கள்ளுத்தவறணை கந்தையா அண்ணையும், ஆங்கில பத்திரிகை 'இக்பால் அத்தாஸ்' உம் (Photos)

எது அபத்தம்?

முகப்புத்தகத்தில் எழுதுபவர்கள் எல்லாம் "கத்துக்குட்டிகள்" என்றும் "சின்னப்பொடியள்" எண்டும் ஒரு சிலர் நினைச்சுக்கொண்டிருக்கினம்.

முகப்புத்தகத்தை "குப்பைத்தொட்டி" என்றும் "கக்கூசு" என்றும் கனபேர் திட்டுகினம்.

ஆனால்;

முகப்புத்தகம் என்பது நவீன தொழில்நுட்ப ஊடகவியல் தளத்தில் ஒரு புதிய வெளியை திறந்துவிட்டிருக்கிறது என்பது உண்மை.

அது ஆரோக்கியமானதா? இல்லையா? என்ற கேள்விதான் அபத்தமானது.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு மிகச்சிறிய அங்கமே இந்த "சமூக வலைத்தளங்கள்".

"ஸ்மார்ட்" தொலைபேசியை வைத்திருக்கும் எவனுக்கும் "பேஸ்புக்கை" திட்டும் அருகதை இல்லை.

எல்லாவிதமான நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன்களையும் அன்றாடம் அனுபவித்துவிட்டு; 

குணா கமலின் பாணியில் ..

"அபிராமி அசிங்கம்"

"பேஸ்புக் அசிங்கம்" என்று புறுபுறுப்பதே "அசிங்கம்".

ஊரில் வாசிகசாலையில் "உதயன்" பேப்பரை படித்துவிட்டு முகப்புத்தகத்தில் அரசியல் கருத்துக்கூறும் வைரமுத்து அண்ணையின் ஒரு சில வரிகள்;

பிரபல அரசியல் ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் "முக்கி முக்கி" ஆங்கிலத்தில் எழுதும் அரசியல் கட்டுரையை விட கனதியானதாகவும் சிலவேளைகளில் இருக்கும்.

"அஞ்சாம் வகுப்பு படிக்காத நீயெல்லாம் கருத்து கூற வந்திட்டியா?" என்று வைரமுத்து அண்ணையை பாத்து கேட்பதுதான் அபத்தம்!

பச்சையாக சொன்னால்...

முகப்புத்தகத்தில் போடும் குறும் பதிவுகள்(posts) தான் இன்றைய அரசியல் பத்தி எழுதுபவர்களின் "கருவாக" இருக்கிறது.

"இல்லை" என்று எவராவது உங்கள் தலையில் அடிச்சு சத்தியம் செய்ய முடியுமா?

ஒரு சில சினிமாக்களின் "கதைக்கரு" முகப்புத்தக "குறும் கதைகளில்" இருந்துதான் உருவாகிறது.

இன்று வெளியாகும் பல "நாவல்கள்","புத்தகங்கள்" என்பவற்றின் "கதைக்கருக்கள்" ...

நீங்கள் சொல்லும் முகப்புத்தகம் எனும் "குப்பையில்(?)" இருந்துதான் பொறுக்கப்பட்டவை என்பது உங்கள் எத்தனைபேருக்குத்தெரியும்????

முகப்புத்தகத்தில் "கிறுக்கப்படும் சொற்கள்"தான் ஒரு சிலரின் "கவிதைகளின் வரிகள்" என்பதும் உங்களின் எத்தனை பேருக்கய்யா தெரியும்?

இன்று தென்னிந்திய தமிழ் சினிமாவில் "பட்டையை கிழப்பும் பாடல்வரிகள்"

பல "முகப்புத்தகத்தில்" யாரோ ஒரு சுப்பனோ குப்பனோ எழுதிய "கிறுக்கலில்" இருந்து "கெளரவமாக" களவாடப்பட்டவைதான்.

அரடியல் பத்தி ஒன்றை "முக்கி முக்கி " எழுதி அதை பத்திரிகையில் போட்டால் அது மக்களை சென்றடையும் வேகத்தையும், அளவையும் விட ;

"சமூக வலைத்தளங்களில்" பதிவேற்றுவதால் கிடைக்கும் "தாக்கம்" அதிகம்.

ஆகவே என்னதான் பெரிய "சண்டியன்" எண்டாலும்;

சலூன் கடையில "தலை குனிஞ்சுதான்" இருக்கவேணும்.

