அரச அதிபருக்கு இயலாமல் உள்ளது! சாரதிகள் வேகமாக ஓட்டுகிறார்கள்! நடந்தது என்ன?

இன்று(03.02.2016) பி.ப 12.50 மணியளவில்யாழ்ப்பாணம் பலாலி வீதி திருநெல்வேலி பகுதியில் பாரிய விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புன்னாலைக்கட்டுவானில் இருந்து யாழ்.நகர் நோக்கி பலாலி வீதி வழியாக சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் போட்டி போட்டு அசுர வேகமாக சென்று கொண்டிருந்த வேளை திருநெல்வேலி சந்திக்கும் , தபால்பெட்டிச்சந்திக்கும் இடையில் இலங்கை போக்குவரத்து சபை  பேருந்தை தனியார் பேருந்து அதே அசுர வேகத்துடன் முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

தனியார் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்தது. பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியை மோதித்தள்ளியது. தொடர்ந்து பல வங்கிகள் அமைந்துள்ள கட்டிடத்தொகுதியின் வாகனத்தரிப்பிடத்தில் நின்ற பல மோட்டார் சைக்கிள்களை மோதி நொருக்கி, பின்பு உயரமான உலோக மின்கம்பம் ஒன்றை அடித்து விழுத்தி, என்.டி.பி வங்கியின் கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள ஏ.ரி.எம் இயந்திர அறையை மோதி நொருக்கி ஓய்வுக்கு வந்தது. குறிப்பிட்ட பகுதிகளில் நின்ற மக்கள் விலகி ஓடியதால் தப்பினர்.

ஆனால் மோதுண்ட முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்தனர்.அவர்கள் யாழ்.போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் பயணித்த பாடசாலை மாணவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து சம்பவத்தில் , கொக்குவிலை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான மகாதேவன் வசந்தரூபன் (32) , முச்சக்கர வண்டியில் பயணித்த hபார்த்தீபன் தம்சா (வயது 34) , அவரது மகனான பார்த்தீபன் சுகத்திரியன் (வயது 5) ஆகியோரே காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.ஏனையோருக்கு பெருமளவான பொருட்செலவு ஏற்பட்டு உள்ளது

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தாமதமாகவே கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தனியார் பேருந்து சாரதியை கைது செய்தததுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான அத்து மீறிய சம்பவங்கள் பல கடந்த சில வருடங்களாக யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றன. அதற்கான காரணங்கள் தொடர்பில் பின்வரும் விடயங்கள் உடன் அவசியமாக கவனிக்கப்படவேண்டும்.

 

1. தனியார் பேரூந்து சேவையினர் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகிய இரு தரப்பினரும் தாமாகவே கலந்துரையாடி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சேவை நேரங்களை நிர்ணயிக்காமல் விசமத்தனமான போட்டியில் ஈடுபட்டுள்ளனர். மக்களுக்கு உயிர் ஆபத்துக்களையும் ஊனப்படுத்தலையும் உருவாக்குகின்றனர். இதற்கு சம்பந்தப்படும் சாரதிகள்இ நடத்துனர்கள் மட்டுமல்ல தனியார் பேரூந்து சேவையினர் சங்கம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை நிர்வாகம் ஆகிய இரு தரப்பின் உயர் நிலை நிர்வாகிகளும் பொறுப்பாகும். சட்டப்படி இவர்களும் குற்றம்சாட்டப்படவேண்டியவர்கள்.

2.சிவில் நிர்வாகத்திற்கு பொறுப்பான யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தனியார் பேரூந்து சேவையினர் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகிய இரு தரப்பினரையும் ஒழுங்குக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய நிர்வாக ஆற்றல் அற்றவராக காணப்படுகின்றார். அவ்வப்போது சில கூட்டங்களை தனியார் பேரூந்து சேவையினர் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகிய இரு தரப்பினரையும் கூட்டி நடத்திவிட்டு களைத்துவிடுகிறார். இருதரப்பு முரண்பாடு பொது மக்களின் உயிரைக்குடிக்கும் நிலைக்கு முன்னரே வந்திருந்த பின்னரும் அவர் உரிய சட்ட, நிர்வாக முறைமைகளினூடாக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அறத்தின்படி இவரும் குற்றம்சாட்டப்படவேண்டியவரே.

3.யாழ். நகரிலிருந்து செல்லும் பருத்தித்துறை வீதி, பலாலி வீதி , கே.கே.எஸ் வீதி, மானிப்பாய் வீதி ஆகியன போக்குவரத்து நெருக்கடிமிக்க வீதிகளாகும். ஆனால் போக்குவரத்துப் பொலிசாரில் பலர் (ஒரு சில நேர்மையானவர் உண்டு) இலஞ்சப்பணத்தை உருவும் நோக்குடன் செயற்படுவதால் பிரதான வீதி ஒழுங்கைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடாமல் எங்காவது குச்சொழுங்கைகள் உபவீதி முடக்குகளில் லைசன்ஸ், இன்சூரன்ஸ், ரக்ஸ் முதலிய ஆவணங்களை பரிசீலிப்பதில் ஈடுபட்டு, அவற்றைக் கொண்டிராதவர்களிடம் ‘கிம்பளம்‘ வாங்குகின்றனர். (ஒரு சில நேர்மையானவர்களும் உண்டு).ஏனைய நேரங்களில் தமது கைத்தொலைபேசிகளுடன் நேரம் போக்குவர். காலையில் மட்டும் வாகன ஒழுங்கைக் கவனிப்பர். திருநெல்வேலி, பரமேஸ்வராச்சந்திகளில் அதுவும் இல்லை.

