நிதானமடா...!

அஞ்சு வரியத்துக்கு ஒருக்கால்
கொஞ்சம் சுதந்திரம் தருவாங்கள். துள்ளிக்குதிப்பம். 
கொட்டடியிலயும், கோவிலடியிலயும் குந்திக்கொண்டிருக்கிற ஆமிக்காரன கிண்டலடிப்பம்.

அடுத்துவரும் ஆட்சியில கண்ணை மூடிக்கொண்டு ஆயிரக்கணக்கான பெடியங்கள இரவு - பகலா போட்டுத்தள்ளுவாங்கள். 
சுட்டுக்கொலை செய்தி போட 
எட்டுப் பக்கம் எக்ஸ்ராவா அடிப்பாங்கள் பேப்பர்க்காரர்.

அந்தப் பயத்தில இருக்கிற குஞ்சுகுறுமான் எல்லாம் வெளிநாட்டுககுப் தலைதெறிக்கும். அடுத்த அஞ்சு வருசத்தில பறந்துபோன குஞ்சுகுறுமான்களுக்குத் தேவையான மணமகள்களும் ப்ளைட் ஏறீடுவினம். 

அவைக்குப் பிறக்கிற பிள்ளையள் எந்தநாட்டுக்காரர்? விவாதங்கள் நடந்துகொண்டேயிருக்கு....!
முடிஞ்சபாடில்லை.

கிழக்க இழந்திட்டம்.
வடக்கில மட்டும்தான் இப்போதைக்கு வால் ஆட்டுறம். 
அதுவும் இன்னும் பத்து வருசத்தில மு ஆக்கள் எங்கள முந்திப்போடுவினம் எண்டு புள்ளிவிபர புத்தகங்கள் மிரட்டுது.

இங்க இருக்கிற ஆக்கள் பிள்ளையள் பெத்துக்கொள்றதிலயும் ஸ்ரைல் பாக்கினம். 
முதல் நாமிருவர் நமக்கிருவர் எண்டிச்சினம்.
இப்ப நாம் இருவர் நமக்கு ஒருவராம். 
போற போக்கில் நாமிருவர் நமக்கிடையில் எதுக்கு சிறுவர் என்கிற ஸ்ரைல் கூட நம்மவர் மத்தியில் பிரபலமகலாம். 
யார் கண்டது.....!ம்.

எனவே கொஞ்சம் நிதானமா நடந்துகொள்ளுங்கோடா...!
பெரும்பான்மைக்கு அடுத்த நிலையை இழந்தமெண்டால் எங்கட கதைய ஒருத்தனும் கேட்கமாட்டான்.

இயக்க காலத்தில் சுதந்திரமா இந்நாட்கள அனுஸ்டிச்சம். 
அப்ப ஒரு கனதி இருந்தத நாங்கள் உணர்ந்தம். 
இயக்கத்துக்கு பொருளாதார கஸ்ரம் வரும் காலத்தில் துயிலுமில்லங்களுக்கு வாகனம் விடாட்டியும்
கால்நடையிலயோ, கட்டவண்டிலிலயோ அஞ்சரைக்கு முதல் போய்ச்சேர்ந்தம். 

இப்பயும் அந்த நாட்களின்ர உணர்வ மறக்கமுடியாமல் இருக்கெல்லோ... !
அதுதான்...அதுவே தான் ..

மகிந்த காலத்தில பயந்து பயந்து விளக்கேத்தினம். 
இப்ப சுடுவானோ
அப்ப சுடுவானோ எண்டு முழுசி முழுசி பூ வைச்சம்.
சுற்றி வளைச்சி ஆமி நிக்க
அவன சுத்திப்போட்டு விளக்கேத்தினம்.
அடக்குமுறைக்கு எதிரான உணர்வ அந்த நாட்களிலதான் சரியா அனுபவிச்சம். மாவீரர் எழுச்சி வாரம் எண்டு இயக்கம் சொன்னதுக்கான முழு அனுபவத்தையும் மகிந்தவின்ர காலம் தான் தந்தது எண்டு நினைக்கிறன். 

அடக்குமுறைக்குள்ள இருந்து உடைச்சிக்கொண்டு வெளியில் வாறதுதானே எழுச்சி.

(இயக்கம் தீர்க்கதரிசனமில்லாமல் ஒரு வார்த்தையக் கூட பயன்படுத்தேல்ல எண்டுறார் நான் டைப்பண்ணிக்கொண்டிருக்கிறத பாத்துக்கொண்டிருக்கிற அப்பு).

சரி,

இந்த முற நமக்குள்ள என்ன உணர்வு இருக்கெண்டு சொல்லுங்கோ பாப்பம்?

என்னவோ....!
ஏழு நாள் திருவிழா
கடைசி 3 நாள் பாரண
ஏழாம் நாள் தேர் 
அதுக்குள்ள நாளைஞ்சு செல்பி
பேஸ்புக் லைக்
என்கிற நிலைய இந்த நாட்களுக்கு கொண்டு வந்திடாமல் பார்த்துகொண்டால் நல்லம்.

நினைவிருக்கட்டும் 
போரில் இறந்தவர்களுக்கான நினைவு நாள் அல்ல
#மாவீரர்எழுச்சிநாள்

நன்றி: ஜெரா-