நிதிமோசடிக் குற்றச்சாட்டு: நடவடிக்கை விரைவில் என்கிறார் பனை அபிவிருத்திச் சபை தலைவர்

நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதுடன் உரிய நடவடிக்கைகள் மிக விரைவில் எடுக்கப்படும் என்பதை பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் ஆர்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பனை அபிவிருத்திச் சபையில் இடம்பெற்ற 60 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பாகக் கடந்த வாரம் ஊடகங்களில் வெளியான செய்திக்கு விளக்கமளிக்கும் வகையிலும், மக்களைத் தெளிவுப்படுத்தும் வகையிலும் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு கூறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக நான் கடமையேற்று மூன்று மாதங்களான நிலையில் சபை மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டுக்கான வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 60 மில்லியன் நிதி மோசடிக்கு எமது சபையின் பதவி நிலை உத்தியோகஸ்தர்கள் சிலர் மீதும், வேறு சில பணியாளர்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அண்மைக் காலத்தில் ஊடகங்களில் வெளியாகியுள்ள பனை அபிவிருத்திச் சபையில் 60 மில்லியன் ரூபா நிதி மோசடி என்ற குற்றச் சாட்டுக்குப் பனை அபிவிருத்திச் சபையின் பொறுப்பு வாய்ந்த தலைவர் என்ற முறையில் ஊடகங்களுக்கும், மக்களுக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது.

ஒதுக்கப்பட்ட 60 மில்லியன் நிதியில் ரூபா 592,108.00 நிதிக்காகப் பொய்யான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச் சாட்டினை விசாரிப்பதற்காக அமைச்சின் செயலாளரால் ஒழுங்கு செய்யப்பட்ட விசாரணைக் குழுவினால் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்றது.

இவ்விசாரணைகளுக்கான உரிய அறிக்கையானது கேட்கப்பட்ட உரிய காலத்தில் கோப் குழுவிற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நான் பதவியேற்ற பின் இவ்விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதுடன் அந்த அறிக்கைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மிக விரைவிலேயே எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது இலங்கை அரசின் கீழ் எந்தவொரு நிர்வாக நடவடிக்கைக்கும் இலங்கை அரசாங்கத்தின் தாபன விதிக் கோவைக்கு அமைவாகச் செயற்படக் குறிப்பிட்ட ஒரு கால அவகாசம் தேவைப்படும்.

விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதற்குரிய காலம் தாழ்த்தலானது மோசடிகளை ஆதரிக்கின்றோம் என்றோ அல்லது அழுத்தங்கள், அச்சுறுத்தல்களுக்குப் பயந்து மக்களிடமிருந்து உண்மையினை மறைத்து அமைதி காக்கின்றோம் என்றோ தவறான முறையில் சித்தரிக்கப்படத் தேவையில்லை என்பதை மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்கின்றேன் என அறிக்கையில் கூறப்படுகின்றது.

மேலும், எமது நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் ஒரு போதும் ஊழல் மோசடிகளுக்கு இடம் தராமல் பொறுப்பான தலைவர் என்ற ரீதியில் நானும், எமது அமைச்சும் எப்பொழுதும் இயங்கும் என்பதில் எமது மக்களுக்கு எந்த விதச் சந்தேகங்களும் இருக்க வேண்டாம் என்பதையும் அழுத்தமாகச் சொல்லிக் கொள்கின்றேன். என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி: 

பனை அபிவிருத்திச்சபையில் பாரிய ஊழல் மோசடி! 60 மில்லியன் ரூபாய்கள் பணத்தை ஆட்டையப் போட்ட ஐவர்! (Photos)