வடமாகாண எதிர்க் கட்சித்தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டாரா தவராசா?

வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து சின்னத்துரை தவராசா நீக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அவருக்குப் பதிலாக ஈபிடிபியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் தவநாதன், எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

எனினும்,மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம், பிரதி நிதித்துவம் செய்யும் கட்சிக்கு இல்லை என்றும், அதனை வடமாகாணசபையின் அவைத்தலைவரே முடிவு செய்ய  முடியும் என்றும், முன்னர் ஒரு செவ்வியில் தவராசா கூறியிருந்தார்.

முறைப்படி தம்மை கட்சி அணுகியிருந்தால், தாம் பதவியை விட்டு விலகியிருப்பேன் என்றும், முறை கேடாக அணுகியதால் அவ்வாறு செய்யப் போவதில்லை என்றும், அவர் அந்தச் செவ்வியில் குறிப்பிட்டி ருந்தார்.

அதேவேளை, தவராசா எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகாவிடின், கட்சியை விட்டு அவர் வெளியேற்றப்படுவார் என்று ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேற்று எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வடமாகாண எதிர்க் கட்சித்தலைவர் தவராசாவை அப்பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படாது என வடமாகாண ஆளுநருக்கு வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் அவர்கள் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.