4.பொதுவாக வீதிப்போக்குவரத்து விடயங்களில் மட்டுமல்ல மதுக்கடைகளுக்கான அனுமதி, மதுபாவனைக்கட்டுப்பாடு, போதைப்பொருள் ஒழிப்பு முதலிய விடயங்களிலும் பொலிசாரும்இமதுவரித்திணைக்களத்தினரும் ஊழல், மோசடிக்காரர்களாகவே உள்ளனர். (ஒரு சில நேர்மையானவர்களும் உண்டு)

5.சிவில் நிர்வாகத்திற்கு பொறுப்பான  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் சம்பந்தப்பட்ட தரப்பினரை ஒழுங்குக்கட்டுப்பாட்டுக்குள்

கொண்டுவரக்கூடிய நிர்வாக ஆற்றல் அற்றவராக காணப்படுகின்றார். அவ்வப்போது சில கூட்டங்களை நடத்திவிட்டு களைத்துவிடுகிறார்.

6.தொடர்ச்சியான மது பாவனைஇ போதைப்பொருள் பாவனை சாரதிகளின் நரம்புத்தொகுதியைப்பாதிப்பதால் அவர்கள் முரட்டுத்தனமான அல்லது அக்கறையீனமான சாரதிகளாக மாறிவிடுகிறார்கள். பொதுமக்களின் உயிருக்கும் அங்கங்களுக்கும் உடைமைகளுக்கும் உலை வைக்கிறார்கள். .(விபத்து வேளையில் அவர்கள் போதையில் இல்லாமல் இருக்கலாம்.ஏற்கனவே அவர்கள் நரம்புத்தொகுதிப் பாதிப்பில் இருப்பர்.பொதுவாக போதைப்பிரியர்கள் உள,உடல் ஆரோக்கியம் இழந்திருப்பர்)

7.விதிகளை மீறிச் செயற்படும் சாரதிகளும் கொலைகாரர் ஆகிவிடுவர்

8.சிவில் நிர்வாகப் பலவீனம்இ சிவில் நிர்வாக மோசடிகள், சீரழிவு, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு. ஊழல்-மோசடி நிறைந்த பொலீஸ் (ஒரு சில நேர்மையானவர்களும் உண்டு)இஒழுக்கம் கெடும் சமூக நிலைமைகளுக்குக் காரணமாகின்றன.இதனால் ஒழுக்கம் இழந்த சட்டவிரோத தலைமைகள் மற்றும் நிர்வாகிகள் சமூகம் எல்லாத்துறைகளிலும் {ஜனநாயகத்தேர்தல் துரை(றை)கள் உட்பட} யாழ்ப்பாணத்தில் உருவாகிவருகிறது. (ஒரு சில நேர்மையானவர்களும் உண்டு)

9.வீதிவிபத்துக்களுக்கும் சிவில் நிர்வாகப் பலவீனம், சிவில் நிர்வாக மோசடிகள், சீரழிவு, சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு. ஊழல்-மோசடி நிறைந்த பொலீஸ் ஆகியவற்றுக்கும் நேரடித்தொடர்புகள் உண்டு.

10.யாழ்ப்பாணத்தின் அனைத்து அறநெறிப் பிறழ்ச்சிகளுக்கும் அத்துமீறல்களுக்கும் சட்டவிரோத அநியாயங்களுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசாங்க அதிபர்இ பொலிஸ் அதிகாரிகள்இ மதுவரித்திணைக்கள அதிகாரிகள், இலங்கைப் போக்குவரத்துச் சபை அதிகாரிகள், தனியார் போக்குவரத்துச் சங்கத்தினர் அனைவரும் பொறுப்பாளிகள் ஆவர்.

11.என்ன சொல்கிறோம் என்பது அவர்களுக்கும் எங்கள் மக்களுக்கும் விளங்கி நிலைமை உரிய சமூக, சட்ட, நிர்வாகச் செயன்முறைமைகளுக்கூடாக திருத்தப்படாவிட்டால் மீண்டும் மீண்டும் சிவில் நிர்வாகப் பலவீனம், சிவில் நிர்வாக மோசடிகள், சீரழிவு, சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு இரட்டிப்பாகும். ஊழல்- மோசடி நிறைந்த பொலீஸ், மதுவரி அதிகாரிகள் காட்டாட்சிக்கு வித்திடுவர். ஒழுக்கம் கெடும் சமூக நிலைமைகள் பல்கிப்பெருகும். இதனால் ஒழுக்கம் இழந்த சட்டவிரோத தலைமைகள் மற்றும் நிர்வாகிகள் -சமூகம் எல்லாத்துறைகளிலும் {ஜனநாயகத்தேர்தல் துரை(றை)கள் உட்பட} யாழ்ப்பாணத்தில் உருவாகுவர். தமிழர்களின் பண்பாட்டுத்தொட்டில் எனப்படும் யாழ்ப்பாணக்குடாநாடு குற்றவாளிகளின் கூடாரமாகும். அந்நிலைமை உருவாக அனுமதிக்கக்கூடாது.

12.எங்கள் மக்களின் நல்வாழ்வுக்காக நேர்மையாகப் ‘பாடுகள்படும்‘ அனைவரும் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் ஒன்றிணைந்து இவற்றைச் சீர்திருத்த உடன் முன்வருவார்களா?

திருநெல்வேலியான்