ஓராண்டு நினைவலைகளில்: தண்டவாளத்தில் பாய்ந்த செந்தூரனை மறந்து விட்டோமா நாம்?

"தமிழீழ விடுதலையைக் கொடு, ஒளியூட்டு" "ஒரு அரசியல் கைதியேனும் சிறைகளில் இருக்கக்கூடாது அனைவரையும் விடுதலை செய்ய வேணடும்" என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்து இன்றுடன் 26.11.2016 ஒருவருடம் ஆகிறது. 

கோண்டாவில் புகையிரத நிலையத்துக்கு அண்மையாக இடம்பெற்ற அந்த துயரச் சம்பவத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் கோப்பாயைச் சேர்ந்த இராஜேஸ்வரன் செந்தூரன் (வயது 18) என்ற மாணவரே தற்கொடையாக தன்னுயிரை கொடுத்தவராவார். 

மாணவன் தான் உயிரிழக்க முன்னர் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் ஓராண்டு கடந்தும் நிறைவேற்றப்படவில்லை என்பது தான் மிகத் துயரமானது.  

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளின் மீள் நினைவுகள்,  

'அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி' நல்லாட்சி அரசாங்கம் அனைத்து அரசியல் கைதிகளையும் (political prisoners) புனர்வாழ்வளித்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும் "ஒரு தமிழ் அரசியல் கைதிகளேனும் சிறையில் இருக்க முடியாது. இந்த அரசியல் கைதிகளை உடனடியாக (immediately) விடுதலை செய்ய வேண்டியதன் அவசியம் எனக்குப் புரிந்தும்கூட (understand) இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு இன்னமும் புரியவில்லையே என்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. The goverment must deliver all tamil political prisoners immediately என்றும் தமிழ் உறவுகளை உயிராய் நேசிக்கும் உண்மையுள்ள செந்தூரன்" - என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

செந்தூரனின் உயிரை கிஞ்சித்தேனும்  மதித்தாரா ஜனாதிபதி? தமிழ் இளைஞர்களின் விடுதலைக்கு தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்தனவா?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் இல்லை என்பதே பதில்.

தமிழ் மக்களுக்கு எதிரான போரின் போது பயங்கரவாத தடைச் சட்டம் என்கிற கொடிய சட்டத்தை ஏவியே ஏராளமான தமிழ் இளைஞர்களை கேட்டுக் கேள்வியில்லாமல் சிறையில் தள்ளியது சிறீலங்காவின் பேரினவாத அரசு. 

எழுத்தில் எழுத முடியாத கொடூர சித்திரவதைகளுக்கு முகம் கொடுத்த அந்த தமிழ் இளைஞர்கள் போர் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்த பின்பும், இன்றும் சிறீலங்காவின் பல சிறைகளில் நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

எல்லோரையும் போல் சாதாரண வாழ்க்கை வாழ வேண்டிய அந்த இளைஞர்கள் இன்றும் கொடிய சிறைக் கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். 

இதனால் பலரது குடும்பங்கள் வாழ வழியின்றி நிர்க்கதி நிலைக்கு ஆளாகியுள்ளன.

எமது அரசியல் தலைமைகளோ அல்லது இங்குள்ள சிவில் அமைப்புக்களோ இந்த இளைஞர்களின் விடுதலைக்காக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளிடம் குறிப்பிடத்தக்களவு  வழக்கறிஞர்கள் இருக்கும் பட்சத்தில், ஒன்றில் இணைந்தோ அல்லது கட்சி ரீதியாகவோ வழக்கறிஞர் அணி ஒன்றினை உருவாக்கி அதனூடாக தமிழ் இளைஞர்களின் விடுதலைக்காக கட்டமைக்கப்பட்ட பொறிமுறையொன்றினை உருவாக்கி   பயங்கரவாத   தடைச் சட்டத்தில் கைதாகி தடுத்து வைக்கப்படுள்ளவர்களின் வழக்குகளை ஒரு உரிய ஒழுங்கின் கீழ் கண்காணித்து நெறிப்படுத்தி அதன் மூலம் உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும். 

தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் குடும்பங்களுக்கு கூட எங்களது தமிழ் அரசியல் தலைமைகள் வாழ்வாதார, பொருளாதார உதவிகள் செய்ததாக தெரியவில்லை. 

ஆனால், தமிழ் அரசியல்தலைமைகள் இப்படியான விடயங்கள் குறித்து சிந்தித்தார்களா எனக் கூடத் தெரியவில்லை.

மொத்தத்தில் செந்தூரனின் உயிரை ஜனாதிபதியும் சரி, தமிழ் அரசியல் தலைமைகளும் சரி கிஞ்சித்தேனும் மதிக்கவில்லை எனத் தோன்றுகின்றது. 

கடந்த வருடம் அனுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க சென்ற மாவை சேனாதிராஜா தலைமையிலான அணிக்கு அரசியல் கைதிகள் கேட்ட கேள்விகள் எவற்றுக்கும் உரிய பதிலை வழங்க முடியவில்லை என்பதே யதார்த்தம். 

செந்தூரன் இறந்து இன்றுடன் ஒருவருடம் ஆகின்றது. அதற்கிடையில் அந்த இளம் மாணவனை தமிழ் மக்களாகிய நாங்களும் மறந்து விட்டோம். 

இன்னும் எத்தனை இளைஞர்களை விதைக்கப் போகிறோம்?

அடுத்த செந்தூரனின் நினைவு நாளுக்குள் ஆவது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒருங்கிணைந்த உபாயத்தை ஏற்படுத்தி அவர்களின் பூரண விடுதலையின் மூலம் செந்தூரனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக. 

நன்றி: newsetv