கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலும் இல்ல துப்பரவுப் பணியில் மக்கள்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலும் இல்லத்தில் இன்று  வெள்ளிக்கிழமை 25-11-2016 சிரமதானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

காலை ஏழு மணி முதல் நண்பகல் வரை இந்த சிரமதானம் இடம்பெற்றுள்ளது. சில மாதங்களுக்கு  முன் துயிலுமில்லத்தில் இருந்த படையினா் அந்த இடத்தை விட்டு வெளியேறிய பின்னா்  குறித்த காணி பற்றைகளால்  சூழப்பட்டு குறிப்பாக எருக்கன் செடிகளால் நிறைந்து காணப்பட்டது. அங்கு இருந்த கல்லறைகள் மற்றும் நினைவுக்கல் என்பன படையினரால் இடித்து ஒதுக்கப்பட்டும் காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்  கரைச்சி பிரதேச சபையில் ஆளும் கட்சி பிரதேச சபை உறுப்பினராக இருந்த ஒருவா் மாவீரா் துயிலுமில்லத்தில் சிரமதானம் செய்ய வேண்டும் என்று  தீர்மானம் கொண்டு வந்த மறுநாள் படையினா் துயிலுமில்ல காணியை பிடித்து இரண்டு அடுக்கு முட்கம்பி வேலிகள் அமைத்து கடந்த ஒரு சில மாதங்கள் முன் வரை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனா்.

தற்போது படையினா் வெளியேறி பின்னா் இந்த சிரமதானப் பணிகள் இடம்பெற்றுள்ளது. இதன் போது நூற்றுக்கணக்கானவா்கள கலந்து கொண்டு உணா்வுபூா்வமாக  துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்தனா். எவ்வித அசம்பாவிதங்ளோ, நெருக்கடிகளோ இன்றி சிரமதான பணிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.