"வெள்ளித்திரையில் கலக்கினாலும் கடைசியா சின்னத்திரைக்கு வந்துதான் ஆகவேணும்" அதுபோல என்னதான் பெரிய ஊடகபலமும் புகழும் இருந்தாலும்;

"முகப்புத்தகம்" எனும் "மினி பஸ்ஸில" ஏறித்தான் ஆகவேணும்!

அங்கே நடக்கும் "கூச்சல் குழப்பங்களை" பொறுத்துத்தான் ஆகவேணும்!

இதில ஒரு "யதார்த்தம்" என்னண்டா;

முகப்புத்தகம் என்பது ஒரு " மீன் சந்தை" எண்டு வைச்சால்;

தங்களை "எழுத்தாளர்கள்" ,"கவிஞர்கள்",

"ஆய்வாளர்கள்" என கெளரவமாக அடையாளப்படுத்துபவர்கள் ;

கோட்டுச்சூட்டுப்போட்டு "மீன்சந்தையில் " மீன் விற்பவர்களைப்போன்றவர்கள்!!!

வித்துப்போட்டு போனால் பிரச்சினையில்லை! 

கிழிஞ்ச சீலையோட , அழுக்கான சேட்டுடன் மீன் விற்கும் மற்றவர்களை பாத்து "அருவருப்பதும்" "நக்கலடிப்பதும்" தான் அபத்தம்!

"நவ்வி வீழ்ந்து என

நாடக மயில் துயின்று என்ன 

கவ்வை கூர்தரச் சனகியாம் 

கடிகமழ் கமலத்து 

அவ்வை நீங்கும் என்று அயோத்திவந்து 

அடைந்த அம்மடந்தை 

தவ்வை யாம்எனக் கிடந்தனள் 

கேகயன் தனயை"

இது ஒரு கவிதை!!

இதன் விளக்கம் என்ன எண்டு எம்மில் எத்தனைபேருக்குத்தெரியும்?

கம்பன் கழக "ஜெயராஜ்" ஐயாவிடம் போய்க்கேட்டால் அருமையாக விளக்கம் சொல்லுவார்.

"தேன் கூட்டப் பிச்சி பிச்சி

எச்சி வெக்க லட்சியமா? அஹா ஓ

காதல் என்ன கட்சி விட்டுக்

கட்சி மாறும் காரியமா? ஓ ஓ

பொண்ணு சொன்ன தலகீழா

ஒக்கிப்போட முடியுமா? அஹா ஓ

நான் நடக்கும் நிழலுக்குள்ள

நீ வசிக்க சம்மதமா?.."

இதுவும் ஒரு கவிதைதான்!


"தங்க மாரி ஊதாரி பூத்துக் கீண னி நாறி

ரூட் எட்டு கூட போட்டேன் கொடு மேல ரோடு போட்டேன்

ரோடு மேல ஆட்டம் போட்டேன் ஆட்டம் போட்டு ஆள போட்டேன்

ஐயிக்கு மூட்ட மீனாக்ஷி மூஞ்ச கழுவி நாளாச்சி

ஊத்த பல்ல வெளக்காம சோத்த தின்ன காமாச்சி

இவனு கிட்ட மாட்டிக் கிண்ண நின்னுடும்டா உன் மூச்சி"

இதுவும் ஒரு கவிதைதான்!

முதலாவது கவிதை "கம்பன்"

இரண்டாவது கவிதை "வைரமுத்து"

மூன்றாவது கவிதை "ரோகேஸ்"

இந்த மூன்று கவிதைகளையும் ஒன்றோடொன்று "ஒப்பிடுவதுதான்" அபத்தம்!

அதைவிட அபத்தம்...

ஒருசிலர் மூன்றாவதையை "கவிதையாகவே" ஏற்றுக்கொள்ளாமல் அடம்பிடிப்பதுதான்!

முந்தியெல்லாம் ஒருவரின் "எழுத்தாற்றல்" வெளிவருவது என்பது மிகக்கடினமே!

அதனால்த்தான் கண்ணதாசன், வாலி, வைரமுத்து என ஒரு சிலரே அந்தக்காலத்தில் இருந்தார்கள்.

இன்று "முகப்புத்தகத்தில்" ஆயிரக்கணக்கில் "கவிஞர்கள்" இருக்கிறார்கள்.அவர்களின் எழுத்தும் யாரோ ஒருவாரால் "கவிதை" என்றே பாராட்டப்படுகிறது.

"ஆர்மோனியப்பெட்டியோடு" இளையராஜா இருக்கமுடியாது.

"Auto tune" எனப்படும் இசை மென்பொருளை அவர் கற்கமறுத்தால் "அனிருத்" இக்குப்பின்னால் வரிசையில் அவர் நிற்கவேண்டியதுதான்.

இளைராஜாவின் இசையோடு அனிருத்தின் இசையை ஒப்பிடுவதுதான் அபத்தம்!

"சின்னக்குயில் சித்திராவை" அறியாதவர்கள் கூட "கல்பனா அக்காவை" அறிந்திருக்கிறார்கள்.

கல்பனா அக்காவை சித்திராவுடன் ஒப்பிடுவதுதான் அபத்தம்!

முகப்புத்தகம் என்பது ஒரு "திறந்தவெளி மேடையை"எல்லோருக்கும் தந்திருக்கிறது.

இதில் "தவில்" வாசிப்பவன் பெரிது.

"பறைமேளம்" அடிப்பவன் சிறிது என சொல்வதுதான் அபத்தம்!

அந்தக்காலத்தில் ஒரு அஞ்சாறு புத்தகம் எழுதி வெளியிட்டால்த்தான் அவன் "எழுத்தாளன்" என்று சமுகத்தில் அடையாளம் காணப்பட்டான்.

இன்று அஞ்சாறு பதிவுகள் எழுதி அதுக்கு ஆயிரம் "லைக்" வாங்கினால் அவனும் "எழுத்தாளன்" ஆகிவிடுகிறான்.

"அது எப்படி புத்தகம் எழுதுறவனையும் சும்மா நாலைஞ்சு பதிவு எழுதுறவனையும் எழுத்தாளன் என்ற ஒரே பட்டியலில் சேர்ப்பது?" என கேட்பதுதான் அபத்தம்!

கள்ளுத்தவறணையில் கள் அடிச்சுப்போட்டு கந்தையா அண்ணை வெறியில் சொல்லும் "அரசியல்" கருத்துக்கள் ....

ஆங்கில பத்திரிகையில் "இக்பால் அத்தாஸ்" எழுதும் அரசியல் பத்தி சொல்லும் கருத்துக்களை விட ...

கனதியாகவும் கருத்தாகவும் யதார்த்தமானதாகவும் இருக்கலாம்!!

கந்தையா அண்ணையை இக்பால் அத்தாஸுடன் ஒப்பிடுவதுதான் அபத்தம்!

எனவே 

"இதுதான் கவிதை"

"இதுதான் கதை"

"இதுதான் நாவல்"

"இதுதான் அரசியல் பத்தி"

"இதுதான் இசை"

என்ற "வரைவிலக்கணங்களை" உடைத்தெறிந்து "நவீன உலகம்" பயணிக்கிறது.

இந்த உண்மையை புரிந்துகொண்டு எல்லாவற்றையும் "ரசிக்க" கற்றுக்கொள்ளுங்கள்.

"ரசிக்காவிட்டாலும்" பரவாயில்லை...

"பேஸ்புக்" கவிஞர்கள்

"பேஸ்புக்" அரசியல் ஆய்வாளர்

"பேஸ்புக்" பாடகர்

"பேஸ்புக்" எழுத்தாளர்

"பேஸ்புக்" போராளி என

நக்கலடிக்காதீர்கள்!!!

"வைரமுத்துவின்" கைகளிலும் "ஸ்மார்ட் போன்" இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்!!!

கண்ணதாசன் இன்று உயிரோடு இருந்திருந்தால் "பேஸ்புக்"இல் தானும் கவிதைகள் எழுதி போட்டு "நாலஞ்சு லைக்" வாங்கியிருப்பார்!

ஆக;

"Drums" சிவமணியின் இசையைவிட "நெஸ்ரோமோல்ட்" பேணியில் உங்கட பிள்ளை அடிக்கும் இசையை ரசிக்கிறியள்!

ஆனால் அதை மற்றவர்களின் பிள்ளைகள் செய்யும் போது "கடுப்பாகிறியள்"!

இதுவே அபத்தம்!!!

நன்றி: தமிழ்ப்பொடியன்