் ஈனச் செயலை நினைத்தால் வயிறு குமட்டிக் கொண்டு வருகிறது.

இந்த அரசியல் அசிங்கங்களின் ஈனச் செயல் தொடர்பில் மக்கள் தங்களுக்குள்ளேயும், சமூக வலைத்தளங்களிலும் காரசாரமாக விமர்சித்து வருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

மாவீரர் நாள் நடைமுறையில், பிரதான சுடரினை தலைவர் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் ஏற்ற சம நேரத்தில் மாவீரர்களோடு களமாடிய தளபதிகள் துயிலுமில்லங்களில் ஏற்றுவார்கள். ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையவர்கள் ஏற்றுவார்கள். அவர்கள் வராதவிடத்து உடன் களமாடிய தோழர் தோழியர்கள், பிறகுதான் மற்றவர்கள்... மாவீரர்நாள் பண்பாடு, ஒழுக்கம் இவ்வாறு தான் இருந்தது. 

இதுவரை காலமும் மிக பாதுகாப்பு கெடுபிடியான நேரம் கூட கரும்புலி மேஜர் போர்க்கின் தாயார் தான் வவுனியாவின் எல்லா ஈழ நிகழ்வுகளுக்கும் விளக்கேற்றுவார். (25-11-2016-இறைவன் அடி சேர்ந்து விட்டார்) கிளிநொச்சியில் மட்டும் என்ன அரசியல் நாடகம் இது?

களமாடியவர்களை விடுத்து களவாணிகள் பொதுச்சுடர் ஏற்றும் நிலை வந்திருக்கிறது. இதற்கெல்லாம் நாம் என்ன செய்யப் போகிறோம்?

தலைவர் ஒரு முறை சொன்னாராம், தமிழீழம் கிடைத்தவுடன் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட போராளிகளோடு வாழப்போகின்றேன். தலைவர் அவர்கள் முதலில் மாவீர்களை அடுத்தபடி முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட போராளிகளை நேசித்தார். இன்று அந்த போராளிகளுக்கும் இந்த பிரதான பொதுச்சுடர் ஏற்றும் பாக்கியம் இல்லாது போயிற்று.

நாமெல்லாம் மாவீர்ர் குடும்பங்களுக்கு இந்த நாளில் தொண்டர்களாக இருக்கவேண்டும்.மாறாக இந்த ஒரே ஒரு நாளில் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமையையும் மதிப்பையும் நாம் பச்சையாக சூறையாடக்கூடாது.

முழங்காவிலில் மாவை என்கிற அரசியல் அசிங்கமும், கனகபுரத்தில் சிறீதரன் என்கிற போலித் தமிழ்த் தேசியவாதியும் சுடரேற்றிய கொடுமையை என்னவென்று சொல்ல? 

மாவீரர்களின் ஆன்ம ஈடேற்றத்துக்காகவும்,  அவர்களின் நினைவைச் சுமந்து தான் வருடா  வருடம் மாவீரர் நாள் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. 

காலில் செருப்புக் கூட இல்லாமல், கல்லு, முள்ளுகள், அடர் வனங்களுக்குள் நின்று களமாடிய அந்த மாவீரத் தெய்வங்களுக்கு, மக்களிடம் சென்று அரசியல் பணியாற்ற சொகுசு கார் இல்லாமல் போக முடியாத அரசியல் வங்குரோத்துக்கள் எல்லாம் பொதுச் சுடரேற்றும் காலக் கொடுமையை என்னவென்று சொல்ல?

கூட்டமைப்பினர் ஒரு வருடம் முழுக்க செய்யும் அரசியல் பித்தலாட்டங்களை வருட இறுதியான நவம்பர் 27 இல் மாவீரர் நினைவேந்தல் எனும் பெயரில் பூசி மெழுக முயலுவதனை யாரும் அனுமதிக்க முடியாது. 

பிரித்தானியாவில் ஒக்ஸ்போட் மாநகரத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வில் பொதுச்சுடரை முதல் மாவீரன் 2ம் லெப் சங்கர் (சத்தியநாதன்) அவர்களின் தகப்பன் ஏற்றி வைத்தார்.

அதே போல் உடுத்துறை, வவுனியா, மன்னாரில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்களில் கூட பொதுச் சுடர்களினை மாவீரர்களின் தாய், தகப்பன், உறவுகள் ஏற்றி வைத்ததனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. 

கறை படிந்த கரங்களால் சில இடங்களில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை காணும் போது விடுதலைக்காக வீரகாவியமாகிய சகோதரர்களை கொண்ட எமக்கு மிகவும் கவலையளிக்கிறது.

வேட்டி கூட கசங்காத  இந்த அரசியல் அசிங்கங்கள் இங்கே செய்யும் ஈனச் செயல்களைப் பார்த்து வானத்திலிருந்து கண்ணீர் விடாதீர்கள் மாவீரத் தெய்வங்களே? 

அரசியல்வாதிகள் பின்னிருந்து மக்களை சரியாக வழிநடத்த வேண்டுமே ஒழிய, மாபெரும் தியாகங்களைப் புரிந்த மாவீரத் தெய்வங்களின் குடும்பத்தினருக்கு உரிய மதிப்பினையும், கௌரவத்தினையும் வழங்க வேண்டும்.

மாவீரர்களின் தியாகத்தில் குளிரகாய்வதென்று இதனைத் தான் சொல்வார்கள். 

அதனை சிறிதரன், மாவை போன்றோர் பொதுமேடையேறி செய்துகாட்டியுள்ளனர். இதைவிட மக்களுக்கு யாரும் எளிதாகப் புரியவைக்க முடியாது.

இனிவரும் காலங்களில் அரசியல்வாதிகள் எவரும் மாவீரர் துயிலும் இல்லங்களில் மேடையேறுவதோ அல்லது உரை நிகழ்த்துவதோ மாவீரர் குடும்பங்களால், முன்னாள் போராளிகளால் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

இனிவரும் காலங்களில் ஆவது மாவீரர் பொதுச் சுடரை யார் ஏற்றுவது என்பது தொடர்பில் ஏற்கனவே எமது மண்ணில் இருந்த நடைமுறை உரிய முறையில் பின்பற்றப் பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பும் ஆகும்.