யாழ். பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒலித்தது விடுதலைப்புலிகளின் புரட்சிப்பாடல்! (Video)

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று 21.11.2016 திங்கள் கிழமை இரவிலிருந்து அதிகாலை வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் புரட்சிப்பாடல்கள் ஒலித்து ஓய்ந்துள்ளன. 

தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல் நேற்று நவம்பர் 21 இல் ஆரம்பித்த வேளையில், யாழ். பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் இந்த புரட்சிப்பாடல்கள் ஒலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்தச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, 

பருத்தித்துறை இன்பசிட்டி பகுதியில் கடல் தொழிலுக்கு செல்லும் இளைஞர்கள் சிலர் தொழில் முடித்து மாலை 6.00 மணியிலிருந்து இரவு 8.00 மணிவரை இன்பசிட்டி மீனவர் சங்க கட்டடத்தில் தொழில் மற்றும் பலதரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் கூடிப்பேசி பொழுதுபோக்குவது வழமையானது. 

இந்தநிலையில் நேற்று திங்கள் கிழமை இரவு 7.00 மணியளவில் அவ்விடத்துக்கு சென்ற பருத்தித்துறை பொலிஸார், அந்த கட்டடத்தில் கூடியிருந்த இளைஞர்கள் எட்டு பேரை ஜீப்பில் தூக்கி போட்டுக்கொண்டு வந்து பொலிஸ் நிலையத்தில் அடைத்துள்ளனர். 

குறித்த இளைஞர்கள், ‘தம்மை தூக்கி வந்து அடைத்து வைத்துள்ளமைக்கான காரணத்தை’ கேட்டபோது, பொலிஸார் அதற்கு சரியான பதிலோ, விளக்கமோ கூறவில்லை. 

இதனால் கடுப்படைந்த இளைஞர்கள், ‘எங்களை தூக்கி வந்து வீட்டில நிம்மதியை கெடுத்திட்டியள். உதுக்காக உங்களையும் நாங்கள் இன்றிரவு நிம்மதியா நித்திரை கொள்ள விடப்போறதில்லை’ என்று பொலிஸாரைப் பார்த்துக் கூறிவிட்டு, 

அங்கிருந்த சாப்பாட்டு கோப்பைகள், தேநீர் தம்ளர்கள், இரும்புக் கம்பிகளில் தாளம் தட்டி விடிய விடிய தமிழீழ விடுதலைப்புலிகளின் புரட்சிப் பாடல்களை சத்தமாகப் பாடி பாட்டுக்கச்சேரி நடத்தி பொலிஸ் நிலையத்தை அதகளப்படுத்தியுள்ளனர். 

பாடல்களுக்கு இடையே, அங்கிருந்த சார்ஜன்ட் தர அதிகாரியை அடிக்கடி பெயர் சொல்லிக் கூப்பிட்டு, ‘சார்ஜன்ட் சேர்… வருவான்டா பிரபாகரன் மறுபடியும், அப்போது உங்களின்ட எலும்பு முறியும்’ என்றெல்லாம் கிண்டலடித்து வெறுப்பேற்றியுள்ளனர். 

அப்போது அந்த சார்ஜன்ட் தர அதிகாரி, ‘பிரபாகரன் நல்லம். மகிந்த ராஜபக்ஸ நல்லம். மைத்திரி தான் தமிழனுக்கு நல்லா சூ.. கொடுக்கிறார்’ என்று கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார். 

அதற்கும் அசராத இளைஞர்கள், ‘சார்ஜன்ட் சேர்… கோபம் வேணாம். கூல் கூல்… நவம்பர் 26 தலைவரின்ட பேர்த் டே. சுவீட் எடு கொண்டாடு. உங்களுக்கும் சுவீட் தரட்டா?’ என்று கேட்டு தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் பாடல்களையும் சத்தமாக பாடியுள்ளனர். 

விடிய விடிய விடுதலைப்புலிகளின் புரட்சிப் பாடல்களால் காது ஜவ்வு கிழிந்து போன பொலிஸார், இளைஞர்களின் அலப்பறை தாங்க முடியாமல், ‘அப்பாடா… முடியலடா சாமி…’ என்று விடிந்ததும் விடியாததுமாய் முதல் வேலையாய் இளைஞர்களை அடைத்து வைத்திருந்த லாக்கப்பை துறந்து ‘ஓடித்துலையுங்கோடா’ என்று துரத்திக் கலைத்துள்ளனர